திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?
Published on

திண்டுக்கல்லில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோட்டை வரலாற்றுப் பெருமைமிக்க நினைவுச் சின்னமாக விளங்குகிறது. இந்தக் கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605ம் ஆண்டு கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி. 1659ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோட்டையின் பெருமை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு காலத்தில் ஹைதர் அலி தனது மனைவியையும், மகன் திப்பு சுல்தானையும் ஆங்கிலேயரிடம் இருந்து பாதுகாக்க இங்குதான் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.

இந்தக் கோட்டை தலையணை திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோயில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோயிலுக்குச் செல்ல படிகள் உருவாக்கப்பட்டன. பின்னர் நடந்த முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் கோயில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில்தான் தற்போது அபிராமி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ. சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சி தருகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?
திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இந்தக் கோட்டையில் வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது.  இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், இவர்கள் அவசரக் காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாவற்றுக்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கிறது. ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. திண்டுக்கல் செல்பவர்கள் அவசியம் இந்த மலைக்கோட்டைக்குச் சென்று அதன் அழகை ரசித்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com