மழைக் காலங்களில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை நாம் இப்பொழுது விஞ்ஞான ரீதியாக அளந்து விடுகிறோம். ஆனால், எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் நம் முன்னோர்கள் மெய்ஞானத்தால் மழையை எப்படி அளவீடு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
உரல் உணர்த்தும் உண்மை: ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானியாக விளங்கியது. அக்காலத்தில் பெரும்பாலும், வீட்டு முற்றத்தில்தான் ஆட்டுக்கல் இருக்கும். மழைக்காலத்தில் முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் ஆட்டுக்கல்லின் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை ‘செவி’ அல்லது ‘பதினு’ எனப்படும். இது 10 மி.மீ. அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப் பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குப்படி 18 மி.மீ. வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக, எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது என்பதைத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்குத் தயாராவார்கள்.
மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம். அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பற்றிக் காண்போம்.
* தூறல் - பசும்புல் மட்டுமே நனைவது. இது விரைவில் உலர்ந்துவிடும்.
* சாரல் - தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
* மழை - ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
* பெருமழை - நீர்நிலைகள் நிரம்பும்.
* அடைமழை - ஐப்பசியில் பெய்வது.
* கனமழை - கார்த்திகையில் பெய்வது.
இதையே அறிவியல் வேறு வகையில் கூறுகிறது.
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
4 முதல் 6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கன மழையாகும்.
மழையைப் பற்றி திருவள்ளுவர் நிறைய பேசியிருப்பதை நாம் அறிவோம். அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது. இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை, கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கெனவே அறிந்தோம். திருவள்ளுவர் இதை, ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது, உலகில் இதுவரையுள்ள நீர் நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.
‘கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி’
இக்குறளில், ‘மாறாநீர்’ என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.