தலைநகரில் நடைபெறும் G20 உச்சி மாநாடு, புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள, ‘பாரத் மண்டபம்’ எனப்படும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி திறந்து வைத்தார். மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள் மற்றும் ஒரு ஆம்பி தியேட்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளை இது கொண்டுள்ளது.‘கலாச்சார நடைபாதை’ என்று குறிப்பிடப்படும், 'பாரத மண்டபம்', இந்தியா உட்பட 29 நாடுகளின் பல்வேறு பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாரத மண்டபத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பாரத மண்டபத்தில் 27 அடி உயரமுள்ள 18 டன் எடையுள்ள அஷ்ட தாதுக்கள் மற்றும் வெண்கலத்தாலான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சுவாமி மலையைச் சேர்ந்த புகழ் பெற்ற சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் ஏழு மாதங்களில் இந்த சிற்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
சுமார் ₹2,700 கோடி முதலீட்டில் தேசிய முயற்சியாக கட்டப்பட்ட பாரத் மண்டபம், தோராயமாக 123 ஏக்கர் வளாகத்தை உள்ளடக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
பாரத் மண்டபம் ஏராளமான சந்திப்பு அறைகள், ஓய்வறைகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் வணிக மையம் உட்பட, பல வசதிகளை வழங்குகிறது. அதன் பல்நோக்கு அரங்கம் ஏழாயிரம் பங்கேற்பாளர்கள் வரை இடமளிக்கிறது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸின் இருக்கை திறனை மிஞ்சுவதாகும்.
இந்த வளாகத்தில் உள்ள ஆம்பி தியேட்டர் 3,000 நபர்கள் அமரும் இட வசதியைக் கொண்டுள்ளது.
அரசாங்க அறிக்கையின்படி, பாரத மண்டபம் பசவேஸ்வராவின் அனுபவ மண்டபத்தின் கருத்தாக்கத்தைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தின் வடிவம் சங்கு வடிவத்தைக் கொண்டு விளங்குகிறது.
மாநாட்டு மையத்தின் வெவ்வேறு சுவர்கள் மற்றும் முகப்புகள் இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கின்றன. சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும், 'சூர்ய சக்தி', 'இஸ்ரோவுக்கு பூஜ்யம்', விண்வெளி ஆய்வில் தேசத்தின் சாதனைகளைக் கொண்டாடுதல் மற்றும் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறுகளைக் குறிக்கும், 'பஞ்ச மகாபூதம்' - ஆகாஷ் (வானம்), வாயு ( காற்று), அக்னி (நெருப்பு), ஜல் (நீர்), பிருத்வி (பூமி) மற்றும் பல கலாச்சார, நவீன குறியீடுகள் இதில் அடங்கும்.
இங்குள்ள கன்வென்ஷன் சென்டர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஓவியங்கள் மற்றும் பழங்குடியினரின் கலை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.