குஜராத்தின் பாரம்பரியம் - கர்பா நடனம்!

குஜராத்தின்  பாரம்பரியம் - கர்பா நடனம்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

நான் குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். மூன்றாம் ஆண்டில் எலக்ட்டிவ் (Elective course) பாடத்தின் ஒரு பகுதியாக  கர்பா நடனம் இருந்தது. அதனால், நான் அதை முறைப்படி கற்றுக்கொண்டேன். அந்த நடனத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் அறிந்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தத் தகவல்களை இந்த நவராத்திரி பண்டிகையின் சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கர்பா நடனம்;

ர்பா (Garba) நடனம் என்பது குஜராத்தின் மிகவும் பாரம்பரியமான ஒரு நடனம். வசந்த பஞ்சமி, ஹோலிப்பண்டிகை மற்றும் நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது இரவுகளிலும் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் இது. பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையாக வைத்து, ஒன்பது சக்திவடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன கர்பா பாடல்கள்.

நவராத்திரியின்போது, இரவில் பெண்கள் தம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தெருமுனையில் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் கைகளில் துளையிடப்பட்ட மண்பானையின் உள்ளே எரியும் விளக்கு இருக்கும். டோலி எனப்படும் இசைக்கருவியின் இசைக்கேற்ப வட்ட வடிவமாக சுற்றி நின்று கைகளைத் தட்டி பாடிக் கொண்டே லயத்துடன் நடனம் ஆடுகிறார்கள். நடுவில் அம்பா எனப்படும் துர்க்காதேவியின் சிலையோ படமோ வைக்கப்பட்டு, அதன் முன் துளைகள் கொண்ட ஒரு மண் பானைக்குள், கர்பா தீப் (கருவறை விளக்கு) என்று அழைக்கப்படும் ஒரு களிமண் விளக்கை வைத்து, அதைச் சுற்றி நடனம் நிகழ்கிறது.  நடனம் தொடங்கும்முன், அம்பிகைக்கு ஆர்த்தி எடுத்து, துர்க்கா தேவிக்கும் மஹிஷாசூரனுக்கும் நடந்த போரை ஒரு நாடகமாக நிகழ்த்துகிறார்கள்.

கர்பா – விளக்கம்:
ர்பா என்ற சொல் கருப்பைக்கான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. இச்சொல்லின் பொருள் கருக்காலம் அல்லது கர்ப்ப வாழ்க்கை ஆகும். துளையிட்ட  பானை ஒரு தாயின் கருவறையையும், உள்ளிருக்கும் விளக்கு வயிற்றில் உள்ள சிசுவையும் குறிக்கிறது. குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள் இந்த கர்பா நடனத்தை ஆடினால் அவருக்கு குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.

வாழ்க்கைத் தத்துவம்:

க்தி தேவியின் படம் அல்லது சிலையை நடுவில் வைத்து நடனம் ஆடுவது மனித வாழ்க்கை  நிலைத் தன்மையற்றது என்பதைக் குறிக்கிறது. மனித வாழ்க்கையில், பிறப்பு, மரணம், மீண்டும் மறுபிறவி என்று மனிதனுடைய வாழ்க்கை நிலை இல்லாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது. ஆனால், என்றும் மாறாத நிலைத்தன்மையுள்ள ஒரே விஷயம் கடவுளான தேவி மட்டுமே என்று இந்த நடனம் வலியுறுத்துகிறது. இதன் அடையாளமாகவே ஒரு சுழல் வட்டத்திற்குள், கலைஞர்கள் நடனம் ஆடுகிறார்கள்.

கர்பா தீபத்திற்கு மற்றொரு குறியீட்டு விளக்கம் உள்ளது. பானை மனித உடலாகவும், உள்ளிருக்கும் விளக்கு தேவியின் வடிவம் எனவும் கருதப்படுகிறது. எல்லா மனிதர்களுக்கும் தேவியின் தெய்வீக ஆற்றல் தங்களுக்குள் நிரம்பியுள்ளது என்பதை விளக்கவே கர்பா நடனக் கலைஞர்கள் இந்த விளக்கு சின்னத்தைச் சுற்றி நடனமாடுகிறார்கள்.

வண்ணமயமான ஆடைகள்:

ஆண்கள் மற்றும் பெண்கள்  கர்பா நடனத்தின்போது வண்ணமயமான ஆடைகளை அணிவார்கள். கர்பா நடனக் கலைஞரின் பாரம்பரிய உடை சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற பிரகாசமான வண்ணங்களில் உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் சானியா சோளி என்கிற உடை அணிகிறார்கள். இது, மணிகள், சோழிகள், கண்ணாடிகள், நட்சத்திரங்கள் மற்றும் பூ வேலைப்பாடுகளால்  அலங்கரிக்கப் பட்டிருக்கும். பெரிய காதணிகள், கழுத்தணிகள், வண்ணமயமான வளையல்கள், இடுப்புப் பட்டைகள் போன்ற கனமான நகைகளை அணிவார்கள். சிறுவர்களும் ஆண்களும் காஃபினி பைஜாமாக்களை - ஒரு கக்ராவுடன் முழங்கால்களுக்கு மேல் வரை ஒரு குறுகிய வட்டமான குர்தா மற்றும் பாகடி துப்பட்டா, தலையில் பாந்தினி துப்பட்டா, வளையல் மற்றும் நெக்லஸ் அணிந்துகொள்கிறார்கள். 

கர்பா நடனத்தின் சிறப்பு:

தன் சுழற்சியான நடன அசைவுகள் சூஃபி கலாச்சார நடனம் போன்ற ஆன்மிக நடனத்தின் சாயலைக் கொண்டுள்ளது. குஜராத்தின் பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படும்  தாண்டியா ராஸ் எனப்படும் நடனத்தில் நவீன கர்பா நடனத்தின் தாக்கம் காணப்படுகிறது. கர்பா இப்போது உலகளவில் பாராட்டப்பட்ட நடனமாகத் திகழ்கிறது. தற்போது கர்பா மற்றும் தண்டியா ராஸ் ஆகியவை அமெரிக்க ஐக்கிய நாடுகளி லும் பிரபலமாக உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com