ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

sunday holiday
sunday holidayhttps://navbharattimes.indiatimes.com

ஞாயிற்றுக்கிழமை என்றதுமே பலரும் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். ஏனென்றால் அன்றுதானே விடுமுறை. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பத்திரிகைகள் என வாரம் முழுவதும் உழைப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் விடுமுறை. அதனால்தான், ‘கிழமைகளின் கிங்’ என்று கூட ஞாயிற்றுக்கிழமையைச் சொல்லலாம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா? ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபோது இந்தியாவில் பெரும்பாலும் வாரச் சம்பள அடிப்படையிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வாரம் வாரம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு செல்வார்கள். அப்பொழுது எல்லாம் மக்கள் சம்பளம் பெற்றுவிட்டார்கள் என்றால் அடுத்த நாள் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக ஓய்வெடுப்பார்கள்.

இந்நிலையில், ஆங்கிலேயர்கள்தான் மாத சம்பள முறையை அறிமுகப்படுத்தினார்கள். இந்த முறை வந்தபோது தொடர்ந்து ஒரு மாதம் பணியாற்றிய பின்புதான் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடை முறை வந்தபோது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மக்கள் எல்லாம் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றினர். மாதம் ஒரு முறை மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தினரோடு செலவிடத் துவங்கினர். இது அவர்களின் உடலுக்கும் மனதிற்கும் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. மாதம் ஒரு நாள் ஓய்வு என்பது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

இந்நிலையில், 1881ம் ஆண்டு நாராயண் மேகாஜி லோகண்டேஜி என்பவர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் தொழிலாளர்களை பணியாற்றச் சொல்வது கொடுமை. அதனால் வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால், ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது.

அதன் பின் இதற்காக 1881ம் ஆண்டு முதல் நாராயண் அதற்காக போராட்டத்தை முன்னெடுக்கத் துவங்கினர். தொழிலாளர்களுக்கு வார விடுமுறை தேவை எனக்கூறி வாரம் ஒருநாள் சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வரக் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

அதன் பின்னர் 1889ம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவித்தது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் வார விடுமுறை தினமாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றுதான் அத்தியாவசிய தேவை இல்லாத மற்ற துறைகள் எல்லாம் விடுமுறையில் இருக்கத் துவங்கின.

இதையும் படியுங்கள்:
உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!
sunday holiday

வார விடுமுறை என்பது சரிதான், அது ஏன் ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டது தெரியுமா? அதற்குப் பின்னாலும் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்போதுதான் இது கொண்டுவரப்பட்டது. அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவிக்க முடிவெடுத்தனர்.

அதற்கு முக்கியமான காரணம் ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் மதத்தின் முக்கிய நாளாக ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் குடும்பத்துடன் சர்ச்சிற்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இப்படித்தான் ஞாயிறு விடுமுறை என்பது வந்தது. இந்த முறை வந்தபோதே தொழிலாளர்களுக்கு 30 நிமிட கட்டாய உணவு இடைவெளி விட வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டது. அதனால் மக்கள் நிம்மதியாகக் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர். பிரிட்டிஷ் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி சம்பள தினமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com