மெல்லக் கர்நாடக சங்கீதம் இனி வாழும்!

மெல்லக் கர்நாடக சங்கீதம் இனி வாழும்!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்

ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.

நியூஸிலாந்து இந்திய நுண்கலைச் சங்கம்  2005 ஆம் ஆண்டு வெலிங்டன் நகரத்தில் உருவானது. உன்னதமான பொக்கிஷமாம் நமது கர்நாடக சங்கீதத்தை ஆதரித்து வளர்க்கவும், நடனம் போன்ற இந்தியாவின் மற்ற சில பாரம்பரியக் கலைகளை மேம்படுத்தவும் இச்சங்கம் சில கலையார்வம் கொண்ட நல்லுள்ளங்களால் நிறுவப்பெற்றது.

சங்கீத ஆர்வம் மிக்கச் சிலர் இச்சங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். உலகின் ஒரு மூலையில், அதுவும் தென் இந்தியர்கள் ஜனத்தொகை மிகக் குறைவாக உள்ள ஒரு நகரத்தில், கர்நாடக சங்கீதத்தை வாழச் செய்வது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்க வேண்டும். எனினும் இதுவரை இவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த மேதைகள் பாலமுரளி கிருஷ்ணா, கதிரி கோபால்நாத் முதல் சங்கீத கலாநிதிகள் சஞ்சய் சுப்பிரமணியம், சௌம்யா, சுதா ரகுநாதன்வரை இங்கு கச்சேரிகள் செய்துள்ளனர்.

"ஆண்டுதோறும் ஒரு பிரபலப் பாடகரையோ பாடகியையோ இந்தியாவிலிருந்து அழைத்து வருவோம். இதற்கு ஆக்லாந்து (Auckland) கர்நாடக இசைச் சங்கமும் (NZCMS), ரசிகாஸ் (Rasikas) என்ற தனிப்பட்ட ஒரு குழுவும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்" என்று கூறுகிறார், வெலிங்டன் சங்கத்தின் தலைவர் பாலாஜி நரசிம்மன். சிட்னியில் வசிக்கும் பாடகரான கிருஷ்ணா ராமரத்தினமும் வயலின் கலைஞரான அவர் மனைவி மஹதி பாலாஜியும் பக்க பலமாக வெலிங்டன் வந்து அவ்வப்போது கச்சேரிகளுக்கும், நடன அரங்கேற்றத்துக்கும் வாசித்துச் செல்கின்றனர்.

இங்கு கச்சேரி செய்ய வரும் கலைஞர்கள், இவ்வூரின் அழகிலும், மக்களின் இனிய நன்னடத்தையிலும் மயங்கித்தான் போகிறார்கள். சென்னைப் பாடகர்கள் மத்தியில் உள்ள “Lord of the Rings புத்தக / திரைப்பட” ரசிகர்கள்,  கச்சேரி முடிந்தவுடன் அப்பட ஷூட்டிங் எடுத்த இடங்களையும் கண்டு களித்துத் திரும்புகின்றனர்.

“இவ்வூரில் கர்நாடக கச்சேரிகள் நடத்துவது ஒரு பெரிய சவால்தான். ஏனெனில் மக்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒரு கச்சேரி நடத்த ஆகும் செலவினை ஒப்பிடுகையில்,  டிக்கெட் வசூலில் வரும் வருமானம் மிகக் குறைவு” என்கிறார் திரு. பாலாஜி. வெகு சில இந்தியர் அல்லாதவர்கள் கச்சேரிகளுக்கு வருவார்கள். கர்நாடக சங்கீததின் மேல் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் ஆர்வமுமே அதற்குக் காரணம்.

வெலிங்டனில் ஓரிரண்டு சங்கீத ஆசிரியைகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சிறுவர் சிறுமியருக்கு சங்கீத வகுப்புகள் நடத்துகின்றனர். குறிப்பாக காயத்ரி தர்மராஜன் மற்றும் ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் இருவரையும் குறிப்பிடலாம்!

காயத்ரி தர்மராஜன் ஆக்லாந்து கர்நாடக இசைச் சங்கத்துடன் இணைந்து வருடந்தோறும் நடத்தும் இசைத்தேர்வில் பங்குபெறும் மகத்தான வாய்ப்பை சென்ற இரண்டாண்டுகளாக வெலிங்டன் மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சுமார் 40 மாணவர்கள் இத்தேர்வில் பங்கு பெற்றனர். வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் இவற்றுள் அடக்கம்.

சில பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் சென்னையில் வசிக்கும்  ஆசிரியர்களுடன் பயின்று வருகின்றனர். இம்மாணவர்களைக் கொண்டு உள்ளூர்க் கச்சேரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். ‘கோவிட்’ காரணமாக சென்ற இரண்டாண்டுகளாக இவை நடைபெறவில்லை. 2023ல் மீண்டும் தொடர்வோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சங்கச் செயலர் திருமதி காயத்ரி.

ஏராளமான தடைகள் இருந்தாலும், நமது உன்னத பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் வளர்க்கும், வாழவைக்கும் சவாலை இசை ஆர்வம் மிக்க இளைஞர்கள், இளைஞிகள் ஏற்பார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாலாஜி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com