கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ், உலகெங்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய உன்னத பண்டிகை. அத்தகைய மகிழ்ச்சி பெருக்கிற்கு கிறிஸ்துமஸ் காலத்தில் பயன்படுத்தும் பல அடையாளங்கள் காரணமாக இருக்கின்றன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துவர்கள் செய்யும் பல வழிபாட்டு முறைகளில் ஒன்று வீடுகளில், ஆலயங்களில் குடில் வைப்பது. இதை ஒரு வழக்கமாக அனைவரும் செய்கின்றனர். கடவுள் நமக்கு எவ்வளவு செல்வத்தைக் கொடுத்து இருந்தாலும் அதை நினைத்து அகந்தையுடன் வாழாமல் கடவுளே மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார், எனவே, நாமும் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் எப்பொழுதும் அகந்தையின்றி வாழ வேண்டும் என்று இந்த குடில் நமக்கு நினைவுபடுத்தும். அது மட்டுமின்றி, பிறக்கவிருக்கும் பாலன் இயேசு நம் வீட்டிலும் பிறக்க வேண்டும் என்ற எதிர்நோக்குடனும்தான் அனைவரது வீட்டிலும் குடில் வைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மணிகள், கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியைக் குறிக்கின்றன. கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, தேவாலயங்களில் மணிகள் அடிக்கடி ஒலிக்கப்படுகின்றன. இது, சேவையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கிறிஸ்துமஸ் மணிகள், அலங்காரங்களில் கிறிஸ்துமஸ் மந்திரத்தில் தொங்கவிட்டு அழகுபடுத்துவது உண்டு. குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்ப்பு விழா திருப்பலியில், ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடும்போது பாடல் குழுவில் உள்ள சிறுவர்கள் தொடர்ந்து மணி அடித்து கொண்டு இருப்பர்.
கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் ஆலயங்களிலும், வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு மணிகள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், நட்சத்திரங்கள், ஜெ வடிவம், பரிசுப்பெட்டிகள், மெரி கிறிஸ்துமஸ் வார்த்தைகள் போன்ற பல அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப்படுகின்றன. ஐரோப்பாவின் பல பகுதிகளில், கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க மெழுகுவர்த்திகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் காலத்தில், கேண்டிகேன் லைனர்கள், கேண்டிகேன் கிறிஸ்துமஸ் மர பண்ணை, கேண்டிகேன் பாதை விளக்குகள் போன்றவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். 1670-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் வழிபாட்டிற்காக சிறுவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். அப்பொழுது பாடகர் குழு தலைவர் ஒருவரால் அவர்களுக்கு உண்பதற்காக கொடுக்கப்பட்ட இனிப்பு மிட்டாய்தான் கிறிஸ்துமஸ் கேண்டிகேன். அது ‘ஜெ’ வடிவத்தில் இருந்தது. சிலர் ‘ஜெ’ என்பது இயேசுவை குறிப்பதாகவும், அதில் உள்ள சிவப்பு நிறக் கோடுகள் இயேசு ரத்தம் சிந்தியதை குறிப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்துமசுக்கு முந்தைய நான்கு வாரங்களும் திருவருகை காலம் என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அட்வன்ட்’ என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆலயங்களில் பச்சை நிற கிளைகளால் ஆன ஒரு வளையம் வைக்கப்பட்டு அதில் 4 மெழுகுவர்த்திகள் வைக்கப்படுகின்றன. 4 வாரங்களும் ஒவ்வொரு மெழுகுவர்த்திகளாக ஏற்றப்படுகின்றன. இந்த மெழுகுவர்த்திகளுள் 3 திரிகள் ஊதா நிறத்திலும் ஒரு திரி ரோஸ் நிறத்திலும் இருக்கும்.
முதல் வாரம் ஏற்றப்படும் ஊதா மெழுகுவர்த்தி நம்பிக்கையையும், இரண்டாம் வாரம் ஏற்றப்படும் ஊதா மெழுகுவர்த்தி அமைதியையும், மூன்றாம் வாரம் ஏற்றப்படும் ரோஸ் மெழுகுவர்த்தி மகிழ்ச்சியையும், நான்காம் வாரம் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி அன்பையும் அடையாளப்படுத்துகிறது. சமீபகாலமாக 5-வதாக வெள்ளை மெழுகுவர்த்தி ஒன்றும் வைக்கப்படுகிறது. இந்த வெள்ளை மெழுகுவர்த்தி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்றப்படுகிறது. இதனை கிறிஸ்து மெழுகுவர்த்தி என்றும் அழைக்கின்றனர்.
கிறிஸ்மஸ் அட்டைகள் பொதுவாக கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய வாரங்களில் ஆசியாவில் பல மக்களால் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. பாரம்பரிய வாழ்த்து "உங்களுக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று கூறுகிறது. இந்த வாழ்த்துக்களில் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. கி.பி. 1843-ம் ஆண்டு சர்ஹென்றிகோல், நண்பர்களுக்கு அனுப்புவதற்காக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வரைந்து கொடுக்க சொன்னார். இதுவே முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையாக கருதப்படுகிறது. அந்த வாழ்த்து அட்டைகளை சுமார் ஆயிரம் பேருக்கு அனுப்பி வைத்தார்.