பம்பரம் மனித குலத்தின் பழைமையான விளையாட்டுப் பொருள்களில் ஒன்றாகும். இது பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தொல்பொருள் சான்றுகள்: பழைமையான பம்பரங்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை. ‘நாகரிகத்தின் தொட்டில்‘ என்று குறிப்பிடப்படும் மெசபடோமியா, மனித வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பல குறிப்பிடத்தக்க வரலாற்று, கலாசார மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறது. பழங்கால மெசபடோமியாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடிய பொருட்களை குறித்த ஆய்வு நடந்தபோது பம்பரத்தை பற்றிய வரலாறு தெரிய வந்தது. ஆரம்ப காலத்தில் பம்பரம் மரம், களிமண் மற்றும் கற்களால் செய்யப்பட்டன.
கலாசார மாறுபாடுகள்: எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் உட்பட பல்வேறு பண்டைய நாகரிகங்களை சேர்ந்தவர்கள் பம்பரங்களை உருவாக்கினர். ஒவ்வொரு கலாசாரத்திற்கு ஏற்பவும் பம்பரத்தின் வடிவம் மற்றும் செயல்பாடுகளில் மாறுபாடுகள் இருந்தன. பெரும்பாலும் உள்ளூர் கைவினைத் திறனால் உருவாகி எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இது இருந்தது.
ஜப்பான் பாரம்பரியம்: ஜப்பானில் பம்பரங்கள் கோமா என்று அழைக்கப்படும். இது அளவில் சிறியதாக இருக்கும். அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் சிக்கலான வடிவமைப்புகள் அல்லது மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருவிழாக்களுக்காக சில வகையான ஸ்பெஷல் பம்பரங்கள் உருவாக்கப்பட்டன.
இந்தியா: வட இந்தியாவில் லட்டு, தமிழகத்தில் பம்பரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பொதுவாக மரம் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் இருக்கிறது. பம்பரத்தில் சாட்டை போன்ற நூலைச் சுற்றி பம்பரத்தை சுழல விடுவார்கள். இவை வண்ணமயமானவை. அலங்காரமாக இருக்கும்.
பெரு: பெருவில் ‘டிஜேரா’ எனப்படும் ஒரு வகை மரத்திலிருந்து பம்பரம் தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமான பம்பரத்தை விட பெரியதாக இருக்கும். இது ஒரு நீளமான வடிவத்தை கொண்டுள்ளது. மேலும் சாட்டையைப் போன்ற ஒரு கயிறைப் பயன்படுத்தி சுழற்றப்படுவது. பாரம்பரிய விளையாட்டுகளை ஒன்றாகக் கருதப்படுகிறது.
அளவு மாறுபாடுகள்: பல நாடுகளின் கலாசாரங்களில் சிறிய பம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் எளிதாக கையாளும் வகையில் இலகுவான பொருட்களால் செய்யப்படும். வண்ணமயமாக இருக்கும்.
பெரிய சைஸ் பம்பரங்கள்: சில நாடுகளின் கலாசாரப் பிரதிபலிப்பாக பெரிய வகை பம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் விளையாட்டுக்கள் போட்டிகள், புதிர்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றை சுழற்றுவதற்கு சவுக்கு போன்ற பெரிய கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டமைப்பு மாறுபாடுகள்: பல மேற்கத்திய நாடுகளில் பம்பரம் மரம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, பிரகாசமான வண்ணமயமாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படும். உள்ளூர் வளங்கள் மற்றும் மரபுகளைப் பொறுத்து பம்பரங்கள் உலகம் முழுவதும் மரம், பிளாஸ்டிக் உலோகம் மற்றும் மண்பாண்டங்களில் இருந்து கூட செய்யப்படுகின்றன. சில பம்பரங்கள் கையால் சூழலும் வகையில் வடிவமைக்கப்பட்டன. மற்றவை மோட்டார் பொருத்தப்பட்ட அமைப்பை கொண்டிருக்கும்.
சர்வதேச பம்பர தினம்: பம்பரம் எனப்படும் ஒரு எளிய பொம்மை போன்ற விளையாட்டுப் பொருள் உலகம் முழுவதும் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, அக்டோபர் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை அன்று சர்வதேச பம்பர தினமாகக் கொண்டாடுகிறார்கள்.