165 கிலோ எடைக் குறைப்பு! இணையத்தை அதிர வைத்த இளைஞர்!

165 கிலோ எடைக் குறைப்பு! இணையத்தை அதிர வைத்த இளைஞர்!

மெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 165 கிலோ எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

உடல் எடைக் குறைப்பு என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. உடல் எடையை கூட்டுவதற்கு, நமக்கு பிடித்த உணவுகளை நன்றாக சாப்பிட்டு எளிதாகக் கூட்டி விடலாம். அதுவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், பலவிதமான கஷ்டங்களை நாம் தாங்கிக் கொண்டு தான் குறைக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மனநிலை, எண்ண ஓட்டங்கள் ஆகிய அனைத்தும் கைகூடினால் மட்டுமே உடல் எடையை ஒருவரால் குறைக்க முடியும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மெசிசிப்பியைச் சேர்ந்த நிக்கோலஸ் கிராஃப்ட் என்பவரின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது.  முதலில் அதை ஒரு பிரச்சினையாக அவர் நினைக்கவில்லை. கவலைப்படவும் இல்லை. ஆனால் நாளாக நாளாக நிக்கோலஸ் கிராஃப்ட்-ன் உடல் எடை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. 

ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை 294 கிலோவாக அதிகரித்ததை அடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற நிக்கோலஸிடம், உடனடியாக உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் இறந்து விடுவீர்கள் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதன் பிறகு உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்த நிக்கோலஸ் கிராஃப்ட், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என முடிவு செய்தார். சில மாதம் உடற் பயிற்சிக்குப் பின்னர் அவரது உடல் எடை வெறும் 18 கிலோ மட்டுமே குறைந்தது. அப்போதுதான் தனது உணவுப் பழக்கத்தையும் சேர்த்து மாற்ற முடிவு செய்திருக்கிறார். இப்படி செய்ததில் அவரது உடல் எடை 3 ஆண்டுகளில் கிடுகிடுவென குறையத் தொடங்கியது.

மூன்று ஆண்டுகளில் 165 கிலோ எடையைக் குறைத்த நிக்கோலஸ் கிராஃப்ட், தற்போது 129 கிலோ எடையுடன் காட்சியளிக்கிறார். 

அபாயக் கட்டத்தை தாண்டி விட்ட நிக்கோலஸ், தனது உடல் எடையை மேலும் குறைக்க முயற்சி செய்து வருகிறார். ஆரம்பத்தில் உடல் எடைப் பிரச்சனையால் தற்கொலை முடிவு எடுத்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால்தான், உடல் எடையைக் குறைக்க முடிந்ததாகவும் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். 

உடல் எடையைக் குறைத்ததால் ஏற்பட்டுள்ள தோல் சுருக்கம் தனக்கு தொந்தரவும் வலியும் தரக்கூடிய வகையில் உள்ளதாகக் கூறும் நிக்கோலஸ், அதற்கான சிகிச்சையையும் எடுத்து வருகிறார். 165 கிலோ எடையைக் குறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது தலை எல்லாம் சுற்றுகிறது. 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு நல்ல உதாரணமாக இவரை சொல்லலாம்தானே? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com