ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமான்
ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமான்

ன்மிகத்தில் பல அறிவியலும் அதிசயங்களும் நிரம்பிக் கிடக்கின்றன. அதையெல்லாம் நாம் தேடிச் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? திருவெள்ளறை ஆலயத்தின் நேர் பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. ‘ஸ்வஸ்திக்’ வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதைப் பற்றி இனி காண்போம்.

திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, திருவெள்ளறை திருத்தலம். வெண் பாறைகளால் அமைந்த கோயில் எனப் பொருள்படும் வகையில், ‘திருவெள்ளறை’ என்ற பெயர் வந்துள்ளது. இங்கு புண்டரீகாக்ஷ பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் - புண்டரீகாக்ஷன், தாயார் - செண்பகவல்லி. இது திருவரங்கத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் ‘ஆதி திருவரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் உயரமான மதிலையும், குடைவரை அமைப்பையும், பல்வேறு அழகிய சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தின் நேர்பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. ‘ஸ்வஸ்திக்’ வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தக் கிணறு கி.பி. 800ல், பல்லவ மன்னனான தந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிணறு, ‘மார்பிடுகு கிணறு’ என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. தந்திவர்மனின் பெயர்களில் ஒன்றுதான் இந்த ‘மார்பிடுகு’ என்பதாகும்.

ஸ்வஸ்திக் வடிவ கிணறு
ஸ்வஸ்திக் வடிவ கிணறு

இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கிச் செல்லும் வகையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு புற வாசல்களிலும் உள் பக்கத்தில் குறுக்காக நிலை கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவை மூன்று படிநிலைகளாக காணப்படுகின்றன. கிழக்குப்பக்க வாசலின் முதன் நிலை படியில் நரசிம்மர் சிற்பம் அமைந்துள்ளது. இரண்டாம் படிநிலையில், யானை வாகனத்தோடு ஐயனாரும், பூரணாம்பிகையும் உள்ளனர். மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப் பறவைகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்வஸ்திக் வடிவ கிணறு உள் தோற்றம்
ஸ்வஸ்திக் வடிவ கிணறு உள் தோற்றம்

தெற்குப்புற வாசலின் முதல் நிலைக்காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படி நிலையில் கொற்றவை மற்றும் சிங்கம், மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம்படி நிலையில் விநாயகரின் உருவம் உள்ளது. அவருக்கு இருபக்கமும் அடியவர்கள் உள்ளனர்.

மேற்குப் புற வாசலின் முதல் நிலைக் காலில், கிருஷ்ண பகவானின் லீலைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது அவர் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில், சிவபெருமான் - பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக்காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைபடியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்துவரும் சிற்பம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!
ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமான்

இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஒரு ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அது ஆவுடையார் இன்றி பாணம் மட்டும் உயர்ந்து காணப்படுகிறது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com