ஆச்சரியங்கள் நிரம்பிய ஆயிரங்கால் மண்டபம் பற்றி தெரியுமா?

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்

டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தின் உள்ளே நாம் நுழைந்த உடன் பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு கலைநயம் மிக்க மண்டபங்களும் சன்னிதிகளும். நடராஜர் கோயிலில் நடராஜர் வீற்றிருப்பது கனகசபை.  அதற்கு அடுத்தபடியாக இக்கோயிலில் போற்றப்படுவது ஆயிரங்கால் மண்டபம்.

ஆயிரங்கால் மண்டபத்தில் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கிறது, என்னென்ன அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது, அங்குள்ள சிறப்புகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதோ இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக, புராண காலத் தொடர்புடைய கோயில்களில் அமைந்துள்ள மண்டபங்கள் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மண்டபத்தில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்துள்ளன. நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் மட்டும் நடைபெறும். அதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகப்பெரும் விழாக்கோலம் காணும்.

ஆனி மாதம் தேவர்களின் பகல் பொழுதின் கடைசிமாதம். இம்மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு சாயரட்சை (மாலைக்காலம்) பூஜை செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவார்கள். அந்த அபிஷேக ஆராதனைகள் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும். இந்த மண்டபத்தை ராஜசபை என்றும் போற்றுவர்.

இந்த மண்டபத்தில்தான் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர், ‘பதஞ்சலி பத்ததி’ என்னும் நூலை இயற்றினார். இந்த நூலில் உள்ளபடிதான் கோயிலில் நித்ய, நைமித்திக பூஜைகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. மேலும், பதஞ்சலி முனிவர், பதஞ்சலி வியாகரண சூத்திரத்தையும் இந்த மண்டபத்திலிருந்துதான் எழுதினார். அதை தம் சீடர்களுக்கு போதித்து அருளியது இங்குதான் என்கிறது புராணம். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதும், பின்னர் நூல் அரங்கேறியதும் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்

இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணை (மாற்றுத்திறன் கொண்ட, பேச இயலாமல் இருந்த பெண்ணை) பதிகம் பாடிப் பேச வைத்தார். அவர் இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடியபோது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பின்னர், திருக்கோவையாகப் பாடச் சொல்லி அதையும் தாமே பிரதி செய்து அருளினார். அத்துடன், மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிற்றம்பலமுடையான் எழுதியது எனக் குறிப்பிட்டு அந்த ஓலையில் கையொப்பம் இட்டார் என்றும் வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
நல்ல செரிமானத்துக்கும் ஆழ்ந்த தூக்கத்துக்கும் இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்

இறைவன் இத்தலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது, ஈசனின் திரு முடியிலிருந்த சந்திரனின் அமிர்தத்தாரைகள் இறைவன் அணிந்திருந்த மண்டையோட்டு மாலையில் விழுந்தன. அதன் விளைவால் அந்த மண்டையோடுகள் உயிர் பெற்றுப் பாடத் தொடங்கின. அதிலிருந்து தான் சங்கீதம் உருவானது என்று சங்கீத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் சங்கீதம் (பாடல்), நடனம் பயின்ற மாணவ- மாணவிகளின் அரங்கேற்றத்தை இந்த மண்டபத்தில் நடத்துகிறார்கள். எனவே, இறைவனை மூலஸ்தானத்தில் தரிசித்து, வழிபடுவதால் கிடைக்கும் அருள்போல், இந்த ஆயிரங்கால் மண்டபத்தையும் தரிசித்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், பக்தியில் சிறந்து விளங்கலாம்.

நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும்போது இந்த ஆயிரங்கால் மண்டபத்தை கண்டு ரசியுங்கள். ஆனால், உள்ளே செல்ல அனுமதி இல்லை. திருவிழா காலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com