பொற்கை பாண்டியன் பற்றி தெரியுமா?

Porkai Pandian
Porkai Pandian
Published on

பாண்டிய அரசன் ஒருவன் நீதிநெறி வழுவாது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான். அவரது இயற்பெயர் யாருக்கும் தெரியவில்லை. அவர் ஆட்சியில் களவு, கொலை, கொள்ளை ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக இருந்தனர். 

பாண்டிய மன்னன் தினசரி இரவு நேரங்களில் மக்களின் நிலையை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான். ஒரு நாள் இரவு, பாண்டியன் நகர்வலம் வரும்போது ஒரு வேதியரின் வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது.

அந்த வீடு கீரந்தை என்னும் வேதியரின் வீடு ஆகும். வறியவரான வேதியர் தனது மனைவியிடம் "நான் காசிக்கு சென்று நாம் வாழ்வு வளமுற பொருள் ஈட்டி வருகிறேன். அதுவரை நீ பத்திரமாக இங்கேயே இரு" என்று கூறினான். அதற்கு அவர் மனைவி, "நீங்கள் என்னை தனியே இங்கே விட்டுச் சென்றால், என்னை காப்பாற்றுவது யார்?" என்று வினவினாள். அதற்கு அவன், "நாட்டு மக்களை காப்பது அரசரின் கடமை, ஆதலால் அவரே உன்னையும் காப்பார்" என்று பதிலுரைத்தான் . 

இதை கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்து அரண்மனைக்கு சென்றார். மறுநாள் பாண்டியனுக்கு முந்தைய நாள் இரவில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. பொருள் ஈட்டி வரச் சென்ற கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினான். வழக்கம் போல் பாண்டியன் தினமும் இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்து கீரந்தையின் மனைவிக்கு தீங்கு நேராத வண்ணம் பாதுகாத்தான். 

மாதங்கள் சென்றன. ஒரு நாள் இரவு வேதியர் வீட்டில் ஆண் குரல் கேட்டது. உள்ளே இருப்பவர் யாரென்று அறியும் நோக்கில் அரசர் கதவை தட்டினார். உள்ளிருந்து கீரந்தையின் குரல் கேட்ட அரசன் நள்ளிரவில் கதவை தட்டியதால் வேதியன் தன் மனைவியை சந்தேகப்படக்கூடும் என்று கவலை கொண்டார். உடனடியாக அந்த தெருவில் இருந்த அனைவரது வீட்டு கதவுகளையும் தட்டி விட்டு அரண்மனைக்குச் சென்றார். 

கதவு தட்டும் சப்தம் கேட்டு விழித்த மக்கள், யாரோ திருடன் தங்கள் தெருவில் புகுந்து விட்டதாக கதையாடிக் கொண்டிருந்தனர். விடிந்ததும் அரசரிடம் முறையிட முடிவெடுத்தனர். 

இதையும் படியுங்கள்:
பண்டைய காலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர்களை சூடிக்கொண்டது ஏன்?
Porkai Pandian

மறுநாள், அரசவை சென்ற மக்கள் அரசரிடம் நடந்ததை கூறி கதவை தட்டிய திருடனை கண்டுபிடிக்கக் கூறினர். அதற்கு அரசர் "திருடனை தான் கண்டுபிடிப்பதாக கூறி, "திருடனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்" என்று மக்களிடம் கேட்டார். அதற்கு சிலர் திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று கூறினார். சட்டென எதையும் யோசிக்காத பாண்டிய மன்னன் தன் கையை வெட்டி விட்டான். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கதறினர். உண்மையை கூறிய பாண்டியன் தான் திருட வரவில்லை என்றும் கீரந்தையின் மனைவியை காக்க வந்ததாகவும் கூறினார். அரசனின் நீதியை கண்டு மக்கள் நெகிழ்ந்தாலும் அவரது கை வெட்டப்பட்டதால் வேதனைக் அடைந்தனர். மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கத்தில் ஒரு கையை செய்து அதை பாண்டியனுக்கு பொருத்தினர்.

அதன் பின்னர் நீதிக்கு இலக்கணமாக இருந்த பாண்டிய மன்னன் பொற்கை  பாண்டியன் என்று போற்றப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com