சோழர் கால வரலாற்றுப் பொக்கிஷம் சூடாமணி விகாரம்!
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் இப்போது நம் பார்வைக்கு சில கட்டடங்களே எஞ்சியுள்ளன. அவற்றில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷமான நாகை மாவட்டத்தில் உள்ள சூடாமணி விகாரம் பற்றி இப்பதிவில் காண்போம்.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் நாகை மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி வருகிறது. சோழர்கள் ஆட்சியில் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் நாகையில் தங்கி ஆன்மிகப் பணியாற்றி வந்தனர். அப்போது, ‘மலாய் நாடு’ என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவில் பிரசித்தி பெற்று விளங்கிய புத்த மதத்தை சேர்ந்த விஜயோதுங்கன் என்ற அரசன் சோழ நாட்டில் வசிக்கும் தனது குடிமக்கள் புத்தரை வழிபடுவதற்காக தஞ்சையை ஆண்ட கண்டராதித்த சோழரிடம் அனுமதி பெற்று தனது தந்தை சூடாமணிவர்மன் பெயரில் புத்த விகாரம் ஒன்றை நாகையில் நிறுவினார்.
சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்த மதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறு மூலம் சொல்லப்படுகிறது. இன்றைய நாகப்பட்டினம், 'சோழர்குலவல்லிப் பட்டணம்' என்ற பெயருடன் விளங்கியது. சோழ நாட்டிற்கு வந்த புத்த மத துறவிகள், வணிகர்கள் இங்கு தங்கி வழிபட்டனர். சுமத்ரா தீவு மற்றும் ஜாவா நாட்டு கட்டடக் கலையுடன், மூன்றடுக்காக இருந்த இதை, 'சீன பகோடா' என்றனர்.
இதன் தொடர் செயல்பாடுகளுக்காக சோழ மன்னர்களான ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை தானமாக அளித்ததை, ஆனைமங்கலம் செப்பேடு விரிவாகக் கூறுகிறது. அதேபோல, பௌத்தர்களான கடாரத்தரையனின் அதிகாரி ஸ்ரீ குருத்தன் கேசவனான அக்ரலேகை, ஸ்ரீ விஷயத்தரையன் கண்டனிமலன் அகத்தீஸ்வரன் ஆகியோர் இங்குள்ள பழைமையான 'காயாரோகணர்' சிவன் கோயிலுக்கு, ‘சீன கனகம்’ எனும் தரமான தங்கம், முத்து, வைரம், மாணிக்கம் பதித்த அணிகலன்கள், பல விதமான விளக்குகளை தானமாக அளித்துள்ளனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சூடாமணி விகாரம், நகரத்தில் இருந்து விலகி அமைதியான கடற்கரை ஓரம் அமைந்திருந்தது. இது, புத்துவெளிக்கோபுரம், பழைய பகோடா, கருப்பு பகோடா என்றும் அழைக்கப்பட்டது.
சோழர்களுக்குப் பின் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் சூடாமணி விகாரம் இருந்து வந்தது. சூடாமணி விகாரத்தில் தங்கி ஆன்மிகப் பணியாற்றி வந்த பிரெஞ்சு இயேசு சபையினர் புத்த விகாரத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஆண்களின் கல்வி அறிவுக்காக செயின்ட் ஜோசப் கல்லூரியை கட்டி 1844ம் ஆண்டு திறந்தனர்.
இந்தக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 1887ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் 30 ஆயிரம் ரூபாய்க்கு சூடாமணி விகாரத்துடன் கூடிய சுற்று வட்டாரப் பகுதியை விற்பனை செய்துவிட்டு திருச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். செயின்ட் ஜோசப் கல்லூரி கட்டடம் மாவட்ட நீதிமன்றமாக மாறியது.
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழைமையான கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இடம் மாறிவிட்டன. சூடாமணி விகாரம் பழைமை மாறாமல் மத்திய தொல்லியல் துறையால் புதுப் பொலிவு பெற்றுள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி, சுற்றுலா பயணிகளுக்கும் ஆனந்தத்தை அளித்துள்ளது.