பொங்காலை திருவிழா தெரியுமா?

பொங்காலை திருவிழா தெரியுமா?
Published on

கேரளம் மாநிலம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெறும் திருவிழாவுக்கு, 'ஆற்றுக்கால் பொங்காலை' என்றும் பெயர் உண்டு. பல மாநிலங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்தத் திருவிழாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். ஆற்றின் கரையில் தங்கிவிட்டபடியால் இந்த பகவதிக்கு, ‘ஆற்றுக்கால் பகவதி' என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த அம்மனுக்குப் பொங்கலிட வருபவர்கள் முதல் நாளே கோயிலருகில் வந்து வரிசையாக இடம்பிடிக்கின்றனர். முதலில் வருபவர்களுக்கே முதலிடம் என்கிற மாதிரி அரிசி, வெல்லம், தேங்காய், அடுப்பு அமைக்க கற்கள், விறகு சகிதம் வந்து இடம்பிடிக்கிறார்கள். 'பாளையம்' என்கிற ஊர் வரை ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த விசேஷத்தின்போது பெண்களின் கூட்டம் அணிவகுக்கும். ஆண்களுக்கு இந்த இடத்தில் வேலை இல்லை. இது பெண்களின் திருவிழா. இந்தத் திருவிழாவுக்கு வருடா வருடம் நிரந்தரமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் கூட்டமும் உண்டு.

பொங்காலை திருவிழாவில் முதலில் ஏற்றப்படும் அடுப்பின் பெயர், 'பங்காரை அடுப்பு'. கோயிலின் உள்ளே உள்ள விளக்கிலிருந்து ஓலையைக் கொளுத்தி எடுத்து வந்து முதல் அடுப்பை ஏற்றுவர். இதுவே வரிசையாக எல்லோரின் அடுப்புக்கும் அனுப்பப்படும். பகவதி அம்மனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்கள் நான்கு வகைப்படும்.

1. வெள்ளைச் சாதம் என்பதுதான் மகா நைவேத்தியம்.

2. சர்க்கரைப் பொங்கல் - அரிசி, பருப்பு வெல்லம், ஏலக்காய் சேர்த்துச் சமைப்பது.

3. மண்டகப் புட்டு என்பது பாசிப்பருப்பை வறுத்துப் பொடி செய்து அச்சு வெல்லம், தேங்காய் போட்டு ஏலப்பொடி சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுப்பது.

4. திரளி என்பது அரிசி மாவை இடித்து லேசாக வறுத்து, வாழைப்பழம், வெல்லம், தேங்காய் சேர்த்து, தண்ணீர் இல்லாமலே பிசைந்து (நெகிழ்ச்சியாக இருக்கும்) திரளி இலையில் சுற்றி ஆவியில் வேகவைத்து எடுப்பர். (இந்தத் திரளி மரம் திருவனந்தபுரத்தில் அநேகமாக எல்லோர் வீடுகளிலும் காணப்படுகிறது.)

ஆறு மணிக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்காலை நைவேத்தியம் முடிந்த பிறகு ஆண்கள் உள்ளே வரலாம். ஆறு மணிக்குப் பிறகுதான் கோயிலுள், 'தாளப்புலி' உத்ஸவம் நடைபெறும். அப்போது சிறு பெண்கள் தலையில் கிரீடம், புதுப்பாவாடை எல்லாம் அணிந்துகொண்டு பெரிய தட்டில் விளக்கு, பூ எல்லாம் எடுத்துக்கொண்டு கோயிலைச் சுற்றி வருவார்கள்.

‘குத்தி ஓட்டம்' என்பது சிறுவர்களுக்காக நடப்பது. பிரார்த்தனை செய்துகொண்ட சிறு ஆண் பிள்ளைகள் ஏழு நாள் கோயிலிலேயே விரதம் இருந்து பொங்காலை விசேஷம் முடியும் தறுவாயில் பகவதி அம்மன் வெளியில் வரும்போது (மக்கள் தரிசனத்துக்காக) சூலத்தைக் குத்திக்கொண்டு பகவதியைச் சுற்றி ஓடுவர். மொத்தத்தில், பொங்காலை உத்ஸவத்தில் திருப்தி அடைந்த பகவதியம்மன் அனைவரது பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைப்பது திண்ணம்!

அந்த நாட்களில் வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மட்டுமே பகவதி அம்மனுக்குப் பொங்கலிட்டு கும்பிட்டு வந்தனர். நாளடைவில் இந்தப் பொங்கல் படைக்கும் திருவிழா பிரபலம் அடைந்து உலகிலேயே இது மாதிரி பொங்கல் திருவிழா வேறு எங்குமே சிறப்பாக நடைபெறுவதில்லை என்ற அளவுக்கு வளர்ந்து கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறும் அளவு புகழும் பெற்றுவிட்டது.

பகவதியின் அழகோ பார்க்கப் பார்க்கப் பரவசம். ஆயிரம் கண்கள் போதாது! கையில் கிளியுடன், மலர்பாத்தியில் பல வண்ண விளக்குகளின் நடுவில், தகதகவென தங்க வண்ணத்தில் வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருபவளாய்க் காட்சியளிப்பாள். அப்படியே அள்ளி எடுத்து, இடுப்பில் வைத்து, நம் இருப்பிடம் வந்து விட வேண்டும் என்று துடிக்க வைப்பவளாய் ஜொலித்துக்கொண்டிருப்பாள்.

அன்னை சன்னிதியின் நடை முழுவதும் விளக்குகள் ஒளி சிந்திக்கொண்டேயிருக்கும். வண்ண விளக்குகளின் ஒளியில் பகவதி அம்மன் இன்னும் அழகாக ஜொலிப்பாள்.

தொகுப்பு: லலிதா வெங்கட்ரமணன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com