அமெரிக்காவின் குழந்தை மேதைகள்!

அமெரிக்காவின் குழந்தை மேதைகள்!
Published on

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புத பணி! ஓர் அறிமுகம்.


2003 இல் பிறந்த இவர், மூன்று வயது முதலே பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் ராகங்களின் பெயர்களைக் கூறுவார். சங்கீத சாம்ராட் வித்வான் சித்திரவீணை ரவிகிரணின் சீடர் ஆவார்.

சிறு வயது முதலே இவருக்கு இருந்த இசை ஆர்வத்தைக் கண்டு,  இவருக்கு வாய்ப்பாட்டை கற்றுக்கொடுத்தார் இவரது தாய். தொடர்ந்து, ஸி.என்.ஸ்ரீநிவாஸமூர்த்தியிடம் வயலின் ஆரம்ப பாடங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

சிறு வயதிலிருந்தே பல தனிக் கச்சேரிகளைக் கொடுத்து வந்தாலும், ஜூலை 2017ல் இசைப் பேரொளி வித்வான்  சிக்கில் குருசரண் அவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்தது இந்த இளம் வித்வானுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  அதன் பிறகு, தூர்தர்ஷன் பொதிகை சேனலிலும் இவர் கச்சேரி ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து அலமேலு மணி, ரவிகிரண், கர்நாட்டிகா சகோதரர்கள், பாலக்காடு ராம்பிரசாத் போன்ற பல முன்னணிக் கலைஞர்களுக்கும் வயலின் வாசித்து பாராட்டுகளைப் பெற்றார் இவர்.

மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்று, பல சேர்ந்திசைக்கு உண்டான இசைக் கோர்வைகளை 'மெல்ஹார்மனி' என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயற்றினார்.
சென்னை மார்கழி  இசை விழாவில் வருடம் தவறாமல் பல மூத்த கலைஞர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்து வருகிறார். தற்பொழுது UW Madison பல்கலைக் கழகத்தில் கணினித் துறையில் பட்டப் படிப்பு படித்து வருகிறார் இந்த இளம் வித்வான். யார் இவர்?

சைச் சூழலில் பிறந்து, இசையைக் கேட்டு கேட்டு வளர்ந்த இசை ஆர்வம் சிறு வயதிலிருந்தே வெளிப்பட்டது மற்றொரு இளம் கலைஞரான இவருக்கு.  ஆச்சரியப்படும் வகையில் தனது 6வது வயதிலேயே ஒரு புதிய ராகத்தைக் கண்டு பிடித்தார் இவர்! சங்கீத கலாநிதி சித்ரவீணை ரவிகிரண் அவர்களை அணுகி, இந்த ராகத்திற்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டதற்கு இணங்க, அவர் அந்த ராகத்திற்கு 'நடனப்ரியா' என்று பெயர் சூட்டிப் பாராட்டினார். தன் தாயிடம் முதலில் வாய்ப்பாட்டு இசையைக் கற்றார்.

தற்பொழுது ஆச்சார்ய ரத்னாகரா சித்ரவீணை  நரசிம்மன், சித்ரவீணை  ரவிகிரணிடமும் கற்று வருகிறார். க்ளீவ்லாண்ட தியாகராஜ ஆராதனை விழாவின் சிறுவர்கள் பிரிவுப்  போட்டியில் வாய்ப்பாட்டு, மற்றும் சித்ரவீணைக்காக முதல் பரிசைப் பெற்றார் இந்த இளம் நட்சத்திரம்.

அமெரிக்காவில் பல தனி நிகழ்ச்சிகள். தன் தாயின் கச்சேரிகளுக்குப் பக்கவாத்யம், குரு ரவிகிரணுடன் இணைந்து கச்சேரிகள் என்று பரபரப்பாக உள்ளார். படிப்பிலும் படு சுட்டி. சதுரங்கப் போட்டியில் விஸ்கான்ஸின் மாகானத்தின் சார்பில் ராக்ஃபெல்லர் தேசிய செஸ் டோர்னமெண்டில் பங்கு பெற்றார். இந்த மார்கழி இசை விழாவில் சென்னையில் பல கச்சேரிகளை நடத்த உள்ளார். யார் இவர்?

அமெரிக்காவின் மேடிசன் நகரத்தில் வசிக்கும் வனிதா. சுரேஷ் தம்பதியின் புதல்வர்கள்தான் சஞ்சய் மற்றும் அர்ஜூன். வனிதா கர்நாடக இசைக் கலைஞர் மட்டுமல்லாமல் ஆசிரியரும் கூட. 'ஆரோஹணா அகெடமி' என்ற இசைப் பள்ளியை நடத்தி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com