
கடல் கடந்து விரியும் நம் கலை
கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்
ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.
மாணவர்களின் அதீத ஈடுபாடு மற்றும் கணினி, தகவல் தொடர்பு தொழில் நுட்ப மேம்பாடு காரணமாக, அயல் நாடுகளில் கடந்த 25 வருடங்களாக கர்நாடக இசை இமாலய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பழைமையான ஒரு சபையின் தொடக்கம், மற்றும் வளர்ச்சியைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அதன் தற்போதைய தலைவர் செளம்யன்.
Carnatic Music Association of North America (CMANA) என்ற இலாப நோக்கமற்ற நிறுவனம் நியூயார்க் மாநகரத்தில், 46 வருடங்களுக்கு (1976) முன்பு ஆரம்பிக்கப்பட்டு, இன்றளவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் நோக்கமே இந்திய பாரம்பரியப் பொக்கிஷமான கர்நாடக இசையை அமெரிக்கா முழுவதும் பரப்பி, அங்கு வசிக்கும், இசை பயிலும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்கள் தேர்ச்சி பெற்றதும் கச்சேரி செய்வதற்குத் தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து, ஒரு கலாசாரப் பாலமாகத் திகழ்வதுதான்.
1970கள்... இந்தியாவில் வசிக்கும் கர்நாடக இசைக் கலைஞர்கள் வெளிநாடுகள் சென்று அதிகக் கச்சேரிகள் செய்யாத காலம். அந்தக் காலகட்டத்தில் இந்நிறுவனம், எம்.எல். வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், லால்குடி ஜெயராமன் போன்ற இசை மேதைகளை அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களுடைய கச்சேரிகளை நடத்தியது. மேலும், சித்ரவீணை ரவிகிரண், சுதா ரகுநாதன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மற்றும் பல முன்னணிக் கலைஞர்கள் முதன் முறையாக அந்நாட்டில் இசைப்பயணம் மேற்கொள்ள வழி வகுத்தது.
1980இல், வாஷிங்டன் டிஸி, அட்லாண்டா போன்ற பல நகரங்களில், கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மையங்களை உருவாக்கி அவர்களுக்கு மானியம் வழங்கினோம். இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் இன்றும் இந்த தேசத்தில், கர்நாடக இசை பரந்து விரிந்து வருகிறது. அதற்கு நாங்களும் ஒரு பங்கு ஆற்றியுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இன்று அமெரிக்காவில் உள்ள இந்தக் கட்டமைப்பு இந்தியாவுடன் மிகவும் இணக்கமாக உள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் இங்குள்ள மாணவர்கள் இந்திய ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு இசையின் நுட்பமான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் பல இசைக் கலைஞர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களின் பெரிய சபாக்களில் கச்சேரி செய்து கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
குழந்தைகள் தங்கள் பள்ளி/கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்து விடவேண்டுமென்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கற்பதை ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் நிறுத்த முடியாது. வாழ்நாள் முமுவதும் கற்க வேண்டும் என்று பெற்றோர்கள் உணர வேண்டும். அதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
தனி நபர் மற்றும் அமைப்பாளர்களின் 50 ஆண்டு கால உழைப்பினாலேயே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது. இருப்பினும், இசைக் கச்சேரிகள் பல்வேறு நகரங்களின் முக்கியமான அரங்கங்களில் இன்னும் அடிக்கடி நடைபெறுவதற்கு உண்டான பணிகள் செயல்பாட்டிலேயே உள்ளன என்று நாங்கள் நினைக்கிறோம்.
சமீப காலமாக இந்தியர் அல்லாத ரசிகர்கள், கர்நாடக இசையைக் கேட்க வருவதில்லை என்பது சற்று வருத்தமாக உள்ளது. அவர்களின் கவனத்தையும் கவர, அதிக தாள வாத்தியக் கச்சேரிகள் மற்றும் வாத்தியக் கச்சேரிகளைப் பல்கலைக் கழகங்களிலும், நூலகங்களிலும் நடத்த முயல்கிறோம்."