

நம் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்திற்கு சிறப்பு பெற்றவை. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று கூறுவார்கள். இந்த துலா மாதத்தில் கங்கையே காவிரி ஆற்றில் வசிப்பதால், இந்த மாதம் முழுவதும் புனித நீராடலுக்கு சிறப்பு பெற்றது. துலா மாதத்தில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், காவிரி ஆற்றில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேறி, இறுதி காலத்தில் முக்தியும் கிட்டுமாம். காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், இதைத் தவிர சப்தஸ்தான தலங்களான திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவிரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதபடுகின்றன.
ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் காவிரியில் நீராடுவதை 'கடை முழுக்கு' அல்லது 'கடைமுகம்' என்பார்கள். இது மாயவரத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாயவரத்தில் காவிரியில் சிறப்பு வாய்ந்த துலாக் கட்டம் உள்ளது. இங்கே மாயவரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலிருந்தும் பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரிக்காக காவிரி துலா கட்டத்திற்கு வருகிறார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் துலா ஸ்னானம் செய்து தீர்த்தவாரி காணும் தெய்வங்களை தரிசிக்கவும், மயூரநாதரை தரிசிக்கவும் மாயவரத்திற்கு வருகின்றனர்.
கால் நடக்க முடியாத முடவர் ஒருவர் மாயவரம் அருகேயுள்ள கிராமம் ஒன்றிலிருந்து புறப்பட்டு துலா மாதத்தின் கடைசி நாளான கடைமுழுக்கு நாளன்றாவது காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்ய ஆசை கொண்டு மாயவரம் வருகிறார். ஆனால், சரிவர நடக்க முடியாததால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்த அவர் கடைமுழுக்கிற்கு அடுத்த நாளே, அதாவது கார்த்திகை ஒன்றாம் தேதி தான் காவிரிக்கரைக்கு வர முடிந்தது.
அவருடைய பக்தியையும் வைராக்கியத்தையும், விடாமுயற்சியையும் அறிந்த கங்கா தேவி, காவிரியில் கூடுதலாக இன்னும் ஒரு நாள் (கார்த்திகை மாதம் ஒன்றாம் நாள்) தங்கி அவருக்கு அருள் பாலித்தாள். துலா முழுக்கிற்கு பின் தன் முடம் நீங்கி சரிவர நடக்க முடிந்த அந்த பக்தரால் அந்த நாளுக்கு 'முடவன் முழுக்கு' என்ற பெயர் ஏற்படது. அதாவது ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் 'கடைமுகம், கடைமுழுக்கு' என்றும், கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் 'முடவன் முழுக்கு' என்றும் அழைக்கப்படுகிறது.
துலா மாதத்தில் பத்து நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் உற்சவம், ஐப்பசி கடைசி நாளன்று 'கடைமுக தீர்த்தவாரி உற்சவத்துடன்' முடிவடைகிறது. இந்த வருடம் கடைமுழுக்கு ஐப்பசி கடைசி நாளான 16.11.25 அன்றும் முடவன் முழுக்கு கார்த்திகை ஒன்றாம் நாளான 17.11.25 அன்றும் வருகிறது.