
உலக வரலாற்றில் சில ஓவியங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமான விலைக்கு விற்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளன. வாருங்கள், உலகின் மிக விலையுயர்ந்த டாப் 5 ஓவியங்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது வரை விற்கப்பட்ட ஓவியங்களில் உலகின் மிக விலையுயர்ந்த ஓவியம் லியோனார்டோ டாவின்சியின் 'சால்வடார் முன்டி' (Salvator Mundi) ஓவியம் தான். இயேசு கிறிஸ்து ஒரு படிக உருண்டையை ஏந்திய படி உள்ள இந்த ஓவியம் 2017ம் ஆண்டு நியூயார்க் கிறிஸ்டிஸில் 450.3 மில்லியனுக்கு (3996 கோடி) விற்கப்பட்டது.
'சால்வேட்டர் முண்டி’ என்ற இந்த ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி 1500-ம் ஆண்டின் துவக்கத்தில் வரைந்துள்ளார். அதன் பின் பல காலகட்டங்களில் இருபதுக்கும் மேலான அதன் நகல்கள் உருவாகின. ஆனால் ஒரிஜினல் சில காலங்களுக்கு பின்னர் கண்டறியப்பட்டு ஏலத்திற்கு வந்தது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த 'எலிசபெத் லெடரரின்' ஓவியத்தை சமீபத்தில் ஏலத்தில் விட்டது அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான சோதேபிஸ் ஏல நிறுவனம். அந்த ஓவியம் அமெரிக்காவில் ரூ.2000 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஓவியத்தை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2-வது ஓவியம் என்ற பெருமை குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியம் பெற்றுள்ளது.
புகழ் பெற்ற எலிசபெத் லெடரரின் ஓவியம் வெள்ளை அங்கி அணிந்த எலிசபெத் லெடரர் என்ற பெண் நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டுகிறது. இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வரையப்பட்டதாகும். இது 1916 ம் ஆண்டு ஆஸ்திரிய ஓவியர் குஸ்டாவ் கிளிம்ட்டால் வரைந்த 6 அடி உயர எண்ணெய் வகை ஓவியம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஓவியம் பின்னர் 1948ம் ஆண்டு மீண்டும் மீட்கப்பட்டது. குஸ்டாவ் கிளிம்ட் தன்னுடைய வாடிக்கையாளரின் மகளை இந்த ஓவியத்தில் வரைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்த, இந்த எலிசபெத் லெடரரின் உருவப்படம் இப்போது ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஆண்டி வார்ஹோலின் மர்லின் மன்றோவின் உருவப்படமான 'ஷாட் சேஜ் ப்ளூ மர்லின்' ஓவியம் 2022 இல் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியில் $195 மில்லியனுக்கு (1728.9 கோடி) விற்கப்பட்டது. இதை லாரி ககோசியன் எனும் வியாபாரி வாங்கினார். அப்போது அது 20 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட விலை உயர்ந்த ஓவியமாக கருதப்பட்டது.1964 ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசை கலைஞர் மற்றும் ஓவியர் ஆண்டி வார்ஹோல் தொடர்ந்து 5 வர்ணங்களில் 1953 ம் ஆண்டு வெளிவந்த மர்லின் மன்றோ நடித்த 'நயாகரா' திரைப்படத்தின் அடிப்படையில் வரைந்தார். அதில் நீல நிறத்தில் 40 சதுர அங்குலத்தில் வரைந்த அக்ரிலிக் மற்றும் பட்டு திரை ஓவியம் தான் இந்த 'ஷாட் சேஜ் புளூ மர்லின்' ஓவியம்.
1955 ம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிக்காசோ அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கள் ஓவியம் ஒன்றை வண்ணமயமாக 'கியூபிஸ்ட்' ஓவிய முறையில் வரைந்தார். அதுதான் 'லெஸ் ஃபெம்ஸ் டி அல்சர் (டes femmes d' Alger)' ஓவியம். இது 2015 ம் ஆண்டு நியூயார்க்கின் கிறிடிஸிஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது. அப்போது அது 179.4 மில்லியன் டாலர்களுக்கு (1590 கோடி) ஜூலை 2015 ம் ஆண்டு ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல் தானி எனும் கத்தார் முன்னாள் பிரதம மந்திரிக்கு விற்கப்பட்டது.
'லூசியன் பிராய்டின் மூன்று ஆய்வுகள்' (Three studies of Lucian Freud) என்பது பிரிட்டிஷ் ஓவியர் பிரான்சிஸ் பேக்கன் என்பவரால் 1969 இல் வரையப்பட்ட ஒரு புகழ்பெற்ற டிரிப்டிச் (மூன்று பிரிவுகள் கொண்ட ஓவியம்) ஆகும். இது பிரான்சிஸ் பேக்கனின் நண்பர் கலைஞர் லூசியன் பிராய்டை மூன்று வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்கும் ஒரு வகை எண்ணெய் ஓவியம். 2013 இல் நியூயார்க் கிறிஸ்டிஸில் $142.4 மில்லியனுக்கு (1262 கோடி) விற்கப்பட்டது.