அஜர்பைஜான் நாட்டில் கோய்சே பகுதியில் பல நூற்றாண்டுகளாக மாதுளை பயிரிடப்பட்டு இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி நவம்பர் இரண்டாவது வாரம் வரை புகழ் பெற்ற மாதுளை திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு நேற்று முன் தினம் தேதி துவங்கி, வரும் நவம்பர் 10ம் தேதி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
நேசத்துக்குரிய சின்னம்: அஜர்பைஜானில் கோய்சே (Goychay)வில், நார் பைராமி என்று அழைக்கப்படும் மாதுளை திருவிழா, நாட்டின் மிகவும் நேசத்துக்குரிய சின்னங்களில் ஒன்றின் கலகலப்பான கொண்டாட்டமாகும். இந்தத் திருவிழா நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்களை வெகுவாக ஈர்க்கிறது. பல்வேறு வகையான மாதுளைகள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது நகரத்தை ஒரு துடிப்பான நடவடிக்கை மையமாக மாற்றுகிறது.
மாதுளையின் முக்கியத்துவம்: இந்த வருடாந்திரக் கொண்டாட்டம் அஜர்பைஜான் கலாசாரத்தில் மாதுளையின் ஆழமான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மாதுளம் பழம் உள்ளூர் உணவின் பிரதானம் மட்டுமல்ல, செழிப்பு, அன்பு மற்றும் அபரிமிதத்தின் சின்னமாகவும் உள்ளது. பிரதேசத்தின் தனித்துவமான காலநிலை மற்றும் மண், 60 வகையான மாதுளைகளை வளர்ப்பதற்கான சரியான அமைப்பாக உள்ளது. அவற்றில் பல அஜர்பைஜானில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த திருவிழா சமூகங்களை ஒன்றிணைப்பதிலும், பகிரப்பட்ட பாரம்பரியத்தை கொண்டாடுவதிலும் பழத்தின் பங்கை தெளிவாக நினைவூட்டுகிறது.
கலாசார முக்கியத்துவம்: மாதுளை திருவிழாவில் பெரும்பாலும் பாரம்பரிய இசை நடனம் மற்றும் அஜர்பைஜான் கலாசாரம் மற்றும் நாட்டுப்புற கதைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. பல்வேறு சமூகங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றம் மற்றும் தொடர்புகளை வளர்க்கிறது. அஜர்பைஜான் கலாசாரத்தில் மாதுளை செழிப்பு, கருவுறுதல் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் சின்னமாக இருக்கிறது.
இந்தத் திருவிழாவில் நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உள்ளூர் தாவரங்களை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கின்றன. திருவிழா நடைபெறும் இடங்கள் பெரும்பாலும் மாதுளை வண்ணத்தில் வண்ணமயமான அலங்காரங்களால் துடிப்பான மற்றும் அழகிய சூழலை உருவாக்குகின்றன.
எங்கும் மாதுளை மயம்: இதில் கலந்துகொள்ளும் பெண்கள் மாதுளை வண்ணத்தில் உடைகள் அணிந்து கொண்டிருப்பதைக் காணவே அத்தனை அழகாக இருக்கும். உள்ளூர் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மாதுளையால் தயாரான பழச்சாறுகள், ஜாம்கள் மற்றும் இனிப்புகள் போன்ற பல்வேறு மாதுளை சார்ந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். கைவினைக் கடைகள் பாரம்பரிய கைவினைப் பொருள்களும் இங்கு கிடைக்கின்றன.
போட்டிகள்: குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளும் நடத்தப்படுகின்றன. பலவிதமான மாதுளைகளின் பெயர்களை கண்டுபிடிப்பது மற்றும் வேகமாக மாதுளைகளை தோலுரிப்பது போன்ற போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன.
கலாசார நிகழ்ச்சிகள்: திருவிழா முழுவதும் பார்வையாளர்களுக்கு, சமையல் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள், கதை சொல்லல் ஆகிய கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் மாதுளம் பழங்களை பரிசாக அளித்துக் கொள்கிறார்கள். நண்பர்களுக்கு மாதுளை ஜாம், சிரப் அல்லது மாதுளை சூப், மாதுளை ஒயின் போன்றவற்றை தருகிறார்கள். மாதுளைகளை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, துணிகளுக்கு சாயம் பூசவும் வண்ணம் தீட்டவும், வீட்டிற்கு அலங்காரப் பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
விவசாய முக்கியத்துவம்: உணவுக் கடைகளில் மாதுளம் பழங்களைக் கொண்ட உணவுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும், திருவிழாவில் மாதுளை விவசாய முக்கியத்துவம், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சாகுபடி நடைமுறைகள் அடங்கிய தகவல்களும் கிடைக்கும்.
கலகலப்பான திருவிழா: அறுவடையைக் கொண்டாடுவது மட்டும்தான் இந்தத் திருவிழாவின் நோக்கம் அல்ல. இது சுற்றுலாவையும் ஊக்குவிக்கிறது. இது உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. உள்ளூர் மரபுகள் மற்றும் சமூக உணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இது ஒரு கலகலப்பான திருவிழாவாகும்.