நம் பாரத நாட்டில் அலிப்பூரிலும் பம்பாயிலும் ஹைதராபாத்திலுமாக மூன்று நாணய தயாரிப்புச்சாலைகள் உள்ளன. 1824ல் ஹாகின்ஸ் என்பவரால் பம்பாயில் உள்ள நாணய தயாரிப்புச்சாலை தொடங்கப்பட்டது. 1829ல் அலிப்பூர் நாணயச்சாலையும் 1903ல் ஹைதராபாத் நாணயச்சாலையும் உருவாக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்ததும் 1950ல் ஹைதராபாத் நிஜாமிடம் இருந்து அந்த நாணயச்சாலையை இந்தியா ஏற்றுக்கொண்டது. 1640ல் சென்னையில் தங்கசாலை என்ற ஒரு நாணய தயாரிப்புச்சாலை தொடங்கப்பட்டது. ஆனால், அது சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டுவிட்டது.
ஒரு ரூபாயிலிருந்து பத்து பைசா வரையில் உள்ள நாணயங்களை பம்பாயிலும் அலிப்பூரிலும் தயாரித்தார்கள். ஐந்து காசு முதல் ஒரு காசு வரை ஹைதராபாத்தில் தயாரித்தார்கள். இப்பொழுது இந்த சிறு நாணய தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது நாணயத் தயாரிப்பு ஆலைகள் மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் இருக்கிறது. இதைத் தவிர இங்கு அரசாங்கம் பரிசாக அளிக்கும் பதக்கங்களையும் தயாரித்து வருகிறார்கள். மற்றும் நேபால், பூட்டான் ஆகிய நாடுகளின் நாணயங்களும் இங்கு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. பம்பாய் நாணயத் தயாரிப்பு ஆலைக்கு 1970ல் கிரீஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாணயங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்த பெருமையும் உண்டு.
சிறப்பு நிகழ்வுகள் அல்லது நபர்களின் நினைவாக பல சிறப்பு நாணயங்கள் அச்சிடப்பட்டன. அவை நினைவு நாணயங்களைத் தயாரிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 1964ம் ஆண்டில் முதல் நினைவு நாணயமாக நேருவின் மார்பளவு உருவத்துடன் ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், ராஜீவ் காந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்தர், சித்தரஞ்சன் தாஸ், சத்ரபதி சிவாஜி, பகத்சிங், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பல தலைவர் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வட்ட வடிவில் 44 மில்லி மீட்டர் சுற்றளவும், 35 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 200 எண்ணிக்கை தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாணயங்களில் நாலு வகையான உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது வெள்ளி 50 சதவீதமும் தாமிரம் 40 சதவீதமும் நிக்கல் மற்றும் துத்தநாகும் தலா 5 சதவீதமும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தின் முகப்பு பக்கத்தில் அசோக சக்கரம், சிங்கம், இந்தியா ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு என ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1924 - 2024 என ஆண்டும் கருணாநிதியின் கையெழுத்திலேயே, ‘தமிழ் வெல்லும்’ என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டுள்ளது.