முண்டா (Munda) என்ற பழங்குடியினர், முக்கியமாக இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் காணப்படுகின்றனர். இவர்கள் ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் குடியேறியுள்ளனர். முண்டா மக்கள் தங்களின் தனித்துவமான மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் கொண்ட ஒரு பழங்குடி சமூகமாக இருக்கின்றனர்.
ஜார்கண்டின் பழங்குடியின மக்களில் முண்டா இனத்தவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் ஜார்கண்டில் உள்ள சோட்டா நாக்பூர் பகுதிகளில் வாழ்கின்றனர். ராஞ்சி, குந்தி, மேற்கு சிங்பூம், சரைகேலா கர்சவான் ஆகிய மாவட்டங்களில் இவர்களை அதிகம் காண முடியும். இந்த மக்களுக்கென தனித்துவமான கலாச்சாரம், வரலாறு மற்றும் சுயாட்சி முறை உள்ளது. இது தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படுகிறது.
தனித்துவமான கலாச்சாரம்:
முண்டா மக்கள் இயற்கையோடும், சுற்றுச்சூழலோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ளனர். இவர்கள் "முண்டாரி" மொழியைப் பேசுகிறார்கள். இது ஆஸ்திரேலிய மொழிகளின் கீழ்வரும் ஒரு மொழியாகும்.
இந்த மக்கள் தன்னாட்சி பழங்குடி மதத்தையும், இந்து, கிறிஸ்தவ மதங்களையும் பின்பற்றுகின்றனர். இவர்களின் கலாச்சாரத்தில் 'சாமியம்' என்ற பிரிவு முக்கியமானது. 'சர்னாயிசம்' என்ற இயற்கை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது அவர்களின் இயற்கையான புனிதமான மரங்கள் மற்றும் புனிதமான இடங்களை வணங்குகிறார்கள்.
பண்டிகைகள்:
விவசாயம் இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. மாகே பராப், பாகு, கரம், பஹா பராப், சர்ஹுல் மற்றும் சோஹ்ராய் ஆகிய பருவ கால பண்டிகைளைக் கொண்டாடுகிறார்கள். சில பருவ காலப் பண்டிகைகள் மத விழாக்களுடன் ஒத்துப் போகின்றன. இவர்களின் தெய்வம் சிங்போங்கா. இவர்களிடம் பல நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், பாரம்பரிய இசைக்கருவிகள் உள்ளன. நாகரே ஒரு முக்கிய இசைக்கருவியாகும்.
இவர்கள் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றைக் கொண்டாட விரிவான சடங்குகளைக் கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி, எலி, கோழி, ஆடு மற்றும் நத்தை போன்ற உணவுப் பொருட்கள் முண்டா மக்களின் உணவில் முக்கிய இடம் பெறுகிறது.
சுயாட்சி முறை:
முண்டா மக்களின் சுயாட்சி முறையில் முக்கியமானது மான்கி-முண்டா அமைப்பாகும். இது கிராமத் தலைவர்களைக் கொண்ட பாரம்பரிய ஆட்சி முறையாகும். இதில் முண்டாஸ் மற்றும் மான்கிகள் சமூக-அரசியல் தகராறுகளை நிர்வகிப்பார்கள். குந்த்கட்டி முறை என்ற பழங்குடியினரின் கூட்டுப்பிடிப்பு முறையையும் அவர்கள் கடைபிடித்தனர். இவர்களுக்கு பேயஸ் பதா அமைப்பு என்ற பெயரில் தனித்துவமான சுயாட்சி முறை உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்:
இவர்கள் புரோட்டோ-ஆஸ்ட்ரோலாய்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். பிர்சா முண்டா (Birsa Munda) ஒரு புகழ்பெற்ற பழங்குடித் தலைவர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பழங்குடி சமூகங்களின் உரிமைகளுக்காக போராடியவர். இவர் தலைமையிலான இந்த போராட்டம் "முண்டா கிளர்ச்சி" அல்லது "உல்குலன்" (The Great Tumult) என்று அழைக்கப்படுகிறது.
மக்கள் தொகை:
ஜார்கண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முண்டா மக்கள் வாழ்கின்றனர். ஜார்கண்ட் தவிர மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் வசிக்கின்றனர். திரிபுராவில் உள்ள முண்டா மக்கள் முரா என்றும் அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் அஸ்ஸாமின் தேயிலை பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் காலனித்துவ இந்தியாவின்போது தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்ய இடம் பெயர்ந்தனர்.