ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரிக்கப்படும் போதிமரம்!

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரிக்கப்படும் போதிமரம்!

புகழ் பெற்ற பௌத்த தலமான சாஞ்சியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மத்திய பிரதேசம் சலாமத்பூர். இந்தத் தலத்தில் வளரும் ஒரு மரம் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்துடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே இந்த மரக்கன்றை நட்டார். இலங்கையில் இருந்துதான் இந்த மரக்கன்று கொண்டு வரப்பட்டது. புத்த மத பிட்சு சந்திர ரதன் என்பவரின் கருத்துப்படி இந்த மரம் புத்த கயாவில் புத்தர் ஞானம் பெற்றதைக் குறிப்பிடுகிறது.

அந்த மூல மரத்தின் ஒரு பகுதியை பேரரசர் அசோகரின் மகள் சங்கரமித்ரா இலங்கைக்கு எடுத்துச் சென்று அனுராதபுரத்தில் நட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மரக்கன்று சலாமத்பூரில் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது.

புத்தருடன் தொடர்புடைய புனித மரமாக இது கருதப்படுவதால் இந்த மரத்தை பராமரிப்பதற்கு அம்மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த மரத்துக்கு 24 மணி நேரமும் விசேஷ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக நான்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா 26 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி. மாத ஊதியமாக இவர்களுக்கு மட்டுமே ஒரு லட்சத்து நாலு ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதரப் பராமரிப்பு என இந்த மரத்துக்கான மொத்த செலவாக ஆண்டுதோறும் 12 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை மாநில அரசு ஒதுக்குகிறது.

இந்த மரத்தின் ஒரு இலை கூட வாடிவிடக் கூடாது என்பதில் நான்கு பாதுகாவலர்களும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் இந்த மரத்துக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அரசு விடுமுறை, பண்டிகைக் காலங்கள் உட்பட, அனைத்து காலகட்டங்களிலும் இந்தப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடருகிறது.

கால்நடைகள், மனிதர்கள் உட்பட யாரும் இந்த மரத்தைத் தொடாமல் பாதுகாக்க 15 அடி உயர இரும்பு வளையும் நிறுவப்பட்டுள்ளது. மரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சாஞ்சி நகராட்சி மூலம் பிரத்தியேக தண்ணீர் டேங்கர் நிறுவப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு மரத்தின் நுனி இலைகள் கூட பிரஷ்ஷாக இருக்குமாறு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது வந்து இம்மரத்துக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த செயல்முறைகள் அனைத்தும் மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.

இந்த போதி மரம் பண்டைய வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதுடன் ஆன்மிகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. விசேஷ பாதுகாப்பு அளிக்கப்படுவதால் இந்த மரம், 'வி.வி.ஐ.பி. மரம்' என்ற அடைமொழியை தாங்கி நிற்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com