

தமிழக வரலாற்றில் சோழர்கள் ஆட்சி செய்த காலம் பொற்காலமாக போற்றப்படுகிறது. சோழர்களின் ஆட்சி காலத்தில் கலை, இலக்கியம், கலாச்சாரம் கட்டிடக்கலை ஆகியவை சமூகத்தில் செல்வாக்கு செலுத்தி வந்தன. சோழர்களின் புகழ் வானளாவு பரவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்களின் கட்டிடக்கலையும் சிற்பக் கலையும் ஆகும். பிற்கால சோழர்கள் காலத்தில் சிற்பக்கலை செழித்து வளர்ந்து உலக அளவில் பரவியது. அதேசமயம் சிற்பக் கலையில் சோழர்களுக்கு முன்னோடிகளாகவும், முன்னுதாரணமாக பல்லவர்கள் விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கட்டிடக்கலையின் மிக முக்கியமான கால கட்டமாக இருக்கிறது. கற்களால் ஆன சிற்பங்களும் உலோகங்களால் செய்யப்பட்ட சிற்பங்களும் இன்று வரையில் சோழர்களின் கலை உணர்விற்கு சான்றாக விளங்குகிறது. அவர்களின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வெண்கல சிலைகள் இன்று வரையில் அவர்களின் கலை பெருமைவை பரப்பி வருகிறது.
சோழர்கள் காலத்தில் வெண்கல சிலைகளை (Bronze statue) உருவாக்கப்படும் முறைகளை பயன்படுத்தி தான் இன்றளவும் பல்வேறு நாடுகளில் வெண்கல சிலைகளை செய்கின்றனர். வெண்கலத்தில் செய்யப்படும் சிலைகள் சாதாரண உலோக வார்ப்புகள் போன்று இல்லாமல், அதற்கென்று நுட்பமான அறிவும் கடுமையான உழைப்பும் தேவைப்படுகிறது. சோழர்கள் காலத்தில் இந்த சிலையை ஐந்து அடுக்கு முறையில் துல்லியமாக உருவாக்கினர்.
மெழுகு மாதிரி தயாரித்தல்:
தேன் மெழுகு, குங்கிலியம் மற்றும் மாமரப் பிசின் ஆகியவற்றை சேர்த்து அதை களிமண் போன்ற பதத்திற்கு கொண்டு வருவார்கள். அந்த மெழுகு கலவையில் தங்கள் விரும்பியவாறு தத்துரூபமாக சிலைகளை செதுக்குவார்கள். அந்த சிலையின் கை, கால்களை தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு அபிநயத்தில் இருக்குமாறு உருவாக்குவார்கள். ஆபரணங்கள், உடல் அங்கங்கள், விரல்களின் அசைவுகள், தலைமுடி போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக செதுக்குவார்கள்.
களிமண் பூச்சு:
மெழுகில் செய்த சிற்பத்தின் மேல் தூய்மையான களிமண்ணை தண்ணீரில் குழைத்து பூசுவார்கள். இந்தக் களிமண்ணில் மெழுகில் செய்த சிலையில் உள்ள அச்சு அப்படியே களிமண்ணில் பதிந்துவிடும். பின்னர் அந்த களிமண் அச்சை மிதமான வெயிலில் காயவைப்பார்கள். காய்ந்ததும் அந்த அச்சை சாம்பல் , உமி எல்லாம் கலந்து மேலோடுக்காக பூசி அச்சினை மேலும் உறுதியாக்குவார்கள்.
மெழுகு உருக்குதல்:
காய்ந்த களிமண் அச்சினை உலையில் வைத்து செங்கல் பதத்திற்கு சூடுபடுத்துவார்கள். இவ்வாறு உலையில் சூடுபடுத்தும்போது உள்ளே உள்ள மெழுகு முற்றிலும் உருகி, அச்சின் அடிப்பகுதியில் உள்ள துளையின் வழியே வெளியேறிவிடும். அந்த துளை வழியாக தான் , வெண்கலம் உருவாக்கி ஊற்றப்பட்டு சிலை உருவாக்கப்படுகிறது.
உலோகம் வார்த்தல்:
வெண்கல சிலை செய்வதற்கு செம்பு மற்றும் தகர கலவை சேர்க்கப்படும். இதில் செம்பு 80% மேல் இருக்கும் மீதமுள்ளவை தகரமாக இருக்கும். இந்த கலவை மிகவும் உறுதியானது எளிதில் துருப்பிடிக்கவும் செய்யாது. செம்பு மற்றும் தகரத் தினை அதிக வெப்ப நிலையில் உலையில் இட்டு உருக்கி, கொதிக்கும் அந்த கலவையை , களிமண் அச்சின் பின்புறம் உள்ள துளையில் ஊற்றப்படும்.
இறுதி வடிவம்:
களிமண் அச்சில் உள்ள உலோகம் முற்றிலும் குளிர்ந்த பின்னர், வெளிப்புற களிமண் அச்சு பொறுமையாக தட்டி உடைக்கப்படும். அதனுள் இருக்கும் சிலை 90% மேல் முழுவதும் தயாராகி இருக்கும். ஆயினும் அதில் சிறு சிறு பிசிறுகள் போன்றவை இருக்கும். அவற்றை உளி மற்றும் அரம் கொண்டு சிலையின் வெளியில் உள்ளவை சீரமைக்கப்படும்.
பின்னர் கல்லுரசி மற்றும் இயற்கைப் பொருட்களால் தேய்த்து சிலைக்குப் பளபளப்பு ஊட்டுவார்கள். இந்த செய்முறையின் இறுதியில் களிமண் அச்சு உடைக்கப் படுவதால் அதன் மூலம் இன்னொரு பிரதி சிலை செய்ய முடியாது. அதனால், சோழர்கள் காலத்து நடைமுறையில் செய்யப்பட்ட சிலைகளுக்கு பிரதி கிடையாது என்பதுதான் சிறப்பு.
இன்று வரையிலும் உலோகச்சிலை செய்வதை இந்த நடைமுறையைதான் பின்பற்றி தான் உலகம் முழுவதும் செய்து வருகிறார்கள். ஆனால் , மெழுகை ஒவ்வொரு முறையும் செதுக்காமல் அதுக்கென்று பிரத்தியேகமான அச்சு வைத்திருக்கிறார்கள். அதனால் , ஒரே மாதிரியான பிரதி சிலைகள் கிடைக்கின்றன.