“ஒளிமயமான எதிர்காலம்”

“ஒளிமயமான எதிர்காலம்”
Published on

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்

ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.

பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தூரதேசங்களுக்குக் குடியேறியவர்கள், இன்றும் நம் பாரம்பரிய நுண்கலைகளைக் கற்று, கற்பித்து, உலகளவில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள்! அத்தகைய பலருள் இவரும் ஒருவர். பாரம்பரிய இந்தியக் கலைகளை ஊக்குவித்து, பேணி பாதுகாத்து வருபவர் -  ஷோபனா சுஜித்குமார். இவர் அமெரிக்காவில் இசை, நடன நிகழச்சிகளுக்கான ஒரு சபையை நிறுவி, அதைச் சிறப்பாக நடத்தி வருகிறார் ஷோபனா... சந்திப்போமா...

நீங்கள் நடத்தி வரும் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஃபைன் ஆர்ட்ஸ் பற்றி?

இறையருளால் ஏப்ரல் 2012 இல் இந்த சபாவை கலிஃபோர்னியா மாகணத்தில் தொடங்கினேன். லால்குடி ஸ்ரீமதி பிரம்மானந்தத்தின் புதல்வி விதூஷி அனுராதா ஸ்ரீதர் துவக்கி வைத்தார். லாப நோக்கற்ற அமைப்பாக 2014இல் அங்கீகாரம் கிடைத்தது.. யுவதரங்கணி, சங்கீதோத்ஸவம், பல்லவி திருவிழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் உள்பட, இதுவரை 1050 கச்சேரிகளை நடத்தியுள்ளோம். எங்கள் பெற்றோர் கீதா மற்றும் கிருஷ்ணன் அவர்களின் நினைவாக 'கிருஷ்ணகீதம் பர்ஃபாமிங் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும்  நடத்தி வருகிறோம். அமெரிக்கா தவிர இந்தியா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்தச் சபாவை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவா எப்படி வந்தது? சவால்கள் இருந்தனவா?

இந்த விரிகுடா பகுதியில் பயிலும் மாணவர்களின் ஆர்வம், வேட்கை, அர்ப்பணிப்புதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது.

இந்தியாவிலிருந்து பல மைல்கள் தள்ளி வேற்று தேசத்தில் வசித்தாலும், நம்முடைய பாரம்பரிய பொக்கிஷமான சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் விடாமல் இவர்கள் கற்றுத் தேர்ந்து வருவது மற்றொரு காரணம். இந்த ஜில்லாவில் வசிக்கும் ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பினாலும், ஆச்சார்யன் கிருபையினாலும் நான் எந்த பெரிய சவாலையும் இதுவரை சந்தித்ததில்லை.

நீங்கள் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறீர்களா?

இல்லை. சங்கீத, நாட்டிய நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தி வருகிறேன்.

இந்தியாவிலிருக்கும் கட்டமைப்பு மாதிரி அமெரிக்காவில்  இல்லாவிட்டாலும், அங்குள்ள இளம் இசை பயிலும் மாணவர்களால் எப்படி இத்தகைய நுண்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, உலகளவில் நிகழ்ச்சிகளை வழங்க முடிகிறது?

நீங்கள் சொல்லும் கட்டமைப்பு பெரிய அளவில் இங்கு இல்லாவிடிலும், தேவையான கட்டமைப்பு உள்ளது. இந்த விரிகுடாப் பகுதியை தவிர, இந்த தேசத்தின் பல பகுதிகளிலும் நல்ல குருமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறந்தமுறையில் கச்சேரிகளை வழங்க மாணவர்களைத் தயார் செய்கிறார்கள். பல பெரிய, சிறிய சபாக்கள் இவர்களுக்கு வருடம் முழுவதும் கச்சேரி செய்ய வாய்ப்பளிக்கிறார்கள்.

அமெரிக்காவில் 1980களின் காலகட்டத்தை ஒப்பிடும் பொழுது தற்போதைய சங்கீதச் சூழல் எப்படி உள்ளது?

ஒளிமயமாகத்தான் உள்ளது. கடந்த இருபது வருடங்களாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாணவர்கள் வசிக்கும் ஜில்லாவிலேயே நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். அபாரமான தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலமாக தற்பொழுது மாணவர்கள், இந்தியாவில் வசிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் கற்று வருகிறார்கள். இனியும் கலை வளரும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com