இந்தியர்களைப் போலவே ஜப்பானியர்களும் கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்கள். ஜப்பானிய சமுதாயத்தில் சில விஷயங்கள் மோசமானவைகளாகக் கருதப்படுகின்றன அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பொது இடங்களில் சத்தமாகப் பேசுதல்: ஜப்பானிய கலாசாரம் கட்டுப்பாடு மற்றும் அடக்கத்திற்கு பெயர் போனது. பொது இடங்களில், அதாவது குறிப்பாக பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் உணவகங்களில் சத்தமாகப் பேசுவது அநாகரிகமான செயலாகக் கருதப்படுகிறது. அதை முரட்டுத்தனமான செயலாகவும் இடையூறு விளைவிப்பதாகவும் கருதுகிறார்கள்.
2. சுட்டிக்காட்டுதல்: ஜப்பானில் ஆள்காட்டி விரலால் மனிதர்கள் அல்லது பொருட்களை நேரடியாக சுட்டிக்காட்டுவது அநாகரிமான செயலாகக் கருதப்படுகிறது. அதற்கு பதிலாக திறந்த கையால் சைகை செய்வது அல்லது தலையை நுட்பமாக அசைப்பது மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது.
3. குறுக்கிட்டுப் பேசுதல்: ஒருவர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசுவது ஜப்பானிய கலாசாரத்தில் மரியாதைக்குரிய செயல் இல்லை. ஒருவர் பேசும்போது அமைதியாக காத்திருந்து. தன் முறை வந்தபோதுதான் பேச வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். எதிரில் இருப்பவர் பேசும்போது எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள்.
4. வீட்டுக்குள் காலணிகளை கழற்றுவது: ஜப்பானிய வீடுகளில் தூய்மையை பராமரிக்கும் பொருட்டு காலணிகளை வெளியே கழற்றுவது வழக்கம். விருந்தாளிகள் வந்தால் அவர்கள் தங்கள் செருப்புகளை வெளியே விட வேண்டும். பின்பு வீட்டினர் தரும் வீட்டிற்குள் அணியும் காலணிகளை அணிந்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறுவது. அநாகரிகமான செயலாகக் கருதப்படுகிறது.
5. பொது இடங்களில் மூக்கு உறிஞ்சுவது: பொது இடங்களில் சத்தமாக மூக்கு உறிஞ்சுவது சுகாதாரமற்றதாகவும். முழுக்கக் கேடானதாகவும் கருதப்படுகிறது. ஒரு தனிப்பட்ட பகுதிக்கு சென்று மூக்கை உறிஞ்சிக் கொள்ளலாம். அப்படி செய்யும்போது அருகில் இருப்பவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
6. அன்பின் வெளிப்பாடு: அன்பின் வெளிப்பாடாக பொதுவெளியில் முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல், கைகளைப் பிடிப்பது போன்ற செயல்களைச் செய்வது ஜப்பானிய கலாசாரத்தில் குறிப்பாக பழைய தலைமுறையினரிடையே வெறுப்பாகப் பார்க்கப்படுகிறது.
7. நடைப்பயிற்சியின் போது உணவு: நடைப்பயிற்சியின்போது சாப்பிடுவது அல்லது ஏதாவது பானம் அருந்துவது. குறிப்பாக நெரிசலான பகுதிகளில் அல்லது பொதுப் போக்குவரத்தில் அவமரியாதையாகக் கருதப்படுகிறது. நியமிக்கப்பட்ட பகுதிகளில் சென்றுதான் உணவு மற்றும் பானங்களை உட்கொள்ள வேண்டும்.
8. நூடுல்சை உறிஞ்சுவது: நூடுல்சை சத்தமாக உறிஞ்சி சாப்பிடுவது கூடாது. அது அருவருப்பான செயலாகக் கருதப்படுகிறது.
9. தாமதமாக வருவது: ஜப்பானிய கலாசாரத்தில் நேரத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமாக மதிக்கப்படுகிறது. பொதுக் கூட்டங்கள் சந்திப்புகளுக்கு தாமதமாக வருவது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. சரியான நேரத்திற்கு வருவதும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதும் முக்கியமான செயலாகும்.
10. நன்றி சொல்லாமல் இருப்பது: ஜப்பானிய கலாசாரத்தில் நன்றியை வெளிப்படுத்துவது அவசியம். ஒருவர் நன்றி சொல்லத் தவறினால் அது முரட்டுத்தனமான செயலாகக் கருதப்படுகிறது.
11. அதிக வாசனை பெர்ஃப்யூம் கூடாது: ஜப்பானியர்கள் வாசனை திரவியங்களை உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்கள்தான். ஆனால், அதிக வாசனை உடைய பெர்ஃப்யூம்களை அவர்கள் விரும்புவதில்லை. பொது இடங்கள் அல்லது நெரிசலான நகர்ப்புற சூழல்களில் வாசனை மிகுந்த பெர்ஃப்யூம்களை உபயோகிப்பதால் உணர்ச்சி தூண்டுதலுக்கு காரணமாக அமைகின்றது. எனவே சூழ்நிலையின் அமைதி மற்றும் சமநிலைக்கு இடையூறு விளைவிப்பதாக கருதுவதால் மிதமான வாசனை தரும் பெர்ஃப்யூம்களை மட்டுமே அங்கு உபயோகிக்க வேண்டும்.
ஜப்பான் சென்றால் இந்தப் பழக்கங்களைத் தவிர்த்து கவனமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.