மூன்று மாடிகளைக் கொண்ட கலைநயமிக்க படிக்கிணறு தெரியுமா?

Hadi Rani ki Baori
Hadi Rani ki Baori
Published on

மிழ்நாட்டில் உள்ள கிணறுகள் பொதுவாக வட்ட வடிவத்தில் காணப்படும். கிணற்றில் இறங்கி உள்ளே செல்லுவதற்காக பத்து அல்லது பதினைந்து படிக்கட்டுகள் போன்ற கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள படிக்கிணறுகள் பிரம்மாண்டமானவை. கலைநயம் மிக்கவை. இந்தியாவில் இத்தகைய படிக்கிணறுகள் கட்டும் வழக்கம் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கலைநயமிக்க இத்தகைய படிக்கிணறுகள் பாவோரி அல்லது பாவோலி (Baori or Baoli) என்று அழைக்கப்படுகின்றன. சில இடங்களில் இவற்றை வாவ் (Vav) என்றும் அழைக்கிறார்கள்.

இயற்கையாகவே வறண்ட மாநிலமான இராஜஸ்தானில் கோடை காலத்தில் நீர் மட்டம் மிகவும் வெகுவாக கீழே இறங்கி விடும். இதனால் தண்ணீருக்காக மக்கள் தவிப்பது வழக்கம். இந்த பிரச்னையை சமாளிக்க அக்காலத்தில் பிரம்மாண்டமான படிக்கிணறுகள் இராஜஸ்தான் மாநிலமெங்கும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மழை நீரானது பக்கவாட்டிலிருந்தும் அடிப்பகுதியிலிருந்தும் இக்கிணறுகளில் முடிந்த மட்டும் சேமிக்கப்பட்டது.

தொடக்கத்தில் சாதாரணமாக தோண்டப்பட்ட இந்தப் படிக்கிணறுகள் நாளடைவில் கோயில்களுக்கு இணையாக கலைநயமிக்க வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. கிணற்றுக்குள் அமைக்கப்பட்ட பாதுகாப்பான படிக்கட்டுகளில் இறங்கி மக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தினர்.

Chand Baori
Chand Baori

இராஜஸ்தான் மாநிலமெங்கும் கிராமங்களிலும், கோட்டைகளிலும், அரண்மனை வளாகத்திலும் இத்தகைய படிக்கிணறுகள் அமைக்கப்பட்டன. கோடை கால வெயிலை சமாளிக்கவும் இத்தகைய படிக்கிணறுகள் பயன்பட்டன. படிக்கிணறுகளின் அடிப்பகுதியின் வெப்பநிலையானது பூமியின் மேற்பகுதி வெப்பத்தைவிட 10 டிகிரி அளவிற்கு குறைவாக இருக்கும். இதனால் படிக்கிணறுகளின் உள்பகுதியானது வெளிப்பகுதியை விட குளிர்ச்சியாகக் காணப்படும்.

Panna Meena ka Kund
Panna Meena ka Kund

ஜெய்ப்பூரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அபனேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள, ‘சந்த் பௌரி (Chand Baori) படிக்கிணறு’ மிகவும் பிரபலமானது. இப்படிக்கிணறு 3500 படிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
‘குத்து மனே’, ‘பறம்பு’ என்பவை என்ன?
Hadi Rani ki Baori

அமர் கோட்டையில் அமைந்துள்ள, ‘பன்னா மீனா கா குண்ட்’, ஜெய்ப்பூரிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட படிக்கிணறான, ‘ஹாடி ராணி கி பாவோரி’, பூண்டி நகரில் அமைந்துள்ள, ‘ராணிஜி கி பௌரி’ படிக்கிணறு முதலானவை மிகவும் அதிகஅளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலைநயமிக்க கிணறுகளாகும்.

Durji Ka Jalra
Durji Ka Jalra

ராஜஸ்தானில் ஹிண்டான் நகரில் அமைக்கப்பட்டுள்ள, ‘ஜச்சா கி பௌரி’ படிக்கிணறு இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய படிக்கிணறுகளில் ஒன்றாகும். இதேபோல ஜோத்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, ‘தூர்ஜி கா ஜால்ரா’ படிக்கிணறு பிரபலமானது மட்டுமல்ல, மிகவும் பழைமையானதும் கூட. இராஜஸ்தான் மாநிலம் மட்டுமின்றி, குஜராத் மாநிலத்திலும் இத்தகைய படிக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com