
சிரிக்கும் புத்தர் சிலைகளை (Laughing Buddha) வீடுகளில் வைக்கும்படி முன்னோர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த சிரிக்கும் புத்தர் சிலையின் பின்னணி என்ன? இதை வீடுகளில் வைத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இதோ சுருக்கமாக பார்ப்போம்...
இந்த சிரிக்கும் புத்தருக்கு பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் என்று பொருள். கவுதம புத்தருக்கு முன்பே எத்தனையோ புத்தர்கள் வாழ்ந்தனர். அதில், ஒருவர்தான் ஹொடாய்.
இவர் ஒரு ஜென் துறவி. ஜப்பானை சேர்ந்தவர். கி.பி.16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஜென் துறவிகள் பெரும்பாலானோர், வார்த்தைகளை பயன்படுத்தாமல் செயலாலும், முயற்சியாலும் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள். அதாவது, சிரிப்பது, பார்ப்பது, ஓவியம் வரைவது போன்ற செயல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை தந்தவர்கள். பணம், உடை எதையுமே இவர்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள்.
மனமற்ற நிலையை பெற்றால்தான், மகிழ்ச்சியை பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டவர்கள். இந்த வழியில் வந்தவர்தான் ஹொடாய் என்ற ஞானி. இவரும் மக்களிடம் சிரித்தும், மகிழ்வித்தும் விழிப்புணர்வை தந்தவர். சிரிப்பின் மூலமாக, தன்னுடைய சக்தியை பிறருக்கு அளித்தவர். சிரிப்பாலேயே மக்கள் மனதை ஒருமைப்படுத்தியவர்.
தொப்பை சிரிப்பு:
தொப்பை குலுங்க குலுங்க சிரித்து சிரித்தே, பிளவுபட்ட மக்கள் மனங்களை ஒன்றிணைத்தவர். இவரை பார்த்ததுமே மக்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.. ஹொடாய் நடனமாடினால் அவர்களும் சேர்ந்து நடனமாடினார்கள். ஹொடாயின் சிரிப்புதான், மக்களுக்குள்ளேயே புதுவிதமான மாற்றத்தை உண்டு பண்ணியது.
ஒரு இடத்தில் நில்லாமல், சீனா, கொரியா என பல்வேறு நாடுகளுக்கும் தன்னுடைய சிரிப்பை கடத்தியவர் ஹொடாய். அதனால்தான், இவரை 'சிரிக்கும் புத்தர்' என்றும், 'மகிழ்ச்சிப் புத்தர்' என்றும் மக்கள் அன்பால் அழைத்தார்களாம். இவர் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் மகிழ்ச்சி பீறிட்டு கிளம்பியது. ஒருவார்த்தைகூட பேசாமல் தன்னுடைய சிரிப்பாலேயே மனித மனங்களை ஒன்று சேர்த்த துறவி ஹொடாய்.
சுருக்கமாக சொல்லப்போனால், "மரணத்தை பார்த்து சிரித்தால், அந்த மரணத்தையே அழித்துவிடலாம்" என்ற நம்பிக்கையை விதைத்தவர் ஹொடாய். அதனால்தான், வீடுகளில் என்றுமே மகிழ்ச்சி பொங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இவரது சிலையை சிரிக்கும் புத்தர் சிலையாக, வீடுகளில் வைத்திருக்க சொல்கிறார்கள்!
புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும்.
புத்தர் சிலைகளில் பல வகைகள் உள்ளன என்றாலும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை (Laughing Buddha) வைப்பது நல்லது என்கிறார்கள்.
அதிலும், வீட்டின் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி சிலையை வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை ஹால், டைனிங் ஹால் போன்ற இடங்களில் தென் கிழக்கு திசையில் வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் உயரும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.