மன அமைதி பூங்காவாய் திகழும் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம்!

அரவிந்தர் ஆசிரமம்
அரவிந்தர் ஆசிரமம்
Published on

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளமாகத் திகழ்வது அரவிந்தர் ஆசிரமம். மன அமைதி தேடிச் செல்பவர்களுக்கு மன நிறைவான அமைதியையும்  எண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளை பறக்க விடும் பூங்காவாகவும் இது திகழ்கிறது. மன அமைதி இருந்தாலே போதும், நம் உடல் ஆரோக்கியம் நிச்சயமாக மேம்படும். ‘மன அமைதி தேடி அங்கு செல்கிறேன், இங்கு செல்கிறேன்’ என்று சொல்பவர்களுக்கு உகந்த ஒரே இடம் அரவிந்தர் ஆசிரமம்தான். அந்த ஆசிரமத்தின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. அரவிந்தர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களால் நிறுவப்பட்டது. அவரைப் போலவே அவரது கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் அவருடன் இணைந்து அந்த ஆசிரமத்தில் ஒன்றாக வாழ ஆரம்பித்து, வாசித்தல், எழுதுதல், தியானம் உள்ளிட்ட அன்றாட வேலைகளை கவனித்து வந்தனர்.

ஸ்ரீ அன்னை - ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அன்னை - ஸ்ரீ அரவிந்தர்

ஏப்ரல் 1920ல், அரவிந்தரின் தீவிர சீடராக இருந்த மீரா அல்பஸ்சா அல்லது ‘அம்மா’ அரவிந்தரின் வழிகாட்டுதலை வேண்டி புதுச்சேரிக்கு வந்தார். அதோடு, இந்த ஆசிரமத்தின் முக்கிய அங்கமாகவும் மாறினார். அதைத் தொடர்ந்து அதிக மக்கள் இந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றனர். சில காலத்தில், இது ஒரு சிறிய சமூகமாக மாறியது. அது இறுதியாக 1926ம் ஆண்டு ஆசிரமமாக மாற்றப்பட்டது.

முதியோர் இல்லங்கள், சாப்பாட்டு அறை, நூலகம், விளையாட்டு மைதானம், பட்டறைகள் போன்ற புதிய துறைகளும் அங்கு உருவாக்கப்பட்டன. இன்று, ஆசிரமம் மிகவும் வளர்ந்துள்ளதோடு, பல சிறிய கட்டடங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் பகலில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆசிரமத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

அரவிந்த அன்னை சமாதி
அரவிந்த அன்னை சமாதி

ஆசிரமம் என்ற சொல்லைப் பற்றி இங்கு ஒன்று கூற வேண்டும். இப்போதெல்லாம் ஆசிரமம் என்றால் துறவிகள் கூடி கடுந்துறவு மேற்கொள்ளும் மடம் அல்லது கன்னியர் மடம் என்றுதான் கருதப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஆசிரமம் என்றால் குருவின் வீடு என்றுதான் பொருள். அவரை நாடி, பல கலைகளையும் கற்க, ஆண்களும், பெண்களும் என பல வயதுடைய சீடர்கள் வந்து கூடுவார்கள். குரு ஒரு தந்தையைப் போல அவர்களைக் கவனிப்பார். தம்மிடமுள்ள மிக உயர்ந்த வித்தைகளைபெல்லாம், ஞானத்தையெல்லாம். அவர்களுக்குத் தருவார். ஒவ்வொருவரும் தமது சுபாவத்திற்கேற்ற வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டு முன்னேற உதவுவார்.

குடும்பத்தை விட பெரிதான, அதை விட உயர்ந்த அடிப்படையில் ஏற்பட்ட குடும்பமே ஆசிரமம். இவ்வகையாய் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ஒரு பரந்த நோக்கமுடையதாயும், செயலுக்கு நிறைந்ததாயும் இயங்கி வருகிறது. இது பற்றி ஸ்ரீ அரவிந்தர் தமது கடிதம் ஒன்றில் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார். சாதாரணமாக இதுபோன்ற நிலையங்கள் கொண்டிருக்கும் நோக்கத்தை விட வேறுபட்ட நோக்கத்துடன் இந்த ஆசிரமம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகைத் துறப்பது அதன் வளாகத்திற்குள் இருப்பதே அதன் நோக்கம். ஓர் உயரிய உணர்வால்  இயக்கப்பட்டு ஒரு மகத்தான ஆன்மிக வாழ்க்கையை உருவாக்குவதாகும்.

இதையும் படியுங்கள்:
பணிச்சூழலியலின் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?
அரவிந்தர் ஆசிரமம்

ஆசிரம வளாகத்தில் கடைபிடிக்க வேண்டியவை:

ஆசிரமத்தின் வளாகத்திற்குள் இருக்கும்போது முழு அமைதியைக் கடைப்பிடிக்கவும். உங்கள் மொபைல் போன்களை அணைத்து வைக்கவும்.

முறையான அனுமதியின்றி புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. நீங்கள் சில படங்களைக் கிளிக் செய்ய விரும்பினால், அதிகாரிகளிடம் முன்கூட்டியே கேளுங்கள்.

புதுச்சேரி வாருங்கள். அங்கு இருக்கும் அரவிந்தர் ஆசிரமத்தில் கண்மூடி 30 நிமிடங்கள் அமருங்கள். பிறகு உங்கள் மனநிலையை பாருங்கள், ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரம் பட்டம் பூச்சிகள் உங்கள் மனதில் சிறகடிக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com