கடல் கடந்து விரியும் நம் கலை
கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்
ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.
ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சியைப் போன்ற மிகக் கச்சிதமான அணுகுமுறையைப் பின்பற்றி, கர்நாடக இசை பயிலும் மாணவர்களைச் சிறப்பாகத் தயார் செய்கிறார் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் பத்மா மோகன். அவர் நடத்தி வரும் 'கர்நாட்டிக் சேம்பேர் கான்செர்ட்ஸ்' நிறுவனத்தைப் பற்றி கேட்டபொழுது,
'கர்னாட்டிக் சேம்பேர் கான்செர்ட்ஸ் (Carnatic Chamber Concerts - CCC) என்பது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கர்நாடக சங்கீதம் பயிலும் குழந்தைகளுக்கு அவர்களின் சங்கீதப் பயணத்தில் உடனிருந்து பயிற்சி தந்து, மேடை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்கள் மேன்மேலும் முன்னேற உதவ ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.
முதல் நிகழ்ச்சி ஜனவரி 1, 2009ல் ஆரம்பித்தது. கடந்த 13 வருடங்களாக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 12 குழந்தைகளை வைத்து ஆரம்பித்த இந்த அமைப்பு, இன்று 350க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மேடை வாய்ப்புகள் கொடுத்து இயங்கி வருகிறது.
CCC அமைப்பு மூலம் குழந்தைகள் சிறு வயது முதலே, கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில், மாதந்தோறும் பக்க வாத்தியங்களோடு பாடி பயிற்சி பெறுவதால், அவர்கள் ஒரு போட்டியிலோ அல்லது பெரிய சபாவில் பாடி/வாசிக்கும்பொழுதோ, சபை நடுக்கம் இல்லாமல் தைரியமாக நிகழ்ச்சிகளை வழங்க முடிகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 25 முதல் 28 குழந்தைகள் பங்கு கொள்வார்கள். CCC இது வரை கிட்டத்தட்ட 170 நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளது.
இந்த முறையில் சபாவை வழி நடத்த எண்ணம் ஏற்பட்டதன் காரணம் என்ன என்று வினவியபோது,
"எங்கள் பெண் 9 வயது முதல் 'ஸ்கைப்' மூலம் பாட்டு கற்றுக்கொண்டிருந்தாள். மிக நன்றாகப் பாடுவாள். அவள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக்கள் கிட்டவில்லை. திறமை வாய்ந்த குழந்தைகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக நாமே ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஆரம்பித்தால் என்ன என்று யோசித்து ஆரம்பித்ததுதான் CCC. இவள் போன்று இன்னும் சில குழந்தைகளைச் சேர்த்து, ஒரு 'சேம்பேர் கான்செர்ட்' அமைப்பில், வீடுகளில் குழந்தைகளைப் பாடச் சொல்லி ஊக்குவித்தோம். ஆரம்பத்தில் சிற்றுண்டி கொடுத்து ரசிகர்களை வரவழைத்தோம்.
CCC ல் கச்சேரி செய்யவோ, நிகழ்ச்சிளைக் காண வருவதற்கோ கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், கண்டிப்பாக அட்டெண்டன்ஸ் உண்டு. இந்த ஜில்லாவில் இருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்று இவ்வளவு பெரிய அமைப்பாக வளர்ச்சி பெற்றிருக்கிறது CCC."
இந்தியாவிலிருக்கும் கட்டமைப்பு மாதிரி அமெரிக்காவில் இல்லாவிடிலும், அங்குள்ள இளம் இசை பயிலும் மாணவர்களால் எப்படி இத்தகைய நுண் கலைகளை கற்றுத் தேர்ந்து, உலகளவில் நிகழ்ச்சிகளை வழங்க முடிகிறது என்ற நமது கேள்விக்கு, பத்மாவின் பதில் இதோ:
"எதுவும் எளிதில் கிடைக்கும் பட்சத்தில், அணுகக் கூடிய தூரத்தில் இருக்கும்போது, அதன் மதிப்பு குறைந்து விடுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல், கர்நாடக இசையால் நிரம்பிய சூழல் இங்கு இல்லை. எனவே, மாணவர்கள் வீட்டிலேயே அவர்களின் பயிற்சி முறையைத் தொடர, இசையைத் தொடர்ந்து கவனத்தில் வைத்திருக்க நாங்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்கிறோம்.
இங்கு பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்தே ஆக வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் உயர்தர இசையைக் கேட்கும் அனுபவத்தையும் பெறுகிறார்கள். மேலும், மாணவர்கள் தங்கள் சகாக்கள் செயல்படுவதைப் பார்க்கும்பொழுது, அவர்களும் இசையுடன் இன்னும் சிறப்பாக இணைகிறார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். CCC போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கு இந்தக் கலை வடிவத்தை மேம்படுத்த, உறுதியான, ஆனால், அடையக்கூடிய இலக்குகளை வழங்குகின்றன. CCC போன்ற சமூக அமைப்புகளிடமிருந்து பெறும் தொடர் ஊக்கம், கற்றுக் கொள்ளும் ஆர்வம், கடின உழைப்பு, ஆசிரியர்களிடமிருந்து நல்ல வழிகாட்டுதல், பெற்றோரின் ஆதரவு போன்ற காரணங்களினால் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்."
பொதுவாக இந்தியர்கள் அல்லாதவர்கள் சங்கீத, நாட்டிய
நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்களா? அவர்களும் அரிய
இக்கலையைக் கற்றுக் கொள்கிறார்களா? என்ற கேள்விக்கு,
"அப்படி ஒரு சிலர் கர்நாடக இசை மற்றும் நடனத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்தவரை அதிகம் இல்லை. இந்தியர்கள் அல்லாத பலர், தங்கள் இந்திய நண்பர்களின் கர்நாடக இசை அல்லது நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். குறிப்பாக, அரங்கேற்றத்தின்பொழுது. ஆனால், அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே அங்கு வருகிறார்கள்."
உங்களுடைய தனித்தன்மையான அணுகுமுறையை மாணவர்களிடையே எப்படி செயல் படுத்துகிறீர்கள் என்று கேட்க,
"கர்நாடக இசையைக் கற்கும் மாணவர்கள் பொதுவாகத் தங்கள் சொந்த இசை வகுப்பில்/பள்ளியில் மட்டுமே பயிலும் மாணவர்களுடன் பழகுவார்கள். தொலை தூரக் கல்வி பயிலும் மாணவர்களில் பலருக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டுவதில்லை. மேலும், அவர்களின் இசைப் பயணத்தில் மிகவும் குறைவான வாய்ப்புகளுடன் தனித்து விடப்படுகின்றனர். நாங்கள் ஆதரிக்கும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள், 80க்கும் மேலான வெவ்வேறு இசைப் பள்ளிகள், வெவ்வேறு ஆசிரியர்களிடமிருந்து வந்தவர்கள். CCC அமைப்பு, இந்த மாணவர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ், மாதந்தோறும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் மாணவர்கள் பல்வேறு பாடாந்திர இசையைக் கேட்கிறார்கள். அதைப் பாராட்டவும், நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவும், கடினமாகப் பயிற்சி செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள். உறுப்பினர்கள் கட்டாயமாக மாதாந்திரக் கச்சேரிகளில் கலந்து கொள்ள வேண்டும். இது இளம் மாணவர்களை 3 மணி நேரம் உட்கார்ந்து ஒரு கச்சேரியைக் கேட்க வைக்கிறது. இந்த அணுகுமுறை CCCயில் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.
சென்னை சங்கீத சீசனில் எங்கள் அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற பல திறமைசாலிகள் இசை நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழங்கி வருகிறார்கள் என்பதையும், எதிர்காலத்தில் இன்னும் பலரைத் தயார் செய்து அனுப்புவோம் என்பதையும் உறுதியாகச் சொல்வதில் நான் பெருமிதம் அடைகிறேன்,"
பத்மா மோகனின் பணிகள் சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.