தயிர் - உலகிற்கு அறிமுகமானது எப்படி தெரியுமா?

தயிர் - உலகிற்கு அறிமுகமானது எப்படி தெரியுமா?

யிருக்கு பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை அதிகம் அவர்களது உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். அதனால்தான் தென்னிந்திய உணவுகளில் தயிர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இன்றளவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுகளில் தயிரும் ஒன்றாக உள்ளது. நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வரும் பால் சார்ந்த பொருட்களில் மிக முக்கியமானது தயிர்.

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறக் காரணம், அது செரிமானப் பாதையில் உள்ள சிறு சிறாய்ப்புகளையும், புண்களையும் ஆற்றும் என்பதால்தான். இதிலுள்ள புரோபயடிக் நுண்ணுயிர்கள் வயிறு, குடல் சார்ந்த உபாதைகளை சீராக்குகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துவதோடு, உடலையும் குளிர்ச்சிப்படுத்தும்.

தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைகளுக்கு தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரோபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிகவும் நல்லது. அது குழந்தைகளுக்கு அலர்ஜி வராமல் தடுக்கும். மாறும் பருவத்திலும் தயிர் உடலுக்கு சாதகமான உணவாக இருக்கிறது.

தயிரின் குளிர்ச்சித் தன்மை கோடையில் வியர்க்குரு பிரச்னையில் இருந்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு தயிரை ஒரு மணி நேரம் உடல் சருமத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.

தினமும் இரண்டு ஸ்பூன் தயிர் சாப்பிடுகிறவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயின் தாக்கம் 5 சதவீதம் குறைவதாக ஹார்வர்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறார்கள். காரணம், அதிலுள்ள புரோபயடிக்தான் என்கிறார்கள்.

அதிகளவு நார்ச்சத்து உணவுகளையும், தயிரையும் தவறாமல் சாப்பிடுகிறவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து குறைவு என்பதை வான்டர்பில்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் இரண்டு கப் தயிரை உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் உடலிலுள்ள கொழுப்பு கரையும் என்கிறார்கள் டென்னிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். தயிர் பயன்படுத்துவதன் மூலம், அதிகரிக்கும் வாயுக்கள் மற்றும் வீக்கம் 80 சதவீதம் குறைவாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உங்களின் தொப்பை குறைய உதவுகிறது.

தினமும் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் இதய நோய் பாதிப்புகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் முதியோர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள், குழந்தைகள் போன்றோரும் இரத்த அழுத்தப் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் உயர் இரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயிர் மற்றும் தயிர் சாதம் சாப்பிட வேண்டும். இது இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்கும்.

வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் வேண்டும் என்றால், உணவில் தினமும் தயிரை சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த தயிர் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

தயிர் ஜீரணிக்க எளிதானது. பால் தயிராக உறையும்போது அதில் உள்ள லாக்டோஸ் உடைக்கப்படுவதால் லாக்டோஸ் உண்டால் அலர்ஜி அல்லது பாதிப்பு ஏற்படுபவர்களும் தயிரை உட்கொள்ளலாம்.

சரி, இத்தனை அற்புத குணங்களைக் கொண்ட தயிர் உலகிற்கு எப்படி அறிமுகமானது?

12ம் நூற்றாண்டில் மங்கோலியாவை ஆண்ட செங்கிஸ்கான் படையெடுப்புகளின் மூலம் பல நாடுகளைக் கைப்பற்றினான். அப்படி ஒரு முறை படையெடுப்பிற்கு செல்லும்போது பாலைவனத்திலுள்ள ஒரு கிராமத்தில் தங்கினான். அவன் அங்கிருந்து புறப்படும்போது அந்தக் கிராம மக்கள் அவனது படை வீரர்களுக்கு பயண உணவாக, பாலை தோல் பைகளில் அடைத்து கொடுத்து அனுப்பினார்கள். பால் தோலில் இருந்தால் அது விஷமாகிவிடும். அதை சாப்பிடும் படை வீரர்கள் இறந்து போவார்கள் என்பது அந்த கிராம மக்களின் எண்ணம். ஆனால், பாலைவன பகுதியில் நிலவிய மிதமான வெப்பநிலையால் பால் தயிராக மாறியது. அதனால், உலகிற்கு ஒரு சிறந்த உணவு கிடைத்தது என்கிறார்கள் சில உணவியல் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com