கதிரவன் எனும் கதாநாயகன்!

கதிரவன் எனும் கதாநாயகன்!
Published on

நம் கதாநாயகனின் முக்கியத்துவம்:-

பொங்கல் விழாவின் கதாநாயகன் மட்டுமல்ல; உலகத்தில் முதல் வழிபடும் தெய்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருமை சூரியனுக்கே உரித்தானது.

கதிரவன் இன்றி இவ்வுலகில் நாம் என்று இல்லை; எந்த உயிரினமாவது வாழ இயலுமா? கற்பனையில் கூட ‘முடியுமென’ எண்ண இயலாது.

வாழ்வுக்கும் – தாழ்வுக்கும்; ஆக்கலுக்கும் – அழித்தலுக்கும் எந்தச் சக்தி அடிப்படையில் ஆணி வேரென அமைகிறதோ, அதனை நம் முன்னோர்கள் கடவுளாக எண்ணி வழிபட்டதில் ஆச்சரியமில்லை. இத்தகைய உயர்ந்த மரபு தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமல்ல;

*சுவீடன் நாட்டில் சூரியனை வழிபடும் வழக்கம் உள்ளது.

*ஜப்பான் நாட்டு தேசியச் சின்னம் கதிரவன். (சூரியன்)

*ரோமாபுரியில் சூரியன் பெயரால் ஒரு காவியமே இருக்கிறது.

*கிரேக்க நாட்டில் வழிபடும் தெய்வம் ஜீயஸ் என்கிற சூரியன்.

சூரிய பகவான் ஒன்பதாவது ராசியான தனுசு ராசியிலிருந்து பத்தாவது ராசியான மகரத்துக்குள் பிரவேசிக்கும் நாள்தான் மகர சங்கராந்தியாக, நமது முன்னோர்களால் கொண்டாடப்பட்டது. தை மாத முதல் நாளான அன்று முதல், வட திசை நோக்கி சூரியனின் பயணம் ஆரம்பமாகிறது. இதுவே உத்தராயணமாகும். தை முதல் ஆனி மாதம் வரை ஆறு மாத காலம் இப்பயணம் தொடரும். இந்தக் கால கட்டத்தில் பகல் பொழுது அதிகமாகவும், இரவுப்பொழுது குறைவாகவும் இருக்கும்.

பகலவன்; கதிரவன்; ஞாயிறு என்று அனைவரும் போற்றிப் பாடுவது எல்லாமே சூரியனைத்தான். வேதம்; இதிகாசம்; உபநிடதம்; புராணங்கள்; கவிதை, இலக்கியம்; காப்பியம்; கதை ஆகிய எல்லாவற்றிலும் சூரியனின் பெருமை பேசப்படுகிறது.

பூமியிலிருந்து மை தடவிய கண்ணாடி வழியே பார்த்தால் தெரிவது போல, பனங்காய் அளவு அல்ல சூரியன்; சூரியன் பிரம்மாண்டமானது. மனிதனை பிரமிக்க வைக்கக் கூடியது. சூரியனின் விட்டம் 864000 மைல்கள் எனக் கணக்கிட்டுள்ளார்கள்.

வட்ட வடிவமான இதன் ஒரு முனையிலிருந்து, மத்திய குறுக்கு ரேகை வழியாகப் பிரயாணம் செய்தால் (மணிக்கு நூறு மைல் வேகம்), எதிர் முனையை அடைய 23 ஆண்டு, 8 மாதங்கள், 5 நாட்கள் அல்லது 8640 நாட்கள் ஆகும்.

சூரியனால் கிடைக்கும் நற்பலன்கள் அதிகம். இரவு – பகல்; மழை – வெயில்; செடி – கொடி; பயிர் – பச்சை; உயிர் – வாழ்வு; விலங்குகள் – பறவைகள், ஊட்டச் சத்துகள் என பலவகையான நல்ல பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்தையும் கொடுத்து சூரியனைப் பாராட்டி, அவனுக்குப் படைத்து நன்றியைத் தெரிவிக்கும் நன்னாள்தான் பொங்கல் திருநாளாகும்.

இப்போது சொல்லுங்கள் கதிரவன் நம் கதாநாயகன்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com