
உலகில் மிக அழகான கோட்டைகள், உயர்ந்த கோபுரங்கள் காட்சியளிப்பதை பார்த்தால் உங்களை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். வாழ்நாளில் போக முடிந்தால் இந்த அழகான அரண்மனைகளுக்கு (Beautiful palaces) நீங்கள் ஒரு தடவையாவது சென்று பார்க்கலாம். இங்கு இருக்கும் கட்டடக்கலை அற்புதங்கள் அந்த காலத்து கைவினைத்திறனை நமக்கு எடுத்துரைக்கின்றன. இப்படி தனித்துவமான வசீகரிக்கும் அழகை கொண்ட 6 அரண்மனைகள் குறித்து பார்ப்போம்.
நியூஷ்வான்ஸ்டீன் கோட்டை பவேரியன் ஆல்ப்ஸில் அமைந்துள்ளது. பவேரியாவின் லுட்விக்கால் உருவாக்கப்பட்ட இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோட்டை, அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. அதன் அழகிய கோபுரங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உட்புறங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஹிமேஜி கோட்டை ஜப்பானிய கட்டடக்கலையின் தலை சிறந்த படைப்பாகும். இதன் அழகிய தோற்றம் காரணமாக இது 'ஒயிட் ஹெரான் கோட்டை' என்று அழைக்கப்படுகிறது. ஹிமேஜி கோட்டையானது தற்காப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. இது ஜப்பானின் சரித்திர அடையாளமாக அமைந்துள்ளது.
சிண்ட்ரா மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது இந்த பெனா அரண்மனை. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த காதல் கோட்டை ஆனது, பசுமையான தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹாரி பாட்டர் தொடரின் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தது ஆல்ன்விக் கோட்டை. நார்த்தம்பர் லேண்டில் அமைந்துள்ள இது ஒரு அழகான கோட்டையாகும். இந்த அரண்மனை அதன் அழகிய நிலப்பரப்பு தோட்டங்களுடன், அழகிய காட்சிகளாக ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பின்னணியாக வந்து கொண்டிருக்கிறது.
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள எடின்பர்க் கோட்டை பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்று கோட்டையாகும். இது பல நூற்றாண்டுகளின் ஸ்காட்டிஷ் வரலாற்றை கண்டுள்ளது.
கன்னியாகுமரி என்றவுடன் நமக்கு நினைவு வருவது கடற்கரை, சன்ரைஸ், வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவைதான். ஆனால், இங்கு பலரும் அறியாத மற்றொரு இடமும் உள்ளது. அதுதான் முத்து நந்தினி அரண்மனை. இது கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ளது.
கரடு முரடான மலைகளும் பச்சை பசேல் என்ற தாவரங்களும் சூழ்நிலை ஒரு அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை. இதன் பாரம்பரிய கட்டமைப்புக்காகவே சிறப்பு பெற்று உள்ளது. செட்டிநாட்டு பாணியில் கட்டப்பட்டுள்ளது. வீட்டினை வடிவமைக்க, கன்னியாகுமரியின் நூற்றாண்டுகள் கடந்த பழமையான வீடுகளில் உள்ள கட்டடப் பொருட்களை மறுசுழற்சி செய்து வடிவமைத்து உள்ளனர்.
இங்குள்ள அனைத்து பொருட்களும் மறுசுழற்சி செய்யப்பட்டவை. வண்ணமயமான நிலையான மற்றும் கையால் செய்யப்பட்ட ஆத்தங்குடி ஓடுகள் முத்து நந்தினிஅரண்மனையின் அழகை கூட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றி உள்ளது. இந்த வீட்டில் உள்ளே அலங்கரிக்க வைக்கப்பட்டிருக்கும் கலை பொருட்கள் நூற்றாண்டுகள் பழமையானவை. எங்கும் வெளியில் செல்லாமல் நகரத்தின் சலசலப்புகளில் இருந்து தப்பித்து இரண்டு மூன்று நாட்கள் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என்றால் இங்கு தங்கி வரலாம்.