பீகாரின் பாரம்பரிய 'சுஜினி எம்பிராய்டரி' பற்றி தெரியுமா?

Sujini embroidery
Sujini embroidery

காலம்காலமாக பீகாரில் செய்யப்படும் இந்த சுஜினி எம்பிராய்டரி இன்று வரை தாய் பாசத்திற்கான அடையாளமாகவே கருதப்படுகிறது. அதனாலையே தங்கள் மூதாதயர்களின் கலையான இந்த சுஜினி எம்பிராய்டரியை இன்றும் பாதுகாத்து வருகின்றனர் பீகார் மக்கள்.

சுஜினி எம்பிராய்டரியின் வரலாற்றைப் பார்த்தால் இது இரண்டு முக்கிய கருத்துகளைப் புதைத்து வைத்திருக்கிறது. அதாவது முதலாவதாக சுஜினி எம்பிராய்டரி பழைய வேட்டி, சேலை துணிகளில் மட்டுமே செய்யப்படும். ஆகையால் பழையதை மறக்காமல் அதனை அழகுப்படுத்தி புதிதாக்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளது.

அதேபோல் இரண்டாவதாக இந்த எம்பிராய்டரியை 18ம் நூற்றாண்டு காலத்தின்போது குழந்தையைப் பெற்ற அம்மாக்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு அழகான எம்பிராய்டரி துணியில் படுக்க வைக்க வேண்டும் என்றுதான் உருவாக்கப்பட்டதாம். படுக்க வைப்பதற்கு மட்டுமல்ல அந்தத் துணியில் தங்கள் குழந்தையைப் பற்றி நினைத்து வைத்த அனைத்து கனவுகளையும் பழைய வேட்டி, சேலை துணிகளில் எம்பிராய்டரி செய்து நியாபக அர்த்தங்களாக குழந்தைகளுக்குக் கொடுப்பார்களாம்.

முன்னதாக பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் தங்கள் குழந்தைகளுக்காக இந்த எம்பிராய்டரியை  செய்வார்கள். ஆனால் காலங்கள் மாற மாற தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மட்டும் இதனை விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது பீகாரில் வெறும் 22 கிராமங்களில் உள்ள 600 பெண்கள் மட்டுமே இந்த சுஜினி எம்பிராய்டரியைச் செய்து வருகின்றனர்.

முன்பெல்லாம் பழைய வேட்டி மற்றும் சேலையில் செய்து வந்தாலும் இப்போது சாலிடா என்ற காட்டன் துணியைப் பயன்படுத்திதான் செய்கிறார்கள்.

இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து செய்தாலும் கூட நேரம் இழுக்கும். மேலும் இந்த கலைக்கு நிச்சயம் பொருமை என்பது மிகவும் முக்கியம். நுணுக்கமாகச் செய்யப்படும் இந்த எம்பிராய்டரியில் இயற்கை வளங்கள், வாழ்க்கை நடைமுறைகள், மலர் வடிவங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திதான் வடிவமைக்கப்படும்.

தற்போது துப்பட்டா, சால்வை, தலையணை கவர், மேலாடை, ஷூட், பைகள் என அனைத்திலும் இந்த எம்பிராய்டரி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
என்னது... ஒரு கைப்பையின் விலை 24 கோடி ரூபாயா?!
Sujini embroidery

கைவினைத்திறன் மற்றும் கலை மதிப்புமிக்கவையாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்த சுஜினி எம்பிராய்டரி, தற்போது கண்காட்சிகளிலும் ஃபேஷன் ஷோக்களிலும் கலாச்சார நிகழ்வுகளிலும் கூட காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆனால் இதனைச் செய்து விற்று இதன்மூலம் மட்டும் பணம் பார்க்கும் கலைஞர்களுக்கு இது போதுமான வருமானமாக இல்லை என்பதே உண்மை. கஷ்டப்பட்டு மிகவும் நுணுக்கமாக செய்யும் இந்த எம்பிராய்டரியை விற்பதற்கான வழி தெரியாமல் கலைஞர்கள் இன்னமும் திண்டாடிதான் வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com