கோமாதா; நம் குலமாதா!

கோமாதா; நம் குலமாதா!
Published on

கே.பாலகிருஷ்ணன்

பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், 'ஆநிரை காப்பான்' நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி பாரஸ், கோவத்ஸ பூஜை, நந்தினி விரதம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நம் ஊரில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதுபோல், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்கு முன்வரும் துவாதசி நாளில் கன்றுடன் கூடிய பசுவை ஆராதிக்கிறார்கள். நல்ல சந்ததிகள் உண்டாகவும், வாழ்வில் சகல நன்மைகளை அடையவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இவ்விழா, இவ்வருடம் நவம்பர் 1ம் தேதி மாலை 5.31 முதல் இரவு 8.09 வரை அனுசரிக்கப்படுகிறது.

பசுவானவள், பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், அஷ்ட வசுக்களுக்குப் பெண்ணாகவும், ஆதித்தியர்களுக்கு சகோதரியாகவும், நாபியில் அமுதத்தை வைத்துக்கொண்டவளாகத் திகழ்கிறாள். உலகம் நற்கதி பெற, நான்முகன் முதலில் பசுவைப் படைத்து அதன் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான்.
கோ லோகத்தில் ராதையும், கிருஷ்ணனும் சுரபி மற்றும் அதன் கன்றுகளான நந்தினி, பட்டி ஆகியோரை அனுதினமும் பூஜிப்பதாக, 'தேவி பாகவதம்' கூறுகிறது. மேலும், 'ஸ்ரீ சூக்தம்' என்ற ரிக் வேத மந்திரம் சொல்லி பசுவை பூஜை செய்து ஆவாகனம் செய்வித்த
ஸ்ரீ கிருஷ்ணர், கோகுலத்தில் கோ பூஜையை நடத்தியபோது, பசுவை லக்ஷ்மியாக பாவித்து, தூப தீப நிவேதனம் செய்த பிறகு கைநிறைய மலர்களை அதன் மேல் தூவியபடியே கோமாதா துதியை பக்தியோடு கூறினாராம். அதன்பின் கோகுலத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்தன என்று புராண வாயிலாக அறிகிறோம்.

ந்த பூஜையின் முக்கியத்துவத்தை விஷ்ணு புராணம் மற்றும் பவிஷ்ய புராணங்கள் விரிவாக விளக்குகின்றன. அதன் பின்னணியைப் பார்ப்போம்.

இக்ஷ்வாகு குலத்தில், தீவிர விஷ்ணு பக்தர்களாக விளங்கிய பாலகன் துருவன், பிரகலாதன் ஆகியோரின் சந்ததியில் அரசாண்ட மன்னன் அங்கன். வெகு காலம் வாரிசு இல்லாமல் தவித்த அவன், தவ ஸ்ரேஷ்டர்களின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அதன் பலனாக, பட்டமகிஷி மிருதியுவிக்கு ஒரு குமாரன் பிறந்தான். வேனன் என்றழைக்கப்பட்ட அவன், அவனது தாய்வழி பாட்டனார் மற்றும் தனது தாயை போன்றே அசுர குணம் கொண்டவனாக விளங்கினான். இளவயதிலிருந்தே கொடூரச் செயல்களையும், ஆன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவனாகவும், தனது பேச்சை மீறுபவர்களுக்குக் கொடுந்தண்டனைகள் அளித்தும், அராஜக வழியில் ஈடுபட்டான். அதனால் மனம் நொந்துபோன மன்னன் அங்கன், யாரிடமும் தெரிவிக்காமல் அரசைத் துறந்து வானபிரஸ்தாஸ்ரம தர்மவழியை ஏற்றுக்கொண்டு விட்டான்.

அதற்குப் பிறகு அரியாசனம் ஏறிய வேனனின் குணம் மாறவேயில்லை. கொடுங்கோல் ஆட்சியில் அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்தி விட்டனர். பசுக்கள் பால் சுரப்பதை நிறுத்தின. செல்வச் செழிப்புகள் பூமியில் புதைந்து மக்கிப்போயின. இதைக் காணச் சகிக்காத முனிவர்கள், வேனனை சபித்தனர். அவர்களது வாக்கு வீர்யத்தில் உடல் கருகி வேனன் காலப்போக்கில் உயிரிழந்தான். அசுர குணமும், சக்தியும் வாய்ந்த மிருதியுவி அவனது சவத்தை ஈமக்கடனுக்கு உட்படுத்தாமல் தைலக் காப்பிட்டு பாதுகாத்தாள் என்று கூறப்படுவது ஆச்சரியமளிக்கும் விஷயம். ராஜ்ஜிய பாரம் ஏற்க வாரிசு இல்லாததால், மகாராணியை அணுகிய ராஜ குரு மற்றும் முனிவர்கள், அரசியிடம் ஒரு விநோத கோரிக்கையை வைத்தனர். வேனனின் சவத்தைக் கடைந்து அதிலிருந்து வாரிசு ஒன்றை உருவாக்கும் முறையைக் கூறி, அனுமதி வேண்டினர். அதற்கு அவளும் இசைய, அவர்கள் வேனன் சவத்தின் தொடையைக் கடைய, அதிலிருந்து கருத்த உருவில், 'நிஷிதன்' எனும் குள்ள வடிவானவன் விகாரமாகத் தோன்றினான்.

வர்களது நிஷிதக் குலம் நாட்டுக்கு வெளியே மலை, வனாந்திரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அடுத்து, வேனனின் கைகளைக் கடைய, நாராயணனின் சக்ராயுதத்தைப் பிறப்புக் குறியீடாக முழங்கை மேற்பாகத்தில் கொண்டும், அக்னி தேவன் அளித்த அஜ்கவம் என்ற வில்லுடனும், வசீகர ஆண் மகன் ஒருவன் தோன்றினான். அதேசமயம் இடது கையிலிருந்து தீப்பிழம்பாய் அழகிய 'பொன்' மகள் எழுந்தருளினாள்.

ரிஷிகளின் ஞான திருஷ்டியில் இவர்கள் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமந் நாராயணனாகவே தோற்றமளித்தனர். கட்டுடலுடன், வருங்காலத்தில் அமோகமாய் செல்வச் செழிப்புகளை அளிப்பவனாக விளங்கப்போவதால், அந்த ஆண் மகனை பிருது (பிர்த்ரு) எனவும், பெண் தீப்பிழம்பாய்த் தோன்றியவளாதலால், 'அர்ச்சி' எனவும் பெயரிட்டு அழைத்தனர்.

சுக்ரனை ராஜ குருவாகவும், கர்க்கிய மகரிஷியை ஜோதிடராகவும், வால்கில்யரை ஆலோசகராகவும், சரஸ்வத் குலத்தவர்களை உற்ற நண்பர்களாகவும் கொண்டு நல்லாட்சி மேற்கொண்டு வந்தாலும், நாட்டை பிருதுவால் வறட்சியிலிருந்து மீட்க முடியவில்லை. இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் வஞ்சிக்கும் பூமிதான் என வெகுண்டெழுந்த பிருது, பூமியின் மீது அம்பு எய்து அவளைக் கொல்லத் துணிந்தபோது, பூமா தேவி பசு உருவெடுத்து அவனிடமிருந்து தப்பியோடினாள். விடாது விரட்டிச் சென்று அவளை மடக்கியவன், 'மக்களை வாட்டும் உன்னை அழித்தே தீருவேன்' என உறுமினான்.

"மானுட ஸ்ரேஷ்டனே! பெண்ணாகிய என்னைக் கொல்வது பாபமில்லையா? என்னை அழிப்பதால் உன்னையும் சேர்த்து, அனைத்து உயிரினங்களும் அழிந்து விடுமே? நான் என்ன செய்வது? என்னுள் அமிழ்ந்துள்ள எல்லா செல்வங்களும் மக்கி பாழடைந்து விட்டன. அவற்றை வெளிக்கொணர்ந்து மறுபடியும் உழுது, பயிரிட்டு உயிர்ப்பிக்க உன் ரூபத்தில் இப்போது சமயம் வந்து விட்டது. நான் எக்கிக் கொண்டுவிட்ட மடியைத் தளர்த்தி, அனைத்துச் செல்வங்களையும் பால் வடிவில் சொரிகிறேன். வேண்டுபவர்கள் கட்டாயமாக இளங்கன்று, பாத்திரமுடன் வந்து கறந்துக்கொள்ளலாம். சக்ர சின்னமுடையோனே, உடனே செயல்படு!"என்று சுரபி கூற, பிருது மகிழ்ந்துபோனான்.

உடனே அவன், மனு பிரஜாபதியை கன்றாகவும், கைகளை பாத்திரமாகவும் கொண்டு, சகல ஔஷாதிகளையும் கறந்து கொண்டான். மகரிஷிகள் பிரகஸ்பதியை கன்றாகவும், இந்திரியங்களைப் பாத்திரமாகக் கொண்டு வேதமயமான ஞானப் பாலை அடைந்தனர். தேவர்கள், இந்திரனை கன்றாகவும் சுவர்ண பாத்திரத்தில் அமிர்தமான பாலைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனை கன்றாகவும் இரும்புப் பாத்திரத்தில் மதுவாகிய பாலை கறந்தனர்.

இப்படியாக, அனைவரும் தங்களுக்கேற்றவாறு எடுத்துக்கொண்டு, அதன் பலனை அனுபவிக்கலாயினர். இதனாலேயே பிருதுவின் மனைவி, பூமா தேவி என மனுஸ்மிருதி கூறுகிறது. பிருத்வி என்ற பெயரும் உண்டாயிற்று. இதை நினைவுகூறும் விதமாக, உலக நன்மைக்காக கோவத்ஸ பூஜை நடத்தப்படுகிறது. துவாதசி அன்று விரதமிருந்து, காலையில் கன்றுடன்கூடிய நந்தினியாகிய பசுவை நீராட்டி, அலங்கரித்து, வழிபட்டு குலம் தழைத்தோங்க வேண்டுவர். முளைவிட்ட பயறு, பயத்தம் பருப்பு, கோதுமை மற்றும் தின்பண்டங்களை பசுவுக்கு அளிப்பர். அன்று முழுவதும் முக்கியமாக, பால், பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்.

ஐப்பசி கிருஷ்ணபட்ச துவாதசி அன்று நாமும் காமதேனு நந்தினியாய் விளங்கும் பசுவை, 'காமதேனு வம்சத்தைச் சேர்ந்தவளே! எல்லாருக்கும் நன்மை அளிப்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகுக்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக்கொள்வாயாக!' என வணங்கி, துவாதசி பாரணையாக அதற்கு அகத்திக்கீரை கொடுத்துத் தொழுது, வாழ்வு வளம் பெற வேண்டுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com