இந்தியாவில் உள்ள ஒருசில மிகவும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் வாரணாசியும் ஒன்று. வாரணாசியின் புகழை இவ்வுலகமே அறியும். ஆம்! காசி விஸ்வநாதர் கோயில் தரிசனம், பனாரஸ் பட்டு மற்றும் புனித நதியான கங்கையின் மகிமை என இன்னும் பல பெருமைகளுக்கு உரிய வரலாற்று சிறப்பு மிக்க இடமாக விளங்குகிறது வாரணாசி திருத்தலம்.
சிட்டி ஆப் டெத்: பொதுவாகவே புனித நதிகளுக்கான முக்கியத்துவம் என்பது இந்தியாவில் அதிகம். இந்திய மக்கள் நதிகளை வழிபாட்டுத் தலங்களுக்கு சமமாக பாவித்து வணங்குவர். அந்த வகையில் வாரணாசியில் உள்ள கங்கையில் நீராட மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஏனெனில், இந்த நதிக்கு மனிதர்களின் பாவங்களைக் கழுவும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்களில் துவங்கி, தற்போதைய தலைமுறையினர் வரையிலும்கூட, வாரணாசி நிலத்தில் உயிரைத் துறப்பவர்கள், அவருடைய பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து முக்தியையும் விடுதலையையும் பெறுவதாக இந்து மக்களால் நம்பப்படுகிறது. எனவேதான் வாரணாசி நகரம், ‘சிட்டி ஆப் டெத்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் ‘டெத் ஹோட்டல்‘: வாரணாசியில் பல பிரபலமான கோயில்கள், மசூதிகள் மற்றும் கல்வி நிலையங்கள் நிறைந்திருக்கின்றன. ‘சிட்டி ஆப் டெத்’ என்று அழைக்கப்படும் வாரணாசி நகரில் நம்மில் பலரும் அறியாத இடங்களின் வரிசையில் இருக்கும் ஒரு இடம்தான் ‘டெத் ஹோட்டல்.’ இந்த டெத் ஹோட்டலுக்கு ‘முக்தி பவன்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
காசியில் அமைந்துள்ள இந்த முக்தி பவனானது வாரணாசியில் இருக்கும் ஒரு தொண்டு இல்லமாகும். இந்த இடம் முதியவர்கள் மற்றும் மோசமான குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு தங்களின் குறுகிய அளவில் உள்ள இறுதி நாட்களைக் கழிக்க ஒரு புகலிடமாக இருந்து வருகிறது. மேலும், இந்த இடத்திற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
இறப்பதற்கு இரண்டு வாரம் அவகாசம்: இந்த ‘முக்தி பவன்’ இல்லமானது 1908ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழைமையான கட்டடமாகும். அதன் பின்னர் 1958ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ‘ஜெய்த் தயாள் டால்மியாவால்’ ஒரு நல்வாழ்வு இல்லமாக மாற்றப்பட்டது. இந்த இல்லத்திற்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 300 பேர் குடியிருப்பாளர்களாக வந்து செல்கின்றனர். அதன்படி இதுவரை கிட்டத்தட்ட 15,000துக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வந்து தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இறந்து முக்தி அடைந்ததாகவும் கூறுகின்றனர். இறுதி சடங்குகளுக்குப் பிறகு இறந்தவர்களின் உடலை கங்கையில் தகனம் செய்வர்.
இங்கு வந்து தங்கும் ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே தங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். ஒருசில சூழலில் மட்டுமே அவர்கள் கூடுதலாக ஒரு வார கால அவகாசத்துடன், தங்களின் கடைசி மூச்சை சுவாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இறக்கவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில், சிலர் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மரணத்தைத் தூண்டுவதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா?
சேவை மற்றும் பொதுநலம் கருதி செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் மரணத்தைத் தூண்டுவதற்கான எந்த ஒரு மருந்தோ அல்லது வேறு முறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே இறப்பிற்காக தங்கள் வாழ்க்கையின் இறுதி நொடி வரை காத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்பதை வலியுறுத்தியே இவ்விடமானது இயங்குகிறது.
டெத் ஹோட்டலின் சிறப்பம்சங்கள்: இந்த இல்லமானது அனைத்து மத பின்னணியிலிருந்து வரும் மக்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு மின்சாரச் செலவை ஈடுகட்ட தங்க வருபவர்களிடம் ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை டால்மியா அறக்கட்டளை நிறுவனமே கவனித்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதோடு இங்கு முன்பதிவுகளுக்கான எந்த வசதியும் இல்லை. நன்கொடைகளும் ஏற்கப்படமாட்டாது.