அசுரன் இரண்யகசிபு, தனது ராஜ்ஜியத்தில் உள்ள அனைவரும் தன்னை மட்டுமே போற்றித் துதிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன். இவனது மகன் பிரகலாதனோ தீவிர விஷ்ணு பக்தனாய் இருந்தான். இதனால் ஆத்திரம் கொண்ட இரண்யகசிபு தனது மகனை அழிக்கும் பொருட்டு ஒரு முறை மிகப்பெரிய அக்னியை உருவாக்கி, தனது தங்கை ஹோலிகாவை தனது மகன் பிரகலாதனுடன் அதில் நுழையச் சொன்னார். முன்னதாக ஹோலிகா, ‘தன்னை நெருப்பு தீண்டக்கூடாது’ என்ற வரத்தினைப் பெற்றிருந்தாள். ஆனால், ஹோலிகா அறியாத ஒன்று, இந்த வரம் அவர் தனியாக நெருப்பினுள் சென்றால் மட்டுமே செயல்படும் என்பது.
அதன் விளைவு பிரகலாதனை மடியில் வைத்துக்கொண்டு நெருப்பில் இறங்கிய ஹோலிகா தீக்கிரையானாள். வழக்கமாக நாராயணனின் நாமத்தை உச்சரித்தபடியே இருந்த பிரகலாதனை அந்த நெருப்பு ஒன்றுமே செய்யவில்லை. இதன் மூலம் தீமை அழிக்கப்பட்டு, நன்மை நிலைநாட்டப்பட்டது. இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் தனது மாமன் கம்சனை வதம் செய்த கதையும் நாம் அறிந்ததே. மாமன் கம்சன் ஒரு சமயம் பாலகனான கிருஷ்ணரை கொல்லும் எண்ணத்தில் பூதனை என்னும் அரக்கியை பால் கொடுக்கப் பணிக்கிறார். இந்த பூதனை அழகிய பெண் உருவம் எடுத்து குழந்தை கிருஷ்ணருக்கு பால் கொடுக்க, அந்த சின்னஞ்சிறு பாலகனோ பாலோடு சேர்த்து அவளது உதிரம் வரை உறிஞ்சி எடுத்தது மட்டுமல்லாமல், பூதனையையும் கொன்று விடுகிறான். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு விழா வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை. சாதாரண திருவிழா என்றாலே ஆவலுடன் சந்தோஷமாக ஆடல் பாடலுடன் கொண்டாடி வரும் வேளையில் வண்ணங்களின் இந்தத் திருவிழா இன்னமும் சிறப்பான முறையில் பெரும் ஆரவாரத்துடன் அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
வண்ணங்கள் என்றுமே அழகுதான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும். இந்த ஹோலி பண்டிகை இந்தியாவில் பண்டைய காலத்தில், ‘ஹோலிகா’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்த ஒரு திருவிழா. இந்தத் திருவிழா இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக வங்காளம் மற்றும் ஒரிசாவில் ஹோலி பூர்ணிமா ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது.