
தெலங்கானாவின் வண்ணமயமான மலர் திருவிழா பதுகம்மா பண்டிகை. இது இம்மாநிலப் பெண்களால் விதவிதமான மலர்களைக் கொண்டு கொண்டாடப்படும் மிக அழகான மற்றும் வண்ணமயமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த விழா பல ஆண்டுகளாக தெலங்கானா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழா பித்ரு அமாவாசையிலிருந்து தொடங்கி, ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். இந்த வருடம் இந்த விழா இன்று (அக்டோபர் 14) தொடங்கி, வரும் 23ம் தேதி முடிவடைகிறது.
பதுகம்மா இரவுகள் ஒன்பதாகும். அவை: 1. எங்கிலி பூலா பதுகம்மா, 2. அதுகுல பதுகம்மா, 3. முட்டபாப்பி பதுகம்மா, 4. நானாபியம் பதுகம்மா, 5. அட்லா பதுகம்மா, 6. அலிகினா பதுகம்மா, 7. வேங்காயல பதுகம்மா, 8. வெண்ணே முத்தலா பதுகம்மா, 9. சத்துலா பதுகம்மா ஆகியவையாகும்.
மலர் அலங்காரங்கள், மயக்கும் பதுகம்மா பாடல்கள் மற்றும் எளிய சடங்குகளுடன், பதுகம்மாவின் திருவிழா பூமி, நீர் மற்றும் இயற்கையின் பிற கூறுகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடுகிறது. மழைக்காலத்தின் பிற்பகுதியில், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்தப் பண்டிகை வருவது விசேஷம்.
தெலுங்கில், 'பதுகம்மா' என்றால், 'தாய் தெய்வம் உயிருடன் வா' என்று பொருள். வரலாற்று ரீதியாக, பதுகம்மா என்றால் ‘வாழ்க்கையின் திருவிழா’ என்று பொருள். இது தக்காண பிராந்தியத்தில் பெண்மையைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது, ‘பதுகம்மா’ என்றும் அழைக்கப்படும் பார்வதி தேவி, பூக்களை நேசிப்பவராகக் கருதப்படுகிறார். பதுகம்மா ஒரு அழகான மலர் அடுக்கு. மரப்பலகையின் மேல் தாம்பாலத்தில் பூக்களை கோபுரமாக அடுக்கி வைத்து பார்வதி தேவியை இந்த வடிவத்தில் வணங்குகின்றனர்.
மலர் அடுக்குகளில் பெரும்பாலானவை மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு தனித்துவமான பருவகால மலர்களால், கோயில் கோபுர வடிவத்தில் ஏழு அடுக்குகளில் அமைக்கப்பட்டவை. பெண்கள் பாரம்பரிய புடைவைகளை உடுத்தி, நகைகள் மற்றும் பிற அணிகலன்கள் அணிந்து பதுகம்மா பாடல்களைப் பாடியபடியே இந்த மலர் அடுக்குகளை சுற்றி வந்து வணங்கி வழிபடுவர்.
தங்கள் உறவினர்கள் மற்றும் அருகில் வசிக்கும் பெண்களுடன் மாலையில் பொதுவான ஒரு இடத்தில் வைக்கப்பட்ட இந்த மலர் அலங்காரத்தைச் சுற்றி வந்து நாட்டுப்புற பாடல்களைப் பாடியபடி பார்வதி தேவியை வணங்குவர். இந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் மலர் தட்டை தலையில் சுமந்து கொண்டு அருகில் உள்ள குளத்தில் பதுகம்மாவை கரைத்து விடுவார்கள். இந்தக் கொண்டாட்டம் ஒன்பது நாட்களும் தொடரும். திருவிழா சமயம் எங்கும் வண்ணமயமாகக் காட்சி அளிக்கும். பதுகம்மாவில் பயன்படுத்தப்படும் பூக்கள் குளங்களில் உள்ள தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டவை, எனவே, ஏராளமாக கரைக்கப்படும் பூக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக உள்ளன.
பதுகம்மா தேவிக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகை பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. ஐ வகை சாதங்களான தயிர் சாதம் (பெரு கண்ணம் சாத்தி), புளி சாதம் (சிந்தனபண்டு புளிஹொரா சாத்தி), எலுமிச்சை சாதம் (எலுமிச்ச புளிஹோரா சாத்தி), தேங்காய் சாதம் (கொப்பரை சாத்தி), எள் சாதம் (நுவ்ஷலா சாத்தி) ஆகியவைகள் தயாரிக்கப்பட்டு தேவிக்குப் படைக்கப்படுகின்றன.
இறுதி நாளான துர்காஷ்டமியன்று வரும் சத்துல பதுகம்மா தினத்தன்று பதுகம்மா விஸர்ஜன் விமரிசையாக நடைபெறுகிறது. மஞ்சளால் செய்யப்பட்ட கெளரியின் உருவச் சிலையிலிருந்து, சிறிது மஞ்சளை எடுத்து பெண்கள் தங்களது திருமாங்கல்ய சரடில் பூசிக்கொள்கின்றனர். இதன் மூலம் தீமைகள் மற்றும் நோய்களிலிருந்து கணவர் காக்கப்படுவார் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
தெலங்கானா அரசு ஒவ்வொரு ஆண்டும் பதுகம்மா பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது. பள்ளிகள், கல்லுரிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் பதுகம்மாவை கொண்டாடி மகிழ்கின்றனர். தெலங்கானா அரசு ஒவ்வொரு வருடமும் பண்டிகை சமயத்தில் பதுகம்மா புடைவைகளை பெண்களுக்கு இலவசமாக வழங்குகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்தத் பதுகம்மா திருவிழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் அழகையும், தெலங்கானா மக்களின் கூட்டு உணர்வையும், பெண்களின் அசைக்க முடியாத பக்தி உணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் விவசாய மக்களின் சூழலியல் உணர்வையும் இந்த விழா அனைவருக்கும் பறைசாற்றுகிறது.