ஜனனம் ஒரு வழி
மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ
பாசமென்னும் தாய்மொழி!
என்பது 1974 ஆம் ஆண்டின் திரைப்படமான ‘திருமாங்கல்யம்’ படப் பாடல் வரிகள்!
டி.எம்.எஸ்ஸின் அமரக் குரலில் இன்றும் ஒலிக்கும், காலங்கடந்த பாடல்!
நான் ஏறாத மரங்களே இல்லை ஐயா!
எனக்கு எதிர்வரும் தூக்கு மரம் துரும்பே ஐயா!
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பே ஐயா
அதை மாற்ற ஒரு வழியுண்டோ சொல்லுங்கையா!
என்ற பாடலும் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த ஒன்று!(காவல் தெய்வம்-1969)
திரு மாயவநாதனின் பாடலுக்கு திரு தேவராஜன் இசையமைக்க, திரு டி.எம்.எஸ்., அவர்களின் சோகக் குரலில் வந்த இனிய பாடல் இது! இப்பாடலில் மேலும் உள்ள வரிகள் சில சிறப்பு மிகுந்தவை!பொருள் பொதிந்தவை!
தாயணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு
என்னைத் தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு!
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இங்கு தூக்கிலிடவருவதும் ஒரு கயிறு!
ஒரு சிலர் குறைவான பாடல்கள் எழுதியிருந்தாலும், சரித்திரத்தில் இடம் பிடித்து விடுவர்! அதற்கு இந்தப் பாடல் ஓர் உதாரணம்!
இப்படி இன்னும் எத்தனையோ பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மனிதனின் மரணத்திற்குப் பிறகான நிலையைக் கருட புராணம் விலாவாரியாக விளம்பும்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, பிறந்தவை அனைத்தும் இறக்கும் என்ற உலகக்கோட்பாடு, தொடர்ந்து வரும் ஒன்று!
நம் இன்பத் தமிழில் இறப்புக்கும் பல வார்த்தைகள் உண்டு! அந்த வார்த்தைகளைக் கொண்டே ஒருவர் எவ்வாறு இறந்தார் என்பதை எளிதாக அறியலாம்!
மூப்படைந்து இயற்கையாய் இறந்தால்… காலமானார்!
இயற்கையின் நிகழ்வு காரணமாக இறந்தால் … இயற்கை எய்தினார்! (நீர்,நெருப்பு, புயல் போன்றவற்றால் இறப்பது)
விபத்து மூலம் மரணமடைந்தால்… அகால மரணம் (கார்,பஸ்,விமான விபத்துக்கள்)
கொலை செய்யப்பட்டு செத்தால்…கொலையுண்டார்.
மாரடைப்பினால் மரணமடைந்தால்…மரணமடைந்தார்.
தற்கொலை செய்து கொண்டு இறந்தால்…உயிர் நீத்தார்.
என்ன?…இப்பொழுதெல்லாம் அவசரம் காரணமாகவும், பல வார்த்தைகளின் பயன்பாடு சரியாகத் தெரியாததாலும் அவ்வார்த்தைகளின் பிரயோகம் குறைந்து கொண்டே வருகிறது.
மொழியின் செழுமையைக் காப்பாற்றுபவை, சின்னச் சின்ன வேறுபாடுகளையும் தெளிவாக உணர்த்தும் வார்த்தைகளே! மிகப் பழமையான நம் தமிழ் மொழியில் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன! அள்ளி அவற்றைப் பயன்படுத்த வேண்டியது நாம்தான்!
நாமோ தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து, தங்க்லீஷில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்!