திரும்பிப் பார்க்க வைக்கும் திருமலைக்கோட்டை அதிசயங்கள்!

Amazing wonders of Thirumalaikottai
Amazing wonders of Thirumalaikottaihttps://ta.wikipedia.org

துவரை எத்தனையோ சிவன் கோயில்களை பார்த்திருந்தாலும் குகைக்குள் அமைந்திருக்கும் சிவனை பெரிதாக தமிழ்நாட்டில் கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும். அத்தகைய குகையில் இருக்கும் அதிசய சிவன் கோயில் தமிழ்நாட்டில் உள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

புதுக்கோட்டையிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது திருமயம் கோட்டை. இக்கோட்டையை விஜய ரகுநாத சேதுபதி 1687ல் கட்டினார். இக்கோட்டையை 2012ல் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையம் புனரமைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருமலைக்கோட்டை கோயில் திருக்குளம்
திருமலைக்கோட்டை கோயில் திருக்குளம் https://pudukkottai.nic.in

இக்கோட்டை ஏழு மதில் சுவர்களை கொண்டதாகும். ஆனால், தற்போது நான்கு சுவர்களே மிஞ்சியிருக்கிறது. இக்கோட்டைக்கு செல்ல மூன்று வழிகள் வடக்கு, தெற்கு, கிழக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு நுழைவாயில் பகுதியிலும் பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோட்டையைக் கட்டி முடிக்க 39 ஆண்டுகள் ஆனது என்று கூறப்படுகிறது. இக்கோட்டைக்குள் இருக்கும் மிகபெரிய பாறையில் 8000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவப்பு நிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

இருபது அடி உயரத்தில் பிரம்மாண்டமான மேடை கட்டப்பட்டிருக்கிறது. இதை பீரங்கி மேடை அல்லது கொத்தல மேடை என்று அழைக்கிறார்கள். இதற்கு மேலே ஒரு பெரிய பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் இங்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கோட்டை வட்டமான வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையை சுற்றி அகழிகள் அமைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

திருமலைக்கோட்டை மதில்சுவர்
திருமலைக்கோட்டை மதில்சுவர்https://pudukkottai.nic.in

இக்கோட்டையை, ‘ஊமையன் கோட்டை’ என்றும் அழைக்கிறார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் இக்கோட்டையில் வந்து தங்கியிருந்ததாகவும் ஊமைத்துறை ஆங்கிலேயருக்கு தகவல் கொடுத்து கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்ததும் இங்கேதான் நிகழ்ந்தது என்றும் கூறுகிறார்கள். இக்கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் பராமரித்து பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கே சிவனுக்காக கட்டப்பட்டிருக்கும் குடைவரை கோயில் போன்று இந்தியாவிலே எங்கேயும் காண இயலாது என்றே சொல்லலாம். அந்தரத்திலே அமைக்கப்பட்டிருக்கும் சிவன், தரைத்தளத்திலிருந்து 30 அடி உயரத்திலிருக்கும் பாறைக்கு நடுவிலே குடையப்பட்டு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கோட்டை மதில்சுவர்
திருமலைக்கோட்டை மதில்சுவர்https://ta.wikipedia.org

இந்த சிவனை தரிசிக்க இப்போது இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முற்காலத்தில் மக்கள் எப்படி இந்த சிவனை தரிசித்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இக்குகையில் இருக்கும் சிவலிங்கம் சதுர ஆவுடையார் ஆவார். இந்த சிவலிங்கம் தாய்பாறை சிவலிங்கமாகும். அதாவது சிவலிங்கத்தை தனியாக செதுக்கி எடுத்து வந்து இங்கு வைக்கவில்லை. இக்குகையை குடையும் பொழுதே அத்துடன் சேர்த்து சிவலிங்கத்தையும் செதுக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கோட்டையில் மிகவும் பழைமையான இரண்டு கோயில்கள் உள்ளன. அவை சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், சத்தியகிரீஸ்வரர் சிவன் கோயில்களாகும். இரண்டுமே குடைவரை கோயில்களாகும். கோட்டைக்கு அடிவாரத்திலே அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது.

சத்தியகிரீஸ்வரர் கோயிலில் இருக்கும் புனிதமான மரம் மூங்கிலாகும். இந்த இடத்தை, ‘வேணுவனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். வேணு என்றால் மூங்கில் என்று பொருள். இங்கிருக்கும் அம்பாள் ‘வேணுவனேஸ்வரி’ என்று அழைக்கப்படுகிறார். இங்கே இருக்கும் குளத்தின் பெயர் சத்திய புஷ்கரணியாகும். சந்திரன் இங்கே வந்து வணங்கியதால், ‘சந்திர புஷ்கரனி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வேடிக்கையான மனிதராக இருப்பது எப்படி?
Amazing wonders of Thirumalaikottai

இங்கிருக்கும் குளமானது எண்கோணகுளம் என்றும் அழைக்கப்படுகிறது. தாமரை மலர் போன்ற தோற்றம் கொண்ட இக்குளத்திற்கு எட்டுப்படித்துறைகள் இருப்பதால் எண்கோணக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இத்தீர்த்த குளத்தில் இருக்கும் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என்று கூறினாலோ பாவங்கள் விலகிவிடும் என்று நம்பப்படுகிறது. இக்குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையிலேயே இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோட்டையையும், கோயில்களையும் ஒருசேர பார்க்க மக்கள் கூட்டம் இங்கு வருகிறது. ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் திருமலைக்கோட்டைக்கு நீங்களும் ஒரு முறை சென்று தரிசனம் பெற்று வாருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com