சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் பலகார உணவாக இடம்பிடித்த வடை, பண்டைய தமிழர்கள் உலகிற்கு வழங்கிய கொடையாகும். எண்ணெயில் வறுத்து எடுப்பதால் வந்த பெயர் - வறை! (வறுவல், வறுக்கி, வற்றல் போன்ற பெயர்களையும் நோக்குக). வறையே பிற்காலத்தில் வடை ஆயிற்று!
எண்ணெயின் சூட்டில் மேற்புறம் (Crispy) மொறுமொறுவென்றும், உள்புறம் மிருதுவாகவும் இருப்பதே சுவையான வடையின் தனித்துவமாகும். மெது வடை, மசால் வடை, அரிசி வடை, ஜவ்வரிசி வடை, ரவை வடை, கீரை வடை, வாழைப்பூ வடை, தயிர் வடை, சாம்பார் வடை, ரச வடை, மிளகு வடை, தவல வடை, ஆம வடை என்று பலவிதமான வடை வகைகள் இருந்தாலும், இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மெது வடையும் மசால் வடையும் மட்டும்தான்!
அடிப்படையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வைத்தே வடைகள் செய்யப்பட்டாலும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கும் முறையில் மட்டும் ஒவ்வொரு வடைக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. அதேபோல ஒவ்வொரு வடைக்கும் ஒரு மகத்துவம் உண்டு. தனிச்சிறப்பான சுவையும் உண்டு, வரலாறும் உண்டு.
மசித்த பருப்பு கொண்டு செய்யப்பட்டதால் மசால் வடை என்று பெயர்! இதற்கு ஆம வடை என்பதே சரியான பெயர். இங்கு பலரும் நினைப்பதுபோல அதன் பெயர் 'ஆமை வடை' இல்லை. கடலைப்பருப்பு + உளுந்து மாவைச் சற்று புளிக்க வைத்து செய்யப்பட்ட வடைக்கு ‘ஆம வடை’ எனப் பெயர். ஆமைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! மேலும், நம்மில் பலரும் மசால் வடை (பருப்பு வடையையே) ஆம வடை எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம் என்பதை இணையம் முதல் யூடியூப் வரை உள்ள காணொளிகள் மூலம் உணர முடிகிறது.
‘ஆமம்’ என்றால் புளிப்புச் சுவையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.
* ஆமம், அமலை என்றால் புளிப்பான சோறு என்று பொருள்.
* ஆம்பலம், ஆமலம் என்றால் அமிலம். அமிலத்தின் சுவையும் புளிப்புதான்.
* ஆமலகம் - நெல்லி, புளி போன்ற அமிலச்சுவை கொண்ட கனிகள்.
* ஆமலகம் என்ற தமிழ்ச்சொல்லே 'அம்லா / அம்லாகி' என வடமொழியில் நெல்லிக்காயைக் குறித்தது. அதேபோல் ஆம்ல - ஆம்ர(ஸ்) எனத்திரிந்து புளிப்புச் சுவை கொண்ட மாங்காயைக் குறித்தது.
தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மற்றொரு வடை - தவல வடை. (தவளைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). வெண்கலத் தவலையின் உள்பக்கமாகத் தட்டி போட்டு எடுத்ததால் அதன் பெயர் தவல அடை என்றழைக்கப்பட்டது. அக்காலத்தில் தவல அடையாகத் தட்டப்பட்டது. கடினமான செய்முறை காரணமாக பிற்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்டு தவல வடையாகச் சிறுத்து விட்டது.
சிறிது காலம் தட்டையான அடிபாகம் கொண்ட ஜாங்கிரி செய்யப் பயன்படும் தவி என்ற பாத்திரத்தில் தவல வடை பொரித்தெடுக்கும் வழக்கமும் இருந்தது. ஆனால், இக்காலத்தில் பாரம்பரியமான செய்முறை கடினம் என்பதால் அனைத்து வடைகளையும் வாணலியில் மட்டும் பொரித்தெடுக்கிறோம்.