
'பீட்டர் பாதுகம்' என்று அழைக்கப்படும் மீனாக்ஷி அம்மனின் காலணிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.
ரௌஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர் மதுரை கலெக்டராக 1812 முதல் 1828 வரை பணி புரிந்தார். அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் வரும்போதெல்லாம் குதிரையை விட்டு இறங்கி தனது காலணிகளை கழட்டி வைத்து விட்டு தான் கோயிலுக்குள் சென்று வருவார்.
ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்தது. பீட்டர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று கால் சலங்கை ஒலி கேட்டு கண் விழித்தார்.
வாசல் கதவை திறந்து பார்த்த போது ஒரு அழகிய சிறுமி நின்று கொண்டிருந்தாள் . பீட்டரை பார்த்து தன் பின்னாடி வருமாறு சைகை காட்டி நடக்க தொடங்கினாள்.
பீட்டர் அச்சிறுமியின் சொல்படி வீட்டை விட்டு வெளியேறி ஒரு நான்கடி எடுத்து வைத்தது தான் தாமதம், வீட்டின் கூரையை ஒரு பயங்கர இடி தாக்கியது . இந்த தாக்குதலில் வீடு சேதம் அடைந்து பற்றி எரிந்தது. கால்களில் சலங்கை மட்டுமே அணிந்திருந்த அந்த சிறுமி பீட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டாள்.
வந்தது தேவி மீனாட்சி தான் என்று பீட்டருக்கு புரிந்து விட்டது. கால்களில் பாத அணி ஏதும் போடாமல் சிறுமி ரூபத்தில் வந்து தன்னை மீனாட்சி அம்மன் காப்பாற்றியதால், அம்மனுக்கு தங்கத்தால் ஆன காலணிகளை பரிசாக அளித்தார் பீட்டர். அவற்றில் பீட்டர் என்ற தன் பெயரையும் பொறித்திருந்தார்.
இன்றும் சித்திரை உற்சவ நாளில் மீனாட்சி அம்மனின் பாதங்களில் இந்த காலணிகள் அணிவிக்கப்படுகிறது. இந்த பாதுகம் 'பீட்டர் பாதுகம்' என்று அழைக்கப்படுகிறது .
பீட்டர் இறந்தவுடன் அவர் விரும்பியபடி அவரது உடல் கோவிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டது!