தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று தரங்கம்பாடி. இது ஒரு சிறிய கடற்கரை நகரமாகும். இந்த இடத்தை;க் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், 14ம் நூற்றாண்டிற்கு சென்று அறிய வேண்டி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது தரங்கம்பாடி. கி.பி. 1620ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையத்தை அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.
இரண்டு வருடத்திலேயே அதாவது, கி.பி. 1622ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டதுதான் அந்த பிரமாண்ட கோட்டை. இதுதான், இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
அருங்காட்சியகம்: 400 வருடங்கள் பழைமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த டேனிஷ் கோட்டை. இந்தக் கோட்டையில் செயல்படும் அருங்காட்சியகத்தில், 14, 15, 16ம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200ம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழைமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் போட்டோக்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க்கருவிகள், 16ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
மேலும், இந்தக் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை, அப்படியே பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவேதான், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு ஸ்பெஷாலிட்டியும் இங்கு உள்ளது. இங்கே அபூர்வ காற்றான ஓசோன் காற்று காலை, மாலை என வந்து செல்கிறது. தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக்கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.