நம் பாரம்பரியக் கலையான கரகாட்டத்தின் வரலாறு தெரியுமா?

கரகாட்டம்
கரகாட்டம்
Published on

மிழ்நாட்டின் தலைசிறந்த நாட்டுப்புற நடனங்களுள் கரகாட்டமும் ஒன்று. மண், செம்பு, பித்தளை போன்றவற்றால் வாய்ப்புறம் குவிந்தும், அடிப்புறம் பெருத்தும் காணப்படும் குடமே, ‘கரகம்’ எனப்படும். நீர், அரிசி, மணல் போன்றவற்றால் நிரப்பப்பட்டு வாய்ப்புறத்தை மூடி அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல், நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.

தொன்மையான இந்தக் கரகாட்டக் கலையைக் குறித்துப் பல கதைகளும், நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன. இக்கலை மாரியம்மனின் வழிபாட்டுக் கலையாக இருந்து வருகிறது. இத்தகைய தொன்மை மிக்க இக்கலை தற்காலத்தில் பாமர மக்களின் ஆட்டக்கலையாக மாறியது. மாரியம்மன் எனப்படும் பெண் தெய்வத்திற்கான வழிபாட்டில் கரகமெடுத்தல் என்னும் சடங்கு நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

தூய்மையான மண் கலத்தில் மஞ்சள் நீர், பால், அரிசி போன்ற பொருட்களை நிரப்பி வேப்பிலை, மாவிலை முதலிய தழைகளைச் செருகி அதன் வாய்ப் பகுதியில் ஒரு தேங்காயைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து இக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுவர். கரகக் குடத்தில் நிரப்பப்படும் பொருட்கள் அவரவர்களின் வேண்டுதலையொட்டி அமையும்.

புனிதப் பொருட்கள் நிரப்புதல் என்ற செயலால் அம்மனே குடத்தில் வந்து பொருந்தி இருப்பதாக பாவித்துக் கொண்டு, அதனைத் தலையில் சுமந்து சென்று வழிபடுதல் என்னும் தெய்வச் சடங்கே கரகமெடுத்தல் என்றழைக்கப்படுகிறது. பூங்கரகம் எடுப்பதாக வேண்டிக்கொண்டவர்கள் புதிய மண் குடத்தின் மேல் சுண்ணாம்பு நீராலும், செம்மண்ணாலும் அழகான கோலங்கள் வரைந்து அதில் மஞ்சள் நீர் ஊற்றிப் பானையைச் சுற்றிப் பல நிறப் பூக்களால் அலங்கரித்து, அக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுதல் பூங்கரகம் எடுத்தல் எனப்படும்.

கரக முறைகள்:

சக்திக் கரகம்: கோயில் திருவிழாவின்பொழுது, பூசாரி கரகத்தை அலங்கரித்துத் தனது தலையில் சுமந்து வருதல் சக்திக் கரகம் எனப்படும். பூசாரி கரகத்தைச் சுமந்து கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடி வருவார்.

இதையும் படியுங்கள்:
சளி, காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் பச்சிலை மூலிகை ஆவி!
கரகாட்டம்

ஆட்டக் கரகம்: நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு செம்புக் கரகத்தைத் தலையில் வைத்துக் கைகளால் குடத்தைப் பிடிக்காமல் நையாண்டி மேள இசைக்கு ஏற்ப உடலை வளைத்தும், குனிந்தும், நிமிர்ந்தும் ஓடியும் நடைபோட்டும் ஆடுகையில், தலையிலுள்ள கரகம் கீழே சாய்ந்து விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது.

கரகத்தை அமைக்கும் முறை: கரகத்தின் அடிப்பாகத்தைச் சமனாகத் தட்டி அரிசி அல்லது மணலைக் கரகச் செம்பில் நிரப்புகின்றனர். கரகத்தின் மேற்புறம் தேங்காய் செருகி வைப்பது போல, கட்டையைச் செருகி வைப்பர். செம்பையும், கட்டையையும் நன்றாகப் பிணைத்துக் கட்டுவர். கட்டையின் மேல் சிறு துளையிட்டு மூங்கிலைச் செருகி அதன் மேல் ஒரு கிளி பொம்மையைச் செருகி இருப்பர். கரகத்தைத் தலையில் சுமந்து சுழன்று ஆடும்பொழுது கிளி பறப்பது போல அழகாக இருக்கும். கரகத்தின் மேல் பொருத்தப்பட்ட மரக்கட்டையைச் சுற்றிப் பல வண்ண வண்ணக் காகிதப் பூக்களும், மணிகளும் கொண்டு அலங்கார வேலை செய்யப்பட்டிருக்கும். கரகச் செம்பின் வாய்ப் புறத்தில் பொருத்தப்பட்ட கட்டையின் கூர் முனையில் ‘பேரிங்கு’ எனப்படும் சுழலும் இயந்திரத்தைப் பொருத்தி, அவர்கள் சுழலும்போது கிளி நன்றாகச் சுழலும்படி அமைத்து ஆடுகின்றனர். கரகச் செம்பின் மேல் கண்ணாடிகளாலும், மரப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட கரகக் கூடுகள் பொருத்தப்பட்டு கரகச் செம்பு அழகுடைய பொருளாக மாற்றப்படுகிறது.

இசைக்கருவிகள்: கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளத்தில் இரு நாகசுரம், இரு தவில்களும் முதன்மை இசைக்கருவியாகவும், பம்பை, உறுமி, கிடுகிட்டி, கோந்தளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் பயன்படுகின்றன. இப்பக்க இசையில் நாகசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. தொன்மைமிகு குடக்கூத்து இன்று கரகாட்டமாக ஆடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com