தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் 1,000 ரூபாய் நாணயம்!

1,000 Rs Coin
1,000 Rs Coin
Published on

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பெருமை கொள்ளும் 1000 ரூபாய் நாணயத்தின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

நாட்டில் புழக்கத்திற்கு வரும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடும் விலையில், நாணயங்கள் மற்றும் 1 ரூபாய் நோட்டுகளை மட்டும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி மத்திய அரசு வெளியிடுகிறது. இதில் சிறப்பு வெளியீடாக அவ்வப்போது மத்திய அரசு நாணயங்களை வெளியிடும். ஆனால், இவை மக்கள் புழக்கத்திற்கு வருவதில்லை. அதில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நாணயம் தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இருக்கும் 1,000 ரூபாய் நாணயம்.

மத்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயங்களில் 1, 2, 5, 10, 20 மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதில் 20 மற்றும் 100 ரூபாய் நாணயங்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியதால் அங்கிருக்கும் மக்கள் இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் நாணயங்களில் அதிகபட்சமாக 1,000 ரூபாய் நாணயம் இருப்பது பலரும் அறியாத தகவல். மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வராத நிலையில், மத்திய அரசு ஏன் 1,000 ரூபாய் நாணயத்தை அச்சடித்தனர் என அனைவரும் நினைப்பதில் தவறில்லை. இதற்கு முக்கிய காரணமே சோழப் பேரரசர் இராஜராஜ சோழன் தான்.

சோழப் பேரரசை ஆட்சி செய்த இராஜராஜ சோழன் மிகச் சிறந்த சிவ பக்தர் ஆவார். இவர் தஞ்சாவூரில் கட்டிய பிரகதீஸ்வரர் கோயில் 1,000 ஆண்டுகளைக் கடந்து ஒரு அடி கூட அசையாமல் கம்பீரமாய் நிற்கிறது. இராஜராஜ சோழனின் இந்தச் சாதனையைச் சிறப்பிக்கவும், கோயில் 1,000 ஆண்டுகளைக் கடந்து மங்காப் புகழ் கொண்டுள்ளதை சிறப்பிக்கவும் மத்திய அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு 1,000 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு, தமிழர்களுக்கும் பெருமிதமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
ராஜராஜ சோழன் வெளியிட்ட 'ஈழ கருங்காசு' நாணயம்! தமிழக அரசுப் பள்ளி ஆசிரியரின் தொல்லியல் ஆய்வுத் திறனுக்கு கிடைத்த பரிசு!
1,000 Rs Coin

1,000 ரூபாய் நாணயத்தின் முன்புறத்தில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் முன்மாதிரிப் படமும், இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலையும் இடம் பெற்றிருக்கும். '1000 YEARS OF BRIHADEESWARAR TEMPLE, THANJAVUR' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதை குறிக்கும் நோக்கத்தில் ஆண்டும் இடம் பெற்றுள்ளது. நாணயத்தின் பின்புறம் அசோக சின்னத்துடன் 1000 RUPEES என பொறிக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்ற இரண்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கும் 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் மற்றும் ஜைனாச்சார்யா ஸ்ரீ ஜினேஷ்வர் சூரி ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பெருமையை போற்றும் விதமாக மத்திய அரசின் இந்த செயல்பாடு மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com