திருவோணம் பண்டிகையின் 5 முக்கிய அம்சங்கள்!

மலையாள மாதமான சிங்கத்தில் கம்பீரமாக வரும் ஓணப் பண்டிகை அத்தமிலிருந்து திருநோணம் வரையென பத்துநாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் அறுவடை விழாவிற்கு மஹாபலி மன்னன் கேரள மக்களைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். ஓணப் பண்டிகையின், முக்கியமான ஐந்து அம்சங்கள் என்றென்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி இப்பதிவில் அறிவோம்.
திருவோணம் பண்டிகையின் 5 முக்கிய அம்சங்கள்!

1. 1. பூக்களம்

அவரவர் வீடுகளின் வாசல்களில் பூக்களால் அமைக்கப்பட்ட கோலங்கள் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கும். பல்வேறு விதமான வண்ண - வண்ண பூக்களை உபயோகித்து புதுவகை டிஸைன்களை போட்டி போட்டுக்கொண்டு கோலங்களில் மக்கள் காட்டுவார்கள். அழகாக பூக்களம் அமைத்து அதன் நடுவே அல்லது இருபுறங்கள் அல்லது அதைச் சுற்றி அகல்விளக்கு தீபம் ஏற்றி வைப்பார்கள். பூக்களப் போட்டிகள் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்படும். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு வகையென ஒவ்வொரு நாளும் தொடர்ந்து 10ஆம் நாள் பத்து வகைப் பூக்களால் அழகு செய்வர்.

2. 2. முண்டு

கேரள மக்களின் பாரம்பரிய உடை முண்டு ஆகும். இது இரு பகுதிகளாக இருக்கும் செட். முண்டின் பார்டர் கோல்டு (gold) Zariயில் அமைக்கப்பட்டு அம்சமாக இருக்கும். பலர் கசவு Sareeயும் அணிவதுண்டு.  இவைகளை அணிந்து நெற்றியில் சந்தனமிட்டு பெண்மணிகள், குழந்தைகள் வருவார்கள். குர்தா - பைஜாமா; வேட்டி - சட்டை போன்றவைகளை ஆண்கள் அணிவார்கள். ஓணப் பண்டிகை கொண்டாட, புது ஆடைகளை வாங்குவது வழக்கம்.

3. 3. கதகளி

இந்திய நடனக்கலையின் ஒரு வெளிப்பாடாகிய கதகளி மூலம், இதிகாச புராணங்கள், தெய்வக் கதைகள் போன்றவைகள் நாட்டிய நாடகமாக மேடைகளில் அரங்கேறுவது வழக்கம். ஆடை, அணிகலன்கள் பெரியதாகவும், கனமாகவும் இருக்கும். கிரீடம், கழுத்தாரம், காட்டாளன், மகுடமுடி, கோண்டா, ஹனுமான் முண்டி, குட்டிச்சாமரம் என அணிகலன்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். சாத்விகா (ஹீரோ), காதி (வில்லன்), மினுக்கு (பெண்கள்) ஆகியோர்களின் ஆடைகள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். பல்வேறு மேடைகளில் பத்து நாட்களும் நடைபெறும் கதகளி நடனத்தைக் காண, மக்கள் கூட்டம் அலை மோதும். தவிர, புலிக்களி, கை கொட்டுக்களி போன்ற நடனங்களும் உண்டு.

4. 4. ஓணம் சத்யா

நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. இது ‘ஓணம் சத்யா’ என அழைக்கப்படுகிறது. ஒரு அரசருக்கு விருந்து அளிப்பதுபோல சுமார் 25 வகையான உணவுகளைத் தயாரித்து, அழைத்தவர்களை அமரவைத்து, பெரிய வாழை இலை போட்டு அன்புடன் பரிமாறுவார்கள். பாயசம், பச்சடி, சாதம், சாம்பார், ரசம், பருப்பு, புளி இஞ்சி, துவரன், அவியல், ஓலன், காளன், ஊறுகாய், பப்படம், ஊறுகாய், பருப்பு வடை, நேந்திரங்காய் வறுவலென தயாரித்து விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்வார்கள்.

5. 5. அட பிரதமன்

ஓண சத்யாவில் பாயசம் இருந்தாலும் ‘அட பிரதமன்’ ஸ்பெஷல் ஐட்டமாகும். அரிசி அடை, வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் இந்த அடை பிரதமனை ஒரு கிண்ணம் சாப்பிட்டால்தான் ‘ஓண சத்யா’ மனநிறைவைத் தரும். அதுவும் சுடச்சுட இதை மெதுவாக அருந்துகையில் ஏற்படும் சுவையே அலாதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com