

நவீன சன்ஸ்கிரீன் (sunscreen) லோஷன்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் சூரியனின் அபாயகரமான கதிர்களில் இருந்து தங்கள் மென்மையான சருமத்தைப் பாதுகாத்துக் கொண்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு பயங்கர சுற்றுச்சூழல் மாற்றத்தின்போது, ஆதிகால மனிதர்களான 'ஹோமோ சேபியன்ஸ்' (Homo sapiens) கண்டுபிடித்த ஒரு எளிய உபாயம் தான், நமது இனம் அழிந்து போகாமல் இன்றுவரை தொடரக் காரணம்! அது என்னவென்று ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள், அந்தப் பழங்காலப் பாதுகாப்பு உத்தியின் மர்மத்தைப் பற்றி அறிவோம்.
ஓக்கர் (Ochre):
ஆதி மனிதர்கள் பயன்படுத்திய ஓக்கர் (Ochre) என்ற சிவப்பு நிறக் கனிமப் பொடி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதனை அவர்கள் பெரும்பாலும் குகை ஓவியங்கள் வரையவும், தங்கள் உடலை அலங்கரிக்கவும் பயன்படுத்தினார்கள் என்று நம்பப்பட்டது.
ஆனால், 'சயின்ஸ் அட்வான்ஸஸ்' (Science Advances) இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், இந்த சிவப்புப் பொடி வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, இது ஒரு பழங்காலச் சன்ஸ்கிரீன் (sunscreen) போல செயல்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
இந்த இரும்புச் சத்து நிறைந்த பொடியை தோலில் பூசும்போது, அது தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களில் (UV Radiation) இருந்து ஒரு தடுப்பானாகச் செயல்பட்டுள்ளது. பரிசோதனை ஆய்வுகளும் ஓக்கர் (Ochre) உண்மையில் சூரிய ஒளியைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆதிகால மனிதர்கள் இந்தக் கனிமத்தையும், அதனுடன் சேர்த்து தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் குகைகளைப் பயன்படுத்திய விதமும் தான், பூமியின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் அவர்கள் பிழைக்க உதவியதாம்!
லாஷாம்ப்ஸ் விண்கற்கள் நிகழ்வு:
சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் காந்தப்புலம் வியத்தகு அளவில் பலவீனமடைந்தது. இந்த நிகழ்வு 'லாஷாம்ப்ஸ் விண்கற்கள் நிகழ்வு (Laschamps excursion)' என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக, பூமியின் காந்தப்புலம் ஒரு கவசம் போல செயல்பட்டு, விண்வெளியில் இருந்து வரும் அபாயகரமான கதிர்வீச்சைத் தடுக்கும். ஆனால், இந்த நிகழ்வின்போது, காந்தப்புலம் அதன் இயல்பான பலத்தில் வெறும் 10% ஆகச் சரிந்தது. இதன் விளைவாக, சூரியனில் இருந்து வரும் துகள்களின் தாக்குதலுக்குப் பூமி ஆளானது. மனிதர்கள் அதிக அளவிலான புறஊதாக் கதிர்வீச்சுக்கு ஆளாகினர்.
ஓக்கரைப் பயன்படுத்தி தைக்கப்பட்ட ஆடைகள், திடீரெனக் கடுமையான புறஊதாக் கதிர்வீச்சால் வெப்பமான உலகத்தில், ஆதி மனிதர்கள் உயிர்பிழைக்க காரணமாக இருந்திருக்கிலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வு முடிவுகள் வெறும் கோட்பாடுகளாகவே இருந்தாலும், அவை பழங்கால மனிதர்கள் எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்ற ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.