ஔவையாருக்கு அதியமான் வழங்கியது நெல்லிக்காயா? நெல்லிக்கனியா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஔவையாருக்கு அதியமான் வழங்கியது நெல்லிக்கனிதான். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதியமான் ஒரு சமயம் வேட்டைக்குச் சென்றபோது அங்கு மலையுச்சியில் ஒரு அரிய வகை நெல்லிக்கனியை கண்டார். அந்த நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் நீடிக்கும் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும் அந்த அதிசய நெல்லிக்கனியை அதியமான் அடைந்தபோதும், அதை தான் உண்பதை விட, ஔவையார் உண்டால், தமிழுக்கு நீண்ட காலம் தொண்டாற்றுவார் என்று கருதி, அந்தக் கனியை ஔவையாருக்கு அதியமான் அளித்தார்.
அவ்வாறு அந்தக் கனியினை உண்டு தான் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று எண்ணாமல், அந்தக் கருத்தினை தன்னுள் அடக்கி ஔவையாருக்கு அதியமான் அக்கனியை உண்பித்ததை எண்ணிப் பாராட்டி ஔவையார் பின்வரும் புறநானூறு பாடல் ஒன்றைப் பாடி அதியமானை வாழ்த்துகிறார்.
‘வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.’
பொருள் விளக்கம்: ‘குறி தவறாத வாளை எடுத்து பகைவர்கள் தோற்கும்படி வென்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறை நெற்றியிலிருக்கும் தலையையும், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீலமணியைப் போன்ற கழுத்தையும் உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். பெரிய மலையின் பிளவுக்கு இடையில் ஏறுவதற்கு அரிய உச்சியில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அரிய நெல்லிக்கனியை, பெறுவதற்கு அரிது என்று கருதாமல், அதன் பெருமையை உனக்குள்ளே அடக்கி நான் நீண்ட காலம் வாழ எனக்குத் தந்தாயே’ என்று வாழ்த்திப் பாடுகிறார்.
இதன் மூலம் அதியமானின் தமிழ் மீதான பற்று நமக்கு நன்கு விளங்குகிறது. அதியமான் ஔவையாருக்கு அளித்தது நெல்லிக்கனிதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு நன்கு தெளிவாகிறது.