
கேரள மாநிலம் முழுவதும் எந்த பண்டிகை என்றாலும் சரி அல்லது வீடுகளில் நடைபெறும் கல்யாணம் போன்ற சுப காரியங்களானாலும் சரி தவறாமல் இடம் பெறுவது திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதிகளில் கைகளால் நெய்யப்பட்ட கேரள முண்டு அல்லது பார்டர்களுடன் உள்ள வேஸ்டிகளும், தங்க நிற ஜரிகை புடவைகளும் தான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாலராமபுரம், பாரம்பரிய கைத்தறி புடவைகள் மற்றும் சிறந்த பருத்தி துணிகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நேர்த்தியான ஜவுளிகள் அவற்றின் இயற்கையான கிரீம் நிற பருத்தியால் வேறுபடுகின்றன. அழகான தங்க ஜரிகை பார்டர்கள் மற்றும் மென்மையான எம்பிராய்டரி ஆகியவற்றால் புகழ் பெற்றுவுள்ளன. பாலராமபுரத்தில் கைத்தறி நெசவு தொழில் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது.
1798 முதல் 1810 வரையிலான திருவாங்கூர் மஹாராஜா பலராமவர்மாவின் ஆட்சிக் காலத்தில்தான், கைத்தறி நெசவு முதன்முதலில் பாலராமபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மகாராஜாவும் அவரது டெலாவா (முதல்வர்) உம்மினி தம்பியும் இணைந்து பாலராமபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களை பல்வேறு பாரம்பரிய தொழில்களுடன் விவசாயம் சார்ந்த தொழில்துறை மண்டலமாக மாற்ற முடிவு செய்தனர்.
மகாராஜாவின் டெலாவா, தமிழ்நாடு மாநிலத்தின் வள்ளியூரிலிருந்து ஏழு நெசவாளர் குடும்பங்களை (ஷாலியர்கள்) அழைத்து வந்து, அரச குடும்ப உறுப்பினர்களுக்கு துணிகளை உற்பத்தி செய்து தர பாலராமபுரத்தில் இப்போது 'ஷாலியார் தெரு' என்று அழைக்கப்படும் ஒரு தனி இடத்தில் குடியேறச் செய்தார். தயாரிப்புகளின் சந்தைப்படுத்தலை எளிதாக்குவதற்காக வசதியான இடங்களில் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்போது இந்தத் தெருவில் வசிப்பவர்கள் இந்த ஏழு குடும்பங்களின் வழி வந்தவர்கள் தான்.
பாலராமபுரத்தின் நெசவாளர்கள் இந்த அற்புதமான துணிகளை உற்பத்தி செய்ய நவீன இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய த்ரோ-ஷட்டில் பிட் லூம்களைப் பயன்படுத்துகின்றனர்.
புடவைகள் அவற்றின் எளிமை, இயற்கை பொருட்கள் மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்காக மிகவும் மதிப்புமிக்கவை. பாலராமபுரம் புடவைகளின் ஒரு சிறப்பு அம்சம் தங்கத்தால் பூசப்பட்ட வெள்ளி நூல்களால் செய்யப்பட்ட 'கசவு' அல்லது ஜரி ஆகும். இது கிரீம் நிற பருத்தி துணிக்கு நேர்த்தியை சேர்க்கிறது. இந்த புடவைகள் பெரும்பாலும் பாரம்பரியமாக மணப்பெண் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. இது கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக அமைகிறது.
பாலராமபுரம் கைத்தறி பொருட்கள் அவற்றின் காலத்தால் அழியாத அழகு மற்றும் விதிவிலக்கான கைவினைத்திறனுக்காக தொடர்ந்து பிரபலமாக உள்ளன. பயன்படுத்தப்படும் நூல் இயற்கை சாம்பல் நிறத்தில் உள்ளது மற்றும் வார்ப்பில் சாயங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனுக்காகப் புகழ் பெற்ற பாலராமபுரம் கைத்தறி ஆடைகள் மத்திய அரசின் புவிசார் குறியீடுயை 2009ம் ஆண்டு பெற்றது. பாலராமபுரத்தில் உள்ள ஷாலியார் தெரு தான் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு புகழ் பெற்ற பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தெருவில் 2000 தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வந்தனர். தற்போது 400 தொழிலாளர்கள் தான் உள்ளனர். ஆரம்பத்தில் 5100 கைத்தறி இயந்திரங்கள் இருந்த இடத்தில் தற்போது 20 சதவீதம் மட்டுமே உள்ளது.
கேரள பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாது என்பதால் பல்வேறு வகையான இடர்பாடுகளுக்கு மத்தியில் 14,000க்கும் மேற்பட்ட தறிகள் இயங்கி வருகிறது. வருடத்திற்கு 47 மில்லியன் மீட்டர் கைத்தறி ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது 108 கைத்தறி நெசவுத் தொழிற் சாலைகள் உள்ளன. அவற்றில் 35 தொழிற்சாலைகள் லாபம் ஈட்டுவதாக கூறுகின்றனர்.
கேரள மாநிலத்தில் பாலராமபுரம் மட்டும் அல்லாமல் காசர்கோடு, தலச்சேரி, திருச்சூர், ஆவலாய், கல்லிக்கோடு, சித்தூர் போன்ற பகுதிகளிலும் கைத்தறி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பாலராமபுரம் மற்றும் திருச்சூர் குத்தம்புள்ளி கைத்தறிகள் பாரம்பரிய கேரள புடவைகள் மற்றும் கேரள பெண்கள் அணியும் வழக்கமான உடையான முண்டும் நெரியத்தும், ஆண்களுக்கான முண்டு மற்றும் வேஷ்டி ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.