வியக்க வைக்கும் வீணை வாசிப்பு! ஆஸ்திரேலிய 'ஐயர் சகோதரர்கள்' !

வியக்க வைக்கும் வீணை வாசிப்பு! 
ஆஸ்திரேலிய 'ஐயர் சகோதரர்கள்' !
Published on

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்

ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.

இரட்டையர்களான ராம்நாத் ஐயர், கோபிநாத் ஐயர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வாழும் இந்தியர்கள். இருவரும் 'ஐயர் சகோதரர்கள்' என்ற பெயரில் இணைந்து வீணை இசைக்கும் கலைஞர்கள். 1997 ஆம் வருடம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் சென்னையின் மார்கழி இசை விழாவில் கலந்து கொள்ள வரும் இவர்களை சந்தித்து அவர்களுடைய இசை பயணத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். அவர்களுடனான பேட்டி இதோ உங்களுக்காக!

உங்கள் குடும்பத்தில் நீங்கள் முதல் தலைமுறை இசைக் கலைஞர்களா? வீணையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?

ஆம். நாங்கள் இருவரும் முதல் தலைமுறை இசைக் கலைஞர்கள்.   வீட்டில் எப்போதும் வானொலியில்  கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும். எங்களுக்கு 13 வயதானபோது நாங்கள் புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம்.  பக்கத்து வீட்டில் ஒரு வீணை ஆசிரியர் இருந்தார். அடுத்த வீட்டிலிருந்து ஒலித்த இனிமையான அந்த வீணை இசை எங்களுடைய மனதைக் கவர்ந்தது. நாங்கள் அந்த ஆசிரியரிடமிருந்து வீணை கற்றுக் கொள்ள எங்கள் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தோம். இப்படியாக, ஸ்ரீமதி ராஜகோபாலன் அவர்க தான் எங்களுடைய முதல் குரு. நாங்கள் இருவரும் சேர்ந்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். வித்வான்கள் சிட்டிபாபு, ஈமனி சங்கர சாஸ்திரி, வீணை E. காயத்ரி போன்றவர்களுடைய கச்சேரிகளைக் கேட்டது எங்களுடைய வீணை வாசிக்கும் ஆர்வத்தைப் பன்மடங்கு தூண்டியது.

 உங்களுடைய குருமார்களைப் பற்றியும் உங்களுடைய இசைப் பரம்பரையின் சிறப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே…

பால பாடங்கள், வர்ணங்கள் கிருதிகள் வரை சுமார் இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீமதி இராஜகோபாலன் அவர்களிடமிருந்து பயின்றோம். எங்களுடைய பள்ளி இறுதிப் படிப்பின் இரண்டு வருடங்கள் வீணை கற்றுக் கொள்ள முடியாமல் போனது. தொழில் நுட்பப் படிப்பிற்காகக் கல்லூரியில் சேர்ந்தவுடன் வித்வான் ஆர். பிச்சுமணி ஐயர் அவர்களின் அறிமுகம் ஒரு உறவினர் மூலமாகக் கிடைத்தது. அவரிடம் ஏழு வருடங்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டோம். வாரத்திற்கு மூன்று முறை குறைந்த பட்சம் இரண்டு மணி நேர வகுப்புகள். கற்றுக் கொண்டதை உள் உள்வாங்கி, ஒவ்வொரு நாளும்  அதிகாலையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபடுவோம். 1982 ஆம் வருடம் எங்களுடைய குரு மயிலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் எங்கள் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்து, முதுகலைப் பட்டமும் படித்தபின் வேலை நிமித்தமாக நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டி வந்தது. 1992 ஆம் வருடம் நாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவில் இணைந்து ஒன்றாக வீணை வாசிக்கத் தொடங்கினோம்.

எங்களுடைய வீணை இசையை மேம்படுத்திக் கொள்ள 1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரை குரு திருவனந்தபுரம். ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம்  இணைந்தோம். ஒவ்வொரு வருடமும் அவரை ஆஸ்திரேலியாவிற்கு வரச் செய்து, முழு ஈடுபாட்டுடன் அவர் கற்றுத்தந்ததை சரிவரக் கற்றோம்.

எங்களுடைய இரு குருமார்களுமே பிரபல வீணை வித்வான் கே.எஸ்.நாராயணசுவாமி அவர்களின் சீடர்கள். தஞ்சாவூர் வழி.  பரமகுரு உருவாக்கிய பாணியில், குரு பிச்சுமணி ஐயர் மற்றும் திருவனந்தபுரம் வெங்கட்ராமன் இருவரும் மேலும் பரிமளிக்கச் செய்து எங்களுக்கு அப்பாடாந்திரத்தை வழங்கி இருக்கிறார்கள். விளம்ப காலத்திலும் சரி, துரித காலத்திலும் சரி, விரல்களைப் பயன்படுத்தி நாங்கள் ஏற்படுத்தும் கமகங்கள் மிகத் துல்லியமாக ஒலிக்கும்.  ரவைச் சங்கதிகளையும் ஸ்புரிதங்களையும் நல்ல முறையில் வழங்க விரல்களைப் பிரித்து வாசிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்துவோம். வாய்ப்பாட்டிற்கு இணையாக வீணை வாசிப்பிலும் நம்மால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான், இந்த வழியின் சிறப்பே. வாத்தியத்தின் நாதத்தையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். தாளத் தந்திகள் இந்தப் பாணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தாளம் போடும்போது மட்டுமல்லாமல் தானம் வாசிக்கும் போது தாளத்தந்தியைப் பயன்படுத்துவது இசையின் மெருகைக் கூட்டும்.

1997 முதல் வீணை தனம்மாள் இசை வழிவந்த விதூஷி ரமா ரவி அவர்களிடம் பல புதிய  உருப்படிகளை வாய்ப்பாட்டில் பயின்று வருகிறோம்.

வீணைக் கச்சேரிகளில் இங்கு ரசிகர் கூட்டம் அவ்வளவாகத் தென்படுவதில்லை. ஆஸ்திரேலியாவில் எப்படி? ஒரு வருடத்திற்குச் சுமாராக எவ்வளவு கச்சேரிகள் செய்கிறீர்கள்? கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை கேட்டு ரசிக்க இந்தியர்கள் அல்லாதவர்களும் வருகிறார்களா?

1994 தொடங்கி 2019 வரை தொடர்ந்து சென்னை  இசை விழாவில் நாங்கள் கலந்து கொண்டு கச்சேரிகள் வழங்கி வருகிறோம்.  வீணைக் கச்சேரிகளுக்கு நீங்கள் குறிப்பிட்டது போலக் குறைந்த அளவே ரசிகர்கள் வருகிறார்கள். திருச்சி, பெங்களூரு, ஷிமோகா, மைசூர், கொச்சின், திருப்பணித்துரா, மும்பை போன்ற மற்ற நகரங்களிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் நாங்கள் வாசித்திருக்கிறோம். இந்த இடங்களில் கூட்டம் அதிகம் வருகிறது என்றே சொல்லலாம். 

இந்திய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய நாட்டின் இசை ரசிகர்கள் மத்தியிலும் வீணை இசையைக் கொண்டு செல்வதில் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்.  ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு வருடத்திற்கு 10 முதல் 12 கச்சேரிகள் வாசிக்கிறோம்.  இந்திய இசை அமைப்புக்கள் ஏற்பாடு செய்யும் கச்சேரிகளுக்குப் பெரும்பாலும் இந்திய, இலங்கை நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ரசிகர்களே வருகிறார்கள். ஆனால் முக்கிய பெரிய அரங்கங்களில் கச்சேரிகள் செய்யும்போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்களும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில், உலக இசையை ஊக்குவிக்கும் 'The Boite' என்ற நிறுவனம் நடத்தும் இசை நிகழ்ச்சியில் கடந்த 20 வருடங்களாக நாங்கள் பங்கு கொள்கிறோம்.

உங்கள் குருவின் பெயரில் நீங்கள் தொடங்கி இருக்கும் உங்களுடைய இசைப் பள்ளியை பற்றிச் சொல்லுங்கள். உங்களிடம் இசை பயிலும் மாணவர்கள் சங்கீதத்தை எவ்வளவு  தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்?

1990 ஆம் வருடம் வீணை மற்றும் வாய்ப்பாட்டு கற்றுத் தருவதற்காக எங்கள் குரு ஆர். பிச்சுமணி ஐயர் அவர்களின் பெயரில் ஒரு இசைப் பள்ளியைத் தொடங்கினோம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் கலாச்சாரத் தூதுவர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இசைக்கல்வியைப் போதிக்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல், கச்சேரிகள், விளக்க உரைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியும் நிகழ்ச்சிகள் வழங்குகிறோம். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50 மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களில் 13 பேர் அரங்கேற்றம் மேற்கொண்டு சிலர் முனைப்பாக கச்சேரிகள் தருவதோடு கர்நாடக சங்கீதத்தைக் கற்பித்தலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவருமே இந்திய, இலங்கை நாட்டின் இரண்டாம் தலைமுறைக் குடிமகன்களாக ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். ஆஸ்திரேலிய சமுதாயத்திலிருந்தும் சில ஆர்வமுள்ள மாணவர்கள் அவ்வப்போது வருகிறார்கள்.

இந்தியாவிலிருந்து வீணை இசைக் கலைஞர்களை வரச் செய்து ஆஸ்திரேலியாவில் கச்சேரிகள் ஏற்பாடு செய்கிறீர்கள். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

வீணையின் பெருமைகளை விளக்கவும், பல்வேறு பாணிகளை வெளிப்படுத்தவும் ஆஸ்திரேலியாவில் கச்சேரிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. வீணை  இசையைக் கேட்க இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு வரும் இளம் தலைமுறையினர், ஆர்வம் மேலிட்டு  வீணை வாசிக்கத் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

 2017 ஆம் ஆண்டு இந்த விழாவை நாங்கள் தொடங்கினோம்.  ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்து கலைஞர்களையும், சென்னையிலிருந்து வித்வான் முடிகொண்டார் ரமேஷ் அவர்களையும் வரவழைத்து 'மெல்பர்ன் வீணை இசை விழா' நடத்தினோம். உலக அளவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 2020 ஆம் ஆண்டு முதல் இதை நாங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடத்தத் தொடங்கினோம். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவிலிருந்தும் பல புகழ் பெற்ற வீணைக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 2022 ஆம் ஆண்டு, அதாவது இந்த ஆண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கச்சேரிகள் நடந்தன.  உள்ளூரிலிருந்து நிறைய நிறுவனங்களின் உதவி எங்களுக்குக் கிடைக்கிறது. 'மெல்பர்ன் வீணை பெஸ்டிவல்' என்ற youtube சேனலில் இந்தக் கச்சேரிகளை நீங்கள் இப்போதும் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.  எங்களுடைய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக ஒரு விழாவை நாங்கள் வருடா வருடம் நடத்துகிறோம். இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களைக் கொண்டு நிறைய விளக்க உரை நிகழ்ச்சிகளையும் வீணைக் கச்சேரிகளையும் எங்களுடைய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்கிறோம்.

 பிற கலைஞர்களுடன் இணைந்து நீங்கள் கச்சேரிகள் வழங்கியது உண்டா?

சித்தார், வயிலின், சரோடு வாசிக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து 'ஜுகல் பந்தி' நிகழ்ச்சிகள் நிறைய வழங்கி இருக்கிறோம். சமீபத்தில் டிராம்போன் (Trombone) என்ற இசைக் கருவியை வாசிக்கும் ஆஸ்திரேலிய ஜாஸ் இசைக்கலைஞருடன் இணைந்து, ராகம், தானம்  பல்லவியைக் கல்யாணி ராகத்தில் வாசித்தோம். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆஸ்திரேலிய நாட்டின் அங்கீகாரம் உங்களுக்கு எந்த அளவிற்கு கிடைத்திருக்கிறது?

ஆஸ்திரேலிய அரசின் கலைத் துறையிடமிருந்து எங்களுடைய பல நிகழ்ச்சிகளுக்கு நிதி உதவி கிட்டியிருக்கிறது. 'செலக்டட் காம்போசிஷன்ஸ் ஆஃப் முத்துசாமி தீக்ஷிதர்' என்ற எங்களுடைய முதல் ஒலிப்பேழைக்கு ஆஸ்திரேலிய கவுன்சிலின் நிதி உதவி கிடைத்தது. பிச்சுமணி ஐயர் அவர்களிடமும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமிருந்தும் 1997 ஆம் வருடம் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காகவும் எங்களுக்கு அவர்கள் கிரான்ட் வழங்கினார்கள். வருடா வருடம் நாங்கள் நடத்தும் மெல்பர்ன் வீணை ஃபெஸ்டிவலுக்கு, ஆஸ்திரேலியா கவுன்சிலிடமிருந்தும், the Boite  மற்றும் மாநில அரசுத் துறை நிறுவனமான 'மல்டி கல்ச்சுரல் ஆர்ட்ஸ் விக்டோரியா' என்ற அமைப்பிலிருந்தும் உதவி கிடைக்கிறது.

2010 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவின் பிரிமியர் ஆப் தி ஸ்டேட் ஆஃப் விக்டோரியா எங்களுக்கு 'மல்டி கல்ச்சுரல் அவார்ட் ஃபார் எக்ஸெலன்ஸ்'  என்ற விருது வழங்கி கௌரவித்தார்கள். மொழி, மதம், இனம், கலாச்சாரத்தால் வேறுபட்ட மக்களுக்கு இசையைக் கொண்டு சேர்த்து, சங்கீதத்தின் மூலம் அனைவரையும் ஒன்று படுத்தும் எங்களுடைய முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது.

உங்களுடைய விரல்கள் வீணையை மட்டும் மீட்டுவதில்லை. ஓவியங்களையும் தீட்டுகின்றன.  உங்களுடைய இந்த கலை ஆர்வை பற்றி.. 

சிறு வயது முதலே ஓவியத்தை முறையாகப் பயின்று பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறோம். 'கோவிட்' காலத்தின் போது நிறைய நேரம் கிடைத்ததால்,   ஓவியத்தில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோம். வாட்டர் கலர்ஸ், ஆயில் பெயிண்டிங் போன்ற பல்வேறு மீடியம் மூலமாக ஓவியங்கள் தீட்டுகிறோம். எங்களுடைய பல ஓவியங்கள் கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. ரங்கோலி வழங்குவதிலும் எங்களுக்கு ஈடுபாடு உண்டு. சென்னை கிரி டிரேடர்ஸ் நடத்திய சர்வதேச அளவிலான போட்டியில் எங்களுடைய ரங்கோலி இடம்பெற்றது. இந்த வருடம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலும் தனிப்பட்ட முறையில்  ஓவியக் கண்காட்சி நடத்தினோம்.

சென்னை மார்கழி கச்சேரி சீஸனில் படு பிஸியாக இருக்கும் ஆஸ்திரேலிய வீணை சகோதரர்கள் கல்கி ஆன்லைன்க்காக நேரம் ஒதுக்கி நேர்த்தியான பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டதில் மனம் மகிழ்ந்தோம். இனிய வீணை வாசிப்புப் போலவே அவர்களது உரையாடலும் அமைந்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com