0,00 INR

No products in the cart.

​அனுஷ்டானம் செய்வது கடமையா?

கேள்வி நேரம்

– ஞானகுரு

அனுஷ்டானம் செய்வது ஒவ்வொருவரின் கடமை என்று கூறுவது உண்மையா?

சி.மகேந்திரன், வந்தவாசி

அனுஷ்டானம் என்பது காலை, மாலை நம் உடல் சார்ந்த வழிபாடு என்றும் காலை, மாலைக்கடன், பகவானை நமது உள்ளத்தில் நிலை நிறுத்துதல் மற்றும்
கை கொள்ளுதல் என்ற பொருட்களை வடசொல் மற்றும் தமிழ் அகர வரிசை சொல்கிறது.

கிரியை விதியைப் பின்பற்றி இறை வழிபாட்டை மேற்கொள்பவர் அகப்புறத் தூய்மையோடு தனது குருநாதரிடம் உபதேசமாகப் பெற்றுள்ள மந்திரத்தை விதிப்படி திருநீறணிந்து காலை, மாலை ஆகிய இரு பொழுதிலோ காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று பொழுதுகளிலோ நீங்கள் எந்த மந்திரத்தைக் கூற வேண்டுமோ அதனை 108, 300, 500, 700, 1000 ஆகிய எண்ணிக்கையில் சொல்லுதல் ஆகிறது.

மந்திரத்தைக் கைக்கொண்டு ஜபம் செய்து இறையாற்றலைத் தன்னுள் நிலைநிறுத்தும் முறையான செயலையே அனுஷ்டானம் என்பர் பெரியோர்.

புரிகாலே நேசஞ் செய்ய விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே!’

என்று தேவாரத் திருப்பதிகங்களில் இறைவனை உள்ளத்தில் உறையச் செய்திட அனுஷ்டானம் என்னும் பூஜைக்கான அருகதை வேண்டும் என்றும், அதைக் கடமையாகக் கருதலாம் எனவும் சொல்லப்பட்டன.

இப்போதெல்லாம் அதிகமாகப் பெண்கள் குங்குமம் மற்றும் மஞ்சளோடு விபூதியையும் அதிகமாகப் பூசிக்கொள்வதைக் காண முடிகிறது? ஏன் இந்த மாற்றம்?

என்.சரஸ்வதி, வடலூர்

சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களும் சைவ நெறியைத் தவறாமல் பின்பற்றுபவர்களும் அதிகமாக நெற்றியில் திருநீறு பூசுவார்கள். குங்குமத்தை மட்டுமே பெண்கள் இடுவதால் முகத்தில் ஒருவித சாந்த பாவனை, அழகு, முக வசீகரம் உண்டாகிறது என்று தமிழ் இலக்கியங்களும், சாஸ்திரங்களும் தெளிவு படுத்துகின்றன. விநாயகர் கூத்தாடும்போது அக மகிழ்ந்திட, அவரது ரத்தம் தோல் வழியே தெரிவதால் குங்கும நிறத்தில் தோற்றமளிக்கிறாராம். நர்த்தன கணபதி தியான வரிகளில், குங்கும வர்ணதரம் என்று சொல்லப்பட்டுள்ளது. மஞ்சளையும் மங்கலக் குங்குமத்தையும் பெண்கள் மறவாமல் பயன்படுத்த வேண்டும் என்பதை, ‘செளந்தர்ய லகரி’யில் ஆதிசங்கர பகவத்பாதரும் சொல்லி இருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்களின் வழிபாடுகளில் நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது. இந்த வழியில், ‘விபூதி தாரணம்’ என்று பூசுவதையும் மகிழ்வோடு ஏற்றுச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை.

சமீப காலமாக கொடிய நோய்கள் மனிதர்களைத் தாக்க வருகிறதே. இவை தணிய தீர்வு இருந்தால் கூறுங்களேன்?

கே.சீனிவாசன், சென்னை

பழங்காலத்தில் அன்றாட வாழ்க்கை விதித் தொகுப்பு என்ற, ‘ஆசாரக்கோவை’ இருந்தது. இப்போதும் உண்டு. ஆனால், அதை மனிதர்கள் கடைபிடிக்காமல், மனம் போன போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.

பாழ்மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;
நோயின்மை வேண்டு பவர்!’

நாம் வாழும் காலத்தில் நோய் வராமல் தடுக்க சாஸ்திரம் கூறும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பாழாகி விட்ட வீட்டில் குடி இருத்தல் கூடாது. விஷப்பூச்சிகள், பாம்புகள், தேள், பூரான் அங்கே அடைக்கலமாக வந்திருக்கும். கோயில்களுக்கு உள்ளேயும் சுற்றுப் பிராகாரத்திலும் வாசம் செய்தால் வேண்டாம். இங்கு துர்சக்திகள் இரவில் தங்கவும், நோட்டமிடவும் முயற்சிக்கும். இடுகாடு அருகில் வாசம் செய்தல் கூடாது. அங்கிருந்து வரும் புகை நம் உடலை மெதுவாகத் தாக்குவதுண்டு. ஊர் மக்கள் வசிக்காத இடத்தில், இடி விழுந்த பாழ் மரத்தின் கீழும், அதன் அருகிலும் தங்கக் கூடாது. காரணம் பறவைகள் நம் மீது எச்சமிட்டால், அதுகூட நோயாக மாறக்கூடும். பகலில் தூங்கக் கூடாது. நெடுந்தூரப் பயணத்தின்போது தனி நபராகச் செல்லுதல் கூடாது. கொடிய நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க உப்பு, ‘ஹரித்ரா’ என்ற மஞ்சள் பொடி, மிளகு, உஷ்ணோதகம் என்னும் வெந்நீர் பயன்படுத்தி வர வேண்டும். இவை வாழ்க்கை நெறியாகக் கூறப்படுகிறது.

தந்தைக்கு முதல் திதி அல்லது நினைவு நாள் வரும்போது பதினைந்து நாட்களுக்கு முன்பே விரத நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பது விதியா?

.பலராமன், விருத்தாசலம்

தந்தை, தாய் இருவருக்குமே இந்த விதி பொருந்தும். ஒருவரின் பெற்றோரது முதல் நினைவு நாள் அல்லது திவசம் வரும்போது அவர் தன்னை பதினைந்து நாட்களுக்கு முன்பே யோக்யதாம்சம் செய்து கொள்வது அவசியம். பகவத் கீதையில் அனுசாசன பர்வத்திலும், ‘சம்சேப தர்மம்’ என்ற சாஸ்திர நூலிலும் இந்தக் கடமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் வருட திதி மட்டுமல்ல; அடுத்து வருகிற ஆண்டு திதிகள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். ஆனால், யாரும் இதைக் கடைபிடிப்பது இல்லை. ‘பித்ருக்கள் நினைவு நாளில் திருக்கோயில் குளங்களின் கரைக்குச் சென்று எள் தர்ப்பணம் செய்து விட்டு அருகில் உள்ள ஓட்டலின் பதினைந்து பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதுமே!’ என்று ஒரு செல்வந்தர் தாமாகவோ ஒரு விதியை வைத்துக்கொண்டு செயல்படுகிறார். இது தவறான செயல். திதி நாளிலிருந்து முதல் பதினைந்து நாட்கள் (ஒரு பட்ச விரதம்) வெளியில் சாப்பிடாமலும், பூண்டு, வெங்காயம், சுரைக்காய், கத்தரி, உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள், லாகிரி வஸ்துக்கள் எனப்படும் சிறிது மயக்கம் தரக்கூடிய பொருட்களை உண்ணுதல் கூடாது. கடைகளில் விற்கப்படுகிற சுவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளாமல், பொதுவாக ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எளிய உணவில் இருந்தபடியே திதி நாளன்று பித்ரு வழிபாடு நடத்தி, அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும். இது சிரார்த்தாங்க விதி எனப்படுகிறது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

எளிய பரிகாரமும் ஏற்றமிகு பலன்களும்!

1
​உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு! தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால்...

பத்ராசல திருக்கோலத்தில் ஸ்ரீ கோதண்டராமர்!

- தனுஜா ஜெயராமன் பழங்காலத்தில், ‘ஸ்ரீமாபில க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்பட்ட சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் விஸ்தாரமான இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருவறையில் பிரதான மூலவராகக் காட்சி தருபவர்...

​மன இருள் விலக்கும் கீதை!

0
ஒரு பெரியவர் எப்போதும் தனது வீட்டு வாசலில் அமர்ந்து, பகவத் கீதையை படித்துக்கொண்டே இருந்தார்! இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டு வந்தான்! ஒரு நாள் அவரிடம், “தாத்தா... எப்போதும் இந்தப் புத்தகத்தையே...

​முற்றும் துறந்தவர்; முழுதும் அறிந்தவர்!

0
- ஸ்ரீதர் தனது அறுபத்தைந்து வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, மகாபெரியவர் பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன். அதுக்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய அவரோட தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால்,...

கேட்டேன்; ரசித்தேன்!

0
ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்! ‘நமசிவாய’ என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், ‘சிவாயநம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்களால் காணக்கூடியது. ‘சூட்சுமம்’ என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று தெளிவாக...